Published : 29 Aug 2019 03:50 PM
Last Updated : 29 Aug 2019 03:50 PM

இன்னும் ஒரு விக்கெட் தேவை: கபில்தேவ் சாதனையை முறியடிக்கும் இசாந்த் சர்மா

கிங்ஸ்டன் ,

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால், ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடிப்பார்.

மேற்கிந்தியத்தீவுகள் நாட்டுக்கு பயணம் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது. டி20 தொடர், ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஆண்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்னில் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையலி்ல் 2-வது டெஸ்ட் போட்டி நாளை கிங்ஸ்டனில் தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் வென்றதால், 60 புள்ளிகளுடன் உள்ளது.

நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான கபில் தேவ், ஆசிய நாடுகளுக்கு வெளியே சென்று நடந்த டெஸ்ட் கிரிக்கெட் 45 போட்டிகளில் 155 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இசாந்த் சர்மாவும் 45 போட்டிகளில் 155 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவ்க்கு இணையாக இருக்கிறார்.

நாளை தொடங்கும் போட்டியில் இசாந்த் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினால் கபில்தேவ் சாதனையை இசாந்த் சர்மா முறியடித்து, 2-வது இடத்துக்கு முன்னேறுவார்.

ஆசிய நாடுகளுக்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் அனில்கும்ப்ளே 200 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இசாந்த் சர்மா இன்னும் ஒருவிக்கெட் வீழ்த்தினால் 2-வது இடத்தைப் பெறுவார்.

ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் அணியை தனது அபாரமான பந்துவீச்சால் சுருட்டிய இசாந்த் சர்மா, 5 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
30 வயதான இசாந்த் சர்மா இதுவரை 91 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x