Published : 07 Jul 2015 02:57 PM
Last Updated : 07 Jul 2015 02:57 PM
பல்லெகிலேயில் நடைபெற்ற 3-வது இறுதி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதன் சிறந்த துரத்தலைச் சாதித்து வரலாறு படைத்துள்ளது.
382/3 என்ற வெற்றியில் யூனிஸ் கான் 171 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4-வது இன்னிங்சில் அதிகபட்ச இலக்கைத் துரத்தியது பாகிஸ்தான் அணியின் புதிய சாதனையாக அமைந்தது. மேலும் ஆசியாவில் இது 2-வது மிகச்சிறந்த துரத்தலாகும். முன்னதாக இந்திய அணி சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 387 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் இந்த துரத்தல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6-வது பெரிய துரத்தலாகும் இது.
மேலும், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 2-1 என்று வீழ்த்தி மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு முன்னேறியது பாகிஸ்தான்.
மேலும் 13/2 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ஷான் மசூத் (125), யூனிஸ் கான் (171 நாட் அவுட்) இணைந்து 3-வது விக்கெட்டுக்காக சேர்த்த 242 ரன்கள் 4-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் அதிசிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும் இது.
வெற்றி பெற 122 ரன்கள் தேவை என்ற நிலையில் இறங்கிய கேப்டன் மிஸ்பா 59 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாக இருந்தார். முபாரக் வீசிய 104-வது ஓவரின் முதல் பந்தை மிஸ்பா லாங் ஆனில் ஒரு சிக்சரை அடித்து வெற்றி ரன்களை எடுத்தார்.
இன்று காலை 230/2 என்று தொடங்கியது பாகிஸ்தான். இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசினர். இதனால் அடிக்க நினைத்த ஷான் மசூத் சற்றே திணறினார். தாரிந்து கவுஷல் என்ற ஆஃப் ஸ்பின்னர் அறிமுகம் செய்யப்பட்டவுடன் சிறையிலிருந்து விடுபட்ட பறவை போல் மேலேறி வந்தார் ஷான் மசூத் பந்து அவரைத் தாண்டியது 125 ரன்களில் ஸ்டம்ப்டு ஆனார்.
கவுஷல் நன்றாக பந்துகளை திருப்பினாலும், சீரற்ற முறையில் வீசியதால் மிஸ்பா, யூனிஸ் கான் அவரை ஸ்வீப் செய்து முறியடித்தனர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியம் காட்டியதால் இன்று முதல் பவுண்டரியே 10-வது ஓவரில்தான் வந்தது. அதுவும் ஸ்லிப் இல்லாத நிலையில் யூனிஸ் கானின் எட்ஜ் மூலம் வந்தது.
புதிய பந்து எடுக்கும் முன்னரே விக்கெட்டுகளை இழக்காமல் ஆடியதால் புதிய பந்து எடுக்கும் போது வெற்றிக்கு 101 ரன்களே தேவைப்பட்டது. தம்மிக பிரசாத் பந்தில் யூனிஸ் பேடில் வாங்க ஒரு பலத்த முறையீடு எழுந்தது ஆனால் அவுட் இல்லை. உணவு இடைவேளைக்குப் பிறகு கவுஷல் மோசமாக வீச பவுண்டரிகள் வரத் தொடங்கின. கவுஷல் 31 ஓவர்களில் 153 ரன்களுக்கு 1 விக்கெட் என்று முடிந்தார். ரங்கன்னா ஹெராத் இல்லாததை நிச்சயம் மேத்யூஸ் உணர்ந்திருப்பார்.
யூனிஸ் கான் 171 நாட் அவுட்டாக திகழ்ந்தார். சிறந்ததொரு டெஸ்ட் இன்னிங்ஸ். 13/2 என்ற நிலையில் 377 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக்கியது இவரது பேட்டிங் என்றால் அது மிகையாகாது. 4-வது இன்னிங்ஸ் துரத்தலில் 5-வது அதிகபட்ச ஸ்கோரை எடுத்துள்ளார் யூனிஸ் கான். தடுமாறிய தொடக்க வீரர் ஷான் மசூதின் ஆட்டமே யூனிஸ் ஆடிய எளிதான வழிமுறைகளினால் மாறி சதம் வரை கொண்டு வந்ததும் யூனிஸ் கானின் அனுபவமும், துணைக் கண்ட 4-ம் நாள், 5-ம் நாள் பிட்சில் எப்படி ஆட வேண்டும் என்ற உத்தியும் பாகிஸ்தானுக்கு ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தது.
ஆட்ட நாயகனாக யூனிஸ் கான் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT