Published : 06 Sep 2019 08:20 AM
Last Updated : 06 Sep 2019 08:20 AM

ஆஷஸ் புதிய மைல்கல்லை நோக்கி இரட்டைச் சத நாயகன் ஸ்டீவ் ஸ்மித்: ஸ்டார்க் அதிரடியுடன் ஆஸி. 497 ரன்கள் குவிப்பு

ஒரு பவுன்சரில் ஸ்மித்தை வீழ்த்திய பிறகு இங்கிலாந்து ஊடகங்கள் தங்கள் வழக்கமான பாணியில் ‘ஆர்ச்சர் பவுன்சருக்குப் பிறகு ஸ்மித் பழைய ஸ்மித்தாக இருக்கமாட்டார்’ என்ற தொனியில் தலையங்கம் எழுதி மகிழ்ந்தன. ஆனால் ஸ்மித் மீண்டும் வந்து ஆர்ச்சராவது... பவுன்சராவது.. ஏன் இங்கிலாந்து பவுலிங்கே தன்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 211 ரன்களை விளாசினார்.

கடைசியில் ஸ்டார்க் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 பந்துகளில் 54 ரன்கள் வெளுக்க, லயன் 26 நாட் அவுட், டிம் பெய்ன் 58 ரன்கள் எடுக்க ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 497 ரன்கள் குவித்தது. ஆட்ட முடிவில் இங்கிலாந்து டென்லி விக்கெட்டை கமின்ஸிடம் இழந்து 23 ரன்களை எடுத்துள்ளது.

புதிய ஆஷஸ் மைல்கல்லை நோக்கி ‘அதிர்ஷ்ட’ ஸ்டீவ் ஸ்மித்:

ஏற்கெனவே இந்த ஆஷஸ் தொடரில் 144, 142, 92, 211 என்று 589 ரன்களை மகா சராசரியான 147.25 என்று எடுத்துள்ளார். ஆனால் இந்த இரட்டைச் சத இன்னிங்சில் அதிர்ஷ்டமும் ஸ்மித் பக்கம் இருந்தது. ஸ்மித் 65 ரன்களில் இருந்த போது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய புல்டாஸை ஸ்மித் பளார் என்று நேராக அவரிடமே அடிக்க கேட்சை எடுக்காமல் தவறவிட்டார் ஜோப்ரா ஆர்ச்சர். பிறகு ஸ்மித் 118 ரன்களில் இருந்த போது ஸ்பின்னர் ஜாக் லீச் பந்தில் பென் ஸ்டோக்ஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ஆனால் அது நோ-பால் என்று தெரியவர ஸ்மித் பிழைத்தார்.

ஏற்கெனவே இந்த ஆண்டின் அதிக ரன்களை எடுத்த வீரர் ஆனார் ஸ்டீவ் ஸ்மித். இந்த ஆஷஸ் தொடர் முடியும் போது அதிக ரன்கள், அதிக ஆஷஸ் சதங்கள் என்ற புதிய மைல்கல்லை ஸ்மித் எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மொத்தம் 319 பந்துகளைச் சந்தித்த ஸ்மித் 24 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 211 ரன்கள் எடுத்து ஜோ ரூட் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பாயிண்டில் கேட்ச் ஆனார்.

நல்ல சூரிய ஒளியில் இன்று ஆஸ்திரேலியா தொடங்கிய போது 170/3 என்ற நிலையில் இங்கிலாந்துக்கு ஸ்மித்தை வீழ்த்தினால் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் ஸ்மித் அதனை முறியடிக்கும் விதமாக வந்தவுடனேயே ஆர்ச்சரை ஒரு பேக்ஃபுட் பஞ்ச் கவர் பவுண்டரி அடித்தார், அடுத்த பந்து புல்டாசாக அமைய பளார் என்று அடித்தார் ஸ்மித் ஆனால் இது ட்ராப் கேட்ச் ஆகி ஆர்ச்சர் கையில் பட்டு நேராக பவுண்டரிக்குச் சென்றது.

இங்கிலாந்து கேட்சில் இன்னும் மேம்பாடு அடைய வேண்டும், டிம் பெய்ன் 9 ரன்களில் இருந்த போது ஜேசன் ராய் ஸ்லிப்பில் கேட்சை தவற விட்டார். பிறகு மீண்டும் 49 ரன்களில் பெய்ன் இருந்த போது இன்னொரு வாய்ப்பு தவற விடப்பட்டது.

ஸ்மித் ஒரு முனையில் தனது சிக்கல் நிறைந்த உத்தியுடன் பின்னால் சென்று பந்துகளை எதிர்கொண்டு சில அபாரமான பேக்புட் ஷாட்களை ஆட டிம் பெய்ன் (58) உடன் இணைந்து இருவரும் 145 ரன்களைச் சேர்த்தனர்.

உணவு இடைவேளையின் போது ஸ்மித் தன் 11வது ஆஷஸ் சதத்தை நிறைவு செய்தார்.. பிறகுதான் ஜாக் லீச் வாழ்நாளின் தன் முதல் நோ-பாலை வீச அதுவே மிகப்பெரிய தவறாக ஸ்மித் தனது 3வது இரட்டைச் சதத்தை எடுத்தார், அனைத்தும் இங்கிலாந்துக்கு எதிராக. டிம் பெய்ன், ஸ்மித் கூட்டணியில் 400 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா.

ட்ராவிஸ் ஹெட் 19 ரன்களில் பிராடிடம் வெளியேறினார். ரவுண்ட் த விக்கெட்டில் இடது கை வீரர்களுக்கு அபாரமாக வீசும் உத்தியைப் பிடித்துக் கொண்ட பிராட் 97 ரன்களுகு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்மித், ஜாக் லீச் பந்தை திருப்பி விட்டு 2 ரன்கள் ஓடி தனது 26வது டெஸ்ட் சதத்தை எடுத்தார்.

டிம் பெய்ன் தேநீர் இடைவேளை முடிந்து முதல் பந்திலேயே ஒவர்டன் (2/85) பந்தில் வெளியேறினார். கமின்ஸ் ஸ்பின்னர் லீச் பந்தை எட்ஜ் செய்து 4 ரன்களில் வெளியேறினார். ஜாக் லீச்சை இருமுறை ஸ்மித் பவுண்டரிக்கு வெளியே சிக்சருக்குத் தூக்கி அடித்தார்.

ஸ்மித் ரூட் பந்தில் வெளியேற ஸ்டார்க் 49 பந்துகளில் அரைசதம் அடித்து நொறுக்கினார். இங்கிலாந்துக்கு கெட்ட சொப்பன நாளாக அமைய அதன் வலியை டிம் பெய்ன் டிக்ளேர் என்று அறிவித்து போக்கினார். 497/8 டிக்ளேர்.

ஜோப்ரா ஆர்ச்சர் ஹைப் பயன்படவில்லை அவர் 27-3-97-0 என்று விக்கெட் எடுக்காமல் முடிந்தார். இங்கிலாந்து 10 ஓவர்கள் ஆடி 23/1. ஆட்ட முடிவில் ரோரி பர்ன்ஸ் 15 ரன்களுடனும் ஓவர்டன் 3 ரன்களுடனும் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x