Last Updated : 24 Aug, 2019 11:24 AM

 

Published : 24 Aug 2019 11:24 AM
Last Updated : 24 Aug 2019 11:24 AM

பும்ரா மைல் கல்; பந்துவீச்சு, பேட்டிங்கில் இசாந்த் சர்மா அசத்தல்;அடங்கிப்போன மே.இ.தீவுகள்: ஜடேஜா அபாரம் 

பேட்டிங், பந்துவீச்சில் ஜொலித்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா: படம் உதவி பிசிசிஐ

நார்த்சவுண்ட்


இசாந்த் சர்மாவின் துல்லியமான பந்துவீச்சு, ரவிந்திர ஜடேஜாவின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் டெஸ்டில் 2-வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார். டெஸ்ட் போட்டியில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை அஸ்வின் எட்டி இருந்தாலும், பந்துகள் வீசியதைப் பொருத்தமட்டில் பும்ரா குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பந்துவீச்சில் துல்லியம், நெருக்கடி, பவுன்ஸர்கள் என மிரட்டிய இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 9-வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை இசாந்த் சர்மா வீழ்த்தியுள்ளார்.

விக்கெட் வீழ்த்திய பும்ராவை பாராட்டும் கேப்டன் கோலி (படம் உதவி பிசிசிஐ)

சர்மா தனது கடைசி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணியை பெரும் நெருக்கடியில் தள்ளினார். அதுமட்டுமல்லாமல் பிராத்வெய்ட், ஹெட்மயர் இருவருக்கும் இரு கேட்சுகளைப் பிடித்து சர்மா ஆட்டமிழக்கச் செய்தார். மொத்தத்தில் பந்துவீச்சு, பேட்டிங், கேட்சு என இசாந்த் ஹீராவாக ஒளிர்ந்தார்.

இந்திய அணி இக்கட்டான நேரத்தில் இருந்தபோது, களமிறங்கிய ரவிந்திர ஜடேஜா(58) அரைசதம் அடித்து மீண்டும் தன்னை ஒரு ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். அஸ்வினை நீக்கியது சரியான முடிவுதான் என்பதைதனது பேட்டிங்கின் மூலம் உணர்த்திவிட்டார். இவருக்கு உறுதுணையாக இசாந்த் சர்மா 19 ரன்கள் சேர்த்து பேட்டிங்கிலும் ஜொலித்தார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய மே.இ.தீவுகள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் 108 ரன்கள் பின்தங்கி இருக்கிறது மே.இ.தீவுகள் அணி.

களத்தில் ஹோல்டர் 10 ரன்களுடனும், கம்மின்ஸ் ரன் ஏதும் சேர்க்காமலும் உள்ளனர்.

முன்னதாக டாஸ்வென்ற மே.இ.தீவுகள் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்திருந்தது.

பந்த் ஏமாற்றம்

ரிஷப் பந்த் 20 ரன்னிலும், ஜடேஜா 3 ரன்னிலும் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரிஷப் பந்த் கூடுதலாக 4 ரன்கள் சேர்த்து 24 ரன்களில் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா, இசாந்த் அபாரம்

8-வது விக்கெட்டுக்கு இசாந்த் சர்மா களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். அணியின் சூழலைப்புரிந்து கொண்டு ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடினார். மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சை எளிதாகக் கையாண்டு ஜடேஜா பேட் செய்தார். ஜடேஜாவுக்கு உறுதிணையாக இசாந்த் சர்மாவும் பொறுமையாக ஆடினார். இருவரையும் பிரிக்க மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் பலவித்தைகள் செய்தும் முடியவில்லை.

அபாரமாக ஒரு சிக்ஸர் அடித்து 104 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் ரவிந்திர ஜடேஜா. 8-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து இசாந்த் சர்மா 19 ரன்னில் கேப்ரியல் வேகத்தில் வெளியேறினார்.

அரைசதம் அடித்த ரவிந்திர ஜடேஜா (படம் உதவி பிசிசிஐ)

அடுத்து வந்த முகமது ஷமி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஜடேஜா 58 ரன்கள் சேர்த்து ஹேல்டர் பந்துவீச்சில் வெளியேறினார். 96.4 ஓவர்களில் இந்திய அணி 297ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

மே.இ.தீவுகள் தரப்பில் ரோச் 4 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. கேம்பெல், பிராத்வெய்ட் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினாரக்ள். பும்ரா, இசாந்த் சர்மா பந்துவீச்சை இருவரும் எளிதாக எதிர்கொண்டு சில பவுண்டரிகளை அடித்தார்கள். கேம்பெல் 23 ரன்கள் சேர்த்திருந்தபோது ஷமி வேகத்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

கேம்பெல் விக்கெட்டை வீழ்த்திய ஷமியை பாராட்டும் சக வீரர்கள்(படவிளக்கம்)

தொடக்கத்திலேயே பவுன்ஸர்களால் எகிறவைத்த இசாந்த் சர்மாவுக்கு பிராத்வெய்ட் திணறியதை நன்கு அறிந்தார். பிராத்வெய்ட் 18 ரன்கள் சேர்த்திருந்தபோது இசாந்த் சர்மா வீசிய பவுன்ஸரில் இசாந்த் சர்மா கேட்ச்பிடித்து வெளியேற்றினார். அடுத்துவந்த புரூக்ஸ் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ராஹனேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிராவோ, சேஸ் இருவரும் ஓரளவுக்கு நிதானமாக ஆடியதால் ஸ்கோர் அதிகரித்தது. தேநீர் இடைவேளையின் போது மே.இ.தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் சேர்த்திருந்தது.

தேநீர் இடைவேளை முடிந்துவந்தபின், பிராவோவை எல்பிடபிள்யு முறையில் பும்ரா வெளியேற்றினார். பிராவோ 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்தியபோது, பும்ரா டெஸ்ட் போட்டியில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.

கடைசி 3 ஓவர்கள்

நிதானமாக ஆடிய ரஸ்டன் சேஸ் 48 ரன்கள் சேர்த்த நிலையில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியிறினார். 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மே.இ.தீவுகள் அணி தடுமாறியது.

ஆனால் 54 ஓவர்களுக்குப்பின் இசாந்த் சர்மா வீசிய 3 ஓவர்களிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணியை பெரும் நெருக்கடியில் தள்ளினார்.

ஹெட்மெயருக்கு கேட்ச் பிடித்த இசாந்த் சர்மா

இசாந்த் சர்மா தான் வீசிய 54-வது ஓவரில் ஹோப் 24 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இசாந்த் சர்மா வீசிய 56-வது ஓவரில் ஹெட்மயர்35 ரன்கள் சேர்த்த நிலையில் இசாந்த் சர்மாவிடமிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இசாந்த் வீசிய 56-வது ஓவரில் ரோச் டக்அவுட்டில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது. ஹோல்டர் 10 ரன்னிலும், கம்மின்ஸ் ரன் ஏதும் சேர்க்காமலும் உள்ளனர்.

போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x