Published : 03 Sep 2019 10:46 AM
Last Updated : 03 Sep 2019 10:46 AM
கிங்ஸ்டன்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோலி தலைமையிலான இந்திய அணி 'க்ளீன் ஸ்வீப்' செய்தது.
கிங்ஸ்டனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 468 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கி மே.இ.தீவுகள் அணி 210 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் டி20 தொடரில் 3-0 என வெற்றி, ஒருநாள் தொடரில் 2-0 என வெற்றி, டெஸ்ட் தொடரில் 2-0 என்று வெற்றி என மேற்கிந்தியத் தீவுகள் அணியை க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது இந்திய அணி.
கோப்பையுடன் புன்னகை பூக்கும் கேப்டன் கோலி : படம் உதவி ட்விட்டர்
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி 120 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ந்து 8-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி மூலம் வெற்றிகரமான கேப்டன் எனும் பெருமையை கோலி பெற்று தோனியின் சாதனையையான 27 வெற்றிகளை முறியடித்தார்.
இந்தத் தொடரில் ஹனுமா விஹாரி, துணை கேப்டன் அஜின்கயே ரஹானே ஆகியோரின் பேட்டிங்கை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஹனுமா விஹாரி நடுவரிசையில் களமிறங்கி ஒரு சதம், இரு அரை சதங்களை அடித்தார். அதேபோல ரஹானேவும் முதல் டெஸ்ட்டில் அருமையான சதம், அரை சதம், 2-வது டெஸ்ட்டில் அரை சதம் அடித்து தனது இருப்பை நிலைப்படுத்தியுள்ளார்.
ஆல்ரவுண்டராக வலம் வந்த ஜடேஜா : படம் உதவி ட்விட்டர்
இதுதவிர சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா இரு போட்டிகளிலும் தன்னை ஆல் ரவுண்டர் என்று நிரூபித்துள்ளார். முதல் டெஸ்ட்டில் அவர் அடித்த அரை சதம், 2-வது டெஸ்டில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தது என ஆல் ரவுண்டராக வலம் வந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை 2 டெஸ்ட்களிலும் ஒரு இன்னிங்ஸில்கூட 250 ரன்களைத் தாண்டவில்லை என்பது வேதனையாகும். பந்துவீச்சில் ஹோல்டர், ரோச் தவிர மற்றவர்கள் யாரும் சிறப்பாகச் செயல்படவில்லை. பேட்டிங்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி படுமோசமாகச் செயல்பட்டது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களிலும் மே.இ.தீவுகள் அணி 117 ரன்களிலும் ஆட்டமிழந்தது. 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 418 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸை ஆடியது.
3-வது நாள் ஆட்டநேர முடிவில் மே.இ.தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. பிராவோ 18 ரன்னிலும், புரூக்ஸ் 2 ரன்னிலும் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பும்ரா வீசிய 4-வது ஓவரில் பிராவோவின் ஹெல்மட்டில் பந்து பட்டு எகிறியது.
பந்து ஹெல்மெட்டில் பட்டதும் பிராவோ எங்கும் நகரமுடியாமல் அங்கேயே அமர்ந்தார். அதன்பின் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், தலைவலியாக இருந்ததால் அவர் பெவிலியன் திரும்பினார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தலையில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து விளையாட முடியாத சூழல் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கன்கஸன் முறைப்படி மாற்று பேட்ஸ்மேனாக பிளாக்வுட் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், பிராவோ ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறியதும், அடுத்ததாக ரஸ்டன் சேஸ் களமிறங்கினார். புரூக்ஸ், சேஸ் இருவரும் நிதானமாக ஆடினர். ஜடேஜாவின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி சேஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹெட்மயர் வந்தவேகத்தில் ஒரு ரன்னில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன்பின் பிரோவோவுக்கு மாற்றாக பிளாக்வுட் களமிறங்கினார். புரூக்ஸ், பிளாக்வுட் இருவரும் ஓரளவுக்கு நிதானமாக ஆடினார்கள். புரூக்ஸ் அரை சதம் அடித்தார்.
உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கிய ஒருமணிநேரத்தில் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் மளமளவென இழந்தது.
3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்குக் காரணமாக அமைந்த முகமது ஷமி : படம் உதவி ட்விட்டர்
பிளாக்வுட் 38 ரன்கள் சேர்த்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஹோல்டர் களமிறங்கி புரூக்ஸுடன் சேர்ந்தார். புரூக்ஸ் 50 ரன்கள் சேர்த்திருந்தபோது, அருமையான ரன் அவுட் மூலம் கோலி அவரை வெளியே அனுப்பினார். அதன்பின் வந்த வீரர்களான ஹேமில்டன் (0), கார்ன்வால் (1), ரோச் (5) என வரிசையாக வீழ்ந்தனர். 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோல்டர் ஜடேஜா பந்துவீச்சில் போல்டாக ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 59.5 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் ஜடேஜா, ஷமி தலா 3 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
போத்தி ராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT