Published : 25 Aug 2019 12:45 PM
Last Updated : 25 Aug 2019 12:45 PM
நார்த் சவுண்ட்
ரஹானே, கோலியின் பிரமாதமான அரைசதத்தால் மே.இ.தீவுகள்அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
மூன்றாவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்கில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய 260 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
ரஹானே 53 ரன்களிலும், கோலி 51 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் இரு நாட்கள் இருக்கும் நிலையில், இன்று தேநீர் இடைவேளைக்குப்பின் இந்திய அணி ஆட்டத்தை முடித்துவிட்டு மே.இ.தீவுகளுக்கு பெரிய இலக்கை நிர்ணயித்து பேட்டி செய்ய அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹானே 17 ரன்கள் சேர்த்திருந்தபோது ரோச் பந்துவீச்சில் அடித்த ஷாட்டை கேம்பெல் கேட்ச் பிடிக்க தவறிவிட்டார். இதைப் பயன்படுத்திய ரஹானை அருமையான அரைசதத்தை பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸில் ரஹானே 81 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது இன்னிங்ஸில் மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்ட எல்பிடபிள்யு டிவி ரீப்ளேயில் அவுட் இல்லை என நன்றாகத் தெரிந்தது. பந்து லெக் ஸ்டெம்பை விட்டு வெளியே சென்றபோதும் அவுட் வழங்கப்பட்டது. ஆனால் ஏன் டிஆர்எஸ் முடிவுக்கு அகர்வால் ஏன் செல்லவில்லை எனத் தெரியவில்லை.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்திருந்தது.
ஹோல்டர் 10 ரன்கள், கம்மின்ஸ் இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்து நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கினார்கள்.
ஆட்டம் தொடங்கிய ஒருமணிநேரத்தில் நேரத்தில் ஹோல்டர் வெளியேறினார். 39 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது ஷமி பந்தவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஹோல்டர் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு இருவரும் 41 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த கேப்ரியல் களமிறங்கினார். ஆனால், ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சில் கம்மின்ஸ் போல்டாகினார். இதனால் மே.இ.தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியைக் காட்டிலும், 75 ரன்கள் பின்தங்கியது.
இந்திய அணித் தரப்பில் இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கியது. மயங்க் அகர்வால், ராகுல் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி விரைவாகவே பிரிந்தது. அகர்வால் 16 ரன்கள் சேர்த்த நிலையில், சேஸ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கியபோது அவுட் அளிக்கப்பட்டது, ரீப்ளேயில் அவுட் இல்லை எனத் தெரிந்தும் அவர் வெளியேறினார்.
அடுத்து வந்த புஜாராவும் ராகுலுடன் சேர்ந்து ஓரளவுக்கு பேட் செய்தார். இருவரும் 43ரன்கள் சேர்த்து பிரிந்தனர.
ராகுல் 38 ரன்கள் சேர்த்திருந்தபோது சேஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ராகுல் வெளியேறிய சிறிதுநேரத்தில் புஜாராவும் 25 ரன்களில் ரோச் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது.
4-வது விக்கெட்டுக்கு ரஹானே, கோலி சேர்ந்தனர். இருவரும் தொடக்த்தில் தடுமாறினாலும், பின்னர் எளிதாக மே.இதீவுகள் பந்துவீச்சை சமாளித்து பேட் செய்தனர். அவ்வப்போது பவுண்டரிகளும் அடித்து தங்களை நிலைப்படுத்தினார்கள்.
128 பந்துகளில் ரஹானே தனது 18-வது அரைசதத்தை நிறைவு செய்தார், கோலி 110 பந்துகளில்அரைசதம் அடித்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 41.4 ஓவர்கள் வரை நிலைத்துஆடி 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
போத்திராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT