Published : 04 Jul 2015 08:38 PM
Last Updated : 04 Jul 2015 08:38 PM
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் 2-வது அதிவேக சர்வை அடித்து ஆஸ்திரேலிய வீரர் சாம் குரோத் சாதனை புரிந்துள்ளார். ஆனாலும் பெடரரின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.
ஆடவர் 3-வது சுற்று ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் சாம் குரோத், பெடரருக்கு எதிராக ஆடினார். 1-1 என்று சமநிலை வகித்த நிலையில் முதல் செட்டில் 30-30 என்று இருந்த ஒரு சர்வ் கேமில் ஆஸ்திரேலிய வீரர் சாம் குரோத் அடித்த சர்வ் ஒன்று மணிக்கு 236 கிமீ வேகத்துடன் சென்றது.
அந்த சர்வுக்கு பெடரர் தனது டென்னிஸ் ராக்கெட்டைத்தான் கொண்டு செல்ல முடிந்தது, ரிடர்ன் செய்ய முடியவில்லை.
இது விம்பிள்டன் டென்னிஸில் 2-வது அதிவேக சர்வ் ஆகும். முன்னதாக 2010-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸில் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராக டெய்லர் டெண்ட் அடித்த சர்வ் 238 கிமீ வேகம் கொண்டதாக அமைந்து முதலிடத்தில் உள்ளது.
இவ்வளவு ஆக்ரோஷம் காட்டியும் 3-வது சுற்றில் பெடரர் வெற்றி பெற்றார். அதாவது 6-4, 6-4, 6-7(டைபிரேக்கரில் 5/7), 6-2 என்று 4 செட்களில் 3-1 என்று பெடரர் சாம் குரோத்தை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் சாம் குரோத் மொத்தம் 21 ஏஸ் சர்வ்களை அடித்தார், பெடரர் 17 ஏஸ்களை அடித்தார். சாம் குரோத் 4 டபுள் பால்ட்களை முக்கியத் தருணத்தில் செய்ததால் தோல்வி ஏற்பட்டது. பெடரர் மாறாக 1 முறையே டபுள் பால்ட்டை தன் சர்வில் செய்தார். முதல் சர்வில் 90% வெற்றிப் புள்ளிகளை பெடரர் பெற சாம் குரோத் 73%-ஏ பாயிண்ட் சர்வ்களை அடிக்க முடிந்தது. இரண்டாவது சர்விலும் பெடரர் 68% சர்வ் பாயிண்ட்களை வெல்ல சாம் குரோத் 52% சர்வ்களிலேயே பாயிண்ட் பெற முடிந்தது.
அவருக்கு பெடரர் சர்வ்களை முறியடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை, மாறாக பெடரர், குரோத் சர்வ்களை முறியடிக்க கிடைத்த 8 வாய்ப்புகளில் 4-ஐ தன் வெற்றியாகச் சாதித்தார்.
பெடரரின் மிகப்பெரிய பிரச்சினையான தெரியாமல் செய்யும் தவறுகள் இந்த ஆட்டத்தில் 8 முறையே நிகழ்ந்தது, மாறாக குரோத் 19 முறை தவறிழைத்தார். பெடரர் மொத்தம் 56 வின்னர்களை அடிக்க, குரோத் 47 வின்னர்களையே அடிக்க முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT