Published : 31 Jul 2015 05:51 PM
Last Updated : 31 Jul 2015 05:51 PM
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சில் 265 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2-ம் நாளான நேற்று 168/7 என்று முடித்த ஆஸ்திரேலியா இன்று மேலும் 97 ரன்களை எடுத்தது, குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் 108 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக மொயீன் அலியிடம் வீழ்ந்தார்.
விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் 59 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஃபின்னின் 6-வது விக்கெட்டாக வெளியேறினார். 21 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் ஸ்டீவ் பின் 79 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கடைசியில் மிட்செல் ஸ்டார்க்கை ஏதோ பெரிய பேட்ஸ்மென் என்பது போல் கருதி பீல்டை பரவலாக்கி இங்கிலாந்து கேப்டன் குக் கேப்டன்சியில் தவறிழைத்தார். இதனால் ஜோஷ் ஹேசில்வுட், மற்றும் நேதன் லயனை மட்டுமே நெருக்கினார். இது ஸ்டார்க்குக்கு பலன் அளித்தது.
ஜான்சன் ஆட்டமிழந்த பிறகு நெவில், ஸ்டார்க் கூட்டணி 64 மதிப்புள்ள ரன்களை 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இதுதான் முன்னிலையை 100 ரன்களுக்கும் அதிகமாகக் கொண்டு சென்றது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 103 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து, இந்த உயிருள்ள பிட்சில் தற்போது உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. குக் 4 ரன்களுடனும் லித் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக நேற்று மீண்டும் அணிக்குள் வந்த ஸ்டீவ் ஃபின் அபாரமான ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்தி ஸ்மித், கிளார்க், வோஜஸ், மிட்செல் மார்ஷ், ஜான்சன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி இன்று நெவிலின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதில் கிளார்க், வோஜஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஃபின் ஹேட்ரிக் வாய்ப்பைப் பெற்றார்.
ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் முதலில் நிறைய எட்ஜ்கள் செய்தாலும் பிற்பாடு அதிரடி முறையில் 62 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 77 ரன்களை அதிகபட்சமாக எடுத்து 6-வது விக்கெட்டாக ஆண்டர்சனின் ஒரே விக்கெட்டாக வெளியேறினார்.
இங்கிலாந்துக்கு பின்னடைவு:
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை ஆட்டிப் படைத்து 6 விக்கெட்டுகளுடன் 136 ரன்களுக்குச் சுருட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவருக்கு மாற்று பவுலரை கண்டுபிடிப்பது இங்கிலாந்துக்கு சாமானியமான காரியம் அல்ல. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெல்லவே அதிக வாய்ப்பிருக்கும் நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டி நாட்டிங்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்குகிறது.
இந்த மைதானத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிறைய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே இந்த டெஸ்ட் போட்டியில் வெல்வது இங்கிலாந்துக்கு தற்போது கட்டாயமாகியுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டியில் மார்க் உட் திரும்புவார் என்றாலும், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அவர் மாற்றா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT