Published : 29 Aug 2019 06:41 PM
Last Updated : 29 Aug 2019 06:41 PM

ஷிவம் துபே, அக்சர் படேலின் ஆவேச அதிரடியும் சாஹலின் அபாரப் பந்துவீச்சும் தெ.ஆ. ஏ அணியை நொறுக்கியது

திருவனந்தபுரம், பிடிஐ

மும்பை ஆல் ரவுண்டர் ஷிவம் துபேயின் காட்டடி தர்பாரும், அக்சர் படேலின் அதிரடியும், யஜுவேந்திர சாஹலின் 5 விக்கெட் பந்துவீச்சும் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியைப் பெற்றுத் தந்தது.

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 327 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க ஏ அணியில் ஹென்ரிக்ஸ் (110) சதம் எடுத்தாலும் அந்த அணி 45 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியது.

ஷிவம் துபே தன் காட்டடி தர்பாரில் 60 பந்துகளில் 6 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 79 ரன்களை வெளுத்துக் கட்ட அக்சர் படேல் 36 பந்துகளில் 60 ரன்களை விளாச இருவரும் சேர்ந்து 71 பந்துகளில் 121 ரன்களைச் சேர்த்தனர். இந்திய ஏ அணி 36வது ஓவரில் 206/6 என்ற நிலையிலிருந்து 327 ரன்களை எடுத்தது.

இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்திய லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மடிந்தது

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஹெய்ன்ரிக் கிளாசன் 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 58 ரன்களை எடுத்தார். காயா சோண்டோ 30 ரன்கள் எடுத்தார்.

பெரிய அளவில் எதிர்பார்க்கபப்டும் ஷுப்மன் கில் 47 பந்துகளில் 7 பவுண்டரிகளுட 46 ரன்கள் எடுக்க, மணீஷ் பாண்டே 41 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

குருணால் பாண்ட்யா 36வது ஓவரில் 14 ரன்களுக்கு வெளியேறிய போது 206/6 என்று இந்திய ஏ அணி சரிவு முகம் காட்டியது.

இதன் பிறகு அதிரடி வீரர்கள் ஷிவம் துபே, அக்சர் படேல் இணைந்து தென் ஆப்பிரிக்காவின் அதிவேக ப்வுலர் ஆன்ரிச் நோர்ட்டியேவை வெளுத்து வாங்கினர், அவர் 10 ஓவர்களில் 89 ரன்களை கொடுத்தார், பியூரன் ஹென்றிக்ஸ் என்ற பவுலரும் 10 ஓவர்களில் 89 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

துபே 46 பந்துகளில் அரைசதம் எடுத்தார். தொடக்கத்தில் நிதானித்த அக்சர் படேல் 34 பந்துகளில் 50 ரன்களை எடுத்ததில் சில சிக்சர்களை அனாயசமாக அடித்தார்.

தென் ஆப்பிரிக்க ஏ அணி சரியாகத் தொடங்கவில்லை, ஜனெமான் மலான் (18) ஆட்டமிழந்தார். சதமெடுத்த ரீசா ஹென்றிக்ஸ் பவுண்டரிகளாக விளாசினாலும் பிட்சின் மந்தத் தன்மையினால் மிடில் ஆர்டர் சோபிக்க முடியவில்லை. அதனால் ஹென்றிக்ஸுக்கு ஆதரவில்லாமல் போனது. பவுலிங்கில் சாஹல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அக்சர் படேல் டைட்டாக வீசி 8 ஓவர்கள் 39 ரன்கள் 2 விக்கெட் என்று ஆல்ரவுண்ட் திறமையை நிரூபித்ததால் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட இந்த ஏ-தொடரில் இந்தியா ஏ அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x