Last Updated : 14 Sep, 2019 01:49 PM

 

Published : 14 Sep 2019 01:49 PM
Last Updated : 14 Sep 2019 01:49 PM

இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்மித்: ஜோப்ரா ஆர்ச்சர் அபாரம் : முதல் இன்னிங்கில் ஆஸி. 225 ரன்களுக்கு ஆல்அவுட்

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஸ்மித் : படம் உதவி ட்விட்டர்

லண்டன்,

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த முறையும் ஆபத்பாந்தவனாக வந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்கள் சேர்த்தார். டெஸ்ட் அரங்கில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சாதனையையும் ஸ்மித் முறியடித்தார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி தனது வேகப்பந்துவீச்சால் கலக்கி வரும் ஜோப்ரா ஆர்ச்சர், 2-வது முறையாக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆர்ச்சர் வீழ்த்தினார். இதற்கு முன் லீட்ஸ் டெஸ்டில் 45 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆர்ச்சர் சாய்த்திருந்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து ஆஸ்திரேலிய அணி தவித்த போது, ஸ்மித், லாபுசாங்கே கூட்டணி அணியைச் சரிவில் இருந்து மீட்டது. இவர்கள் இருவரைத் தவிர அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை.

5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற துடிப்பும், ஆவேசமும் இங்கிலாந்து வீரர்களின் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தெரிகிறது. அதேசமயம், வெற்றி வேண்டாம், டிரா செய்தாலே ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குப்பின் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து மண்ணில் வென்ற பெருமையை பெறலாம் என்ற உற்சாகத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 69 ரன்கள் முன்னிலையிலுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணி நேர்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ரோரி பர்ன்ஸ் 4 ரன்னிலும், ஜோ டென்லி ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதில் டென்லிக்கு வந்த கேட்சை ஹாரிஸ் கோட்டைவிட்டார் இல்லாவிட்டால் ஒருவிக்கெட்டை இங்கிலாந்து நேற்று மாலை இழந்திருக்கும்.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்திருந்தது. பட்லர் 64 ரன்கலிலும், லீச் 10 ரன்களிலும் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பட்லர் 70 ரன்கள் சேர்த்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமழந்தார். அடுத்த வந்த ஸ்டூவர்ட் பிராட், லீச்சுடன் தொடர்ந்தார். 20 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் வேகப்பந்தில் க்ளீன் போல்டாகினார் லீச் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 87.1 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் மார்ஷ் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வார்னர் ஏமாற்றம்

அடுத்து முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கியது. வார்னர், ஹாரிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்த முறையும் வார்னர், ஹாரிஸ் ஏமாற்றம் அளித்தனர்.

ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பந்தை கட் செய்ய முயன்ற வார்னர் 5 ரன்னில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிதுநேரத்தில் ஆர்ச்சர் வீசிய 6-வது ஓவரில் ஹாரிஸ் 3 ரன்கள் சேர்த்த நிலையில், 2-வதுஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு லாபுசாங்கே, ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த ஸ்மித் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாகவே திகழ்ந்தார். அவரை ஆட்டமிழக்கச் செய்ய் பலமுறை முயன்றும் முடியவி்ல்லை.

48 ரன்கள் சேர்த்த நிலையில் லாபுசாங்கே கால்காப்பில் வாங்கி, ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 69 ரன்கள் சேர்த்தனர். லாபுசாங்கே ஆட்டமிழந்தபின் வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருவரும் சொல்லிக்கொள்ளும் வகையில் நிலைத்து பேட் செய்யவில்லை.

ஸ்மித்துடன் மேத்யு வாட் சேர்ந்தார் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. மேத்யு வாட்(19) ரன்னில் சாம் கரண் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஸ்மித் 91 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஸ்மித் சாதனை

இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து அதிகமான அரைசதம் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை ஸ்மித் செய்து, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சாதனையை முறியடித்தார். இன்சமாம் உல் ஹக் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து 9 அரைசதங்கள் அடித்து சாதனை செய்திருந்தார். ஆனால், ஸ்மித் தொடர்ந்து 10-வது அரைசதத்தை பதிவு செய்து இன்சமாம் சாதனை முறியடித்தார்.

ஸ்மித் 66 ரன்கள் சேர்த்திருந்த போது, அவரை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ரூட் நழுவவிட்டார்.

ஆர்ச்சர், கரண் அபாரம்

அடுத்து வந்த மார்ஷ்(17) ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சிலும், பெய்ன்(1), கம்மின்ஸ்(0) ஆகியோர் சாம் கரண் வேகத்திலும் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஸ்மித் 145 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து வோக்ஸ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியன் திரும்பினார். கடைசிநேரத்தில் போராடிய பீட்டர் சிடில் 18, லயான் 25 ஆகியோரை ஆர்ச்சர் வெளியேற்றினார்.

68.5 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளையும், சாம் கரண் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போத்திராஜ்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x