Published : 10 Jul 2015 05:01 PM
Last Updated : 10 Jul 2015 05:01 PM

கிறிஸ் கெயில் விளாசல் சதம்: ஜமைக்கா அபார வெற்றி

கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில் ஆடும் ஜமைக்கா தாலவா அணி அவரது அதிரடி இன்னிங்ஸினால் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய ஜமைக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கிறிஸ் கெயில், 57 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 105 ரன்கள் விளாசினார். எதிரணியான டிரினிடாட் & டொபாகோ அணி 130 ரன்களையே எடுக்க முடிந்தது. டிரினிடாட் கேப்டன் டிவைன் பிராவோ டக் அவுட் ஆனார். இந்த அணியில் ஜாக் காலிஸ் மட்டும் தொடக்க வீரராக களமிறங்கி 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.

கடந்த 9 போட்டிகளில் 7வது முறையாக் கெயில் 50க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். கெயில் 92, 151 நாட் அவுட், 85 நாட் அவுட், 90 நாட் அவுட், 72 நாட் அவுட், மற்றும் 64 நாட் அவுட் என்ற நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கி தன் இஷ்டத்துக்கு சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விளாசினார்.

இறங்கி 4-வது பந்தில் ஜாக் காலிஸ் சிக்க, லாங் ஆனில் ஒரு மிகப்பெரிய சிக்சரை அடித்தார் கெயில். ஜோஹன் போத்தா அடுத்ததாக மாட்ட அவரை 2 சிக்சர்களை விளாசினார். சக வீரர் டிவைன் பிராவோவும் விதிவிலக்கல்ல, இவரை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து கவனித்தார் கெயில். 7 ஓவர்களுக்குள் 70 ரன்களை எட்ட, எதிர்முனையில் வால்டனின் பங்களிப்பு வெறும் 13 மட்டுமே.

டிரினிடாடின் சுலைமான் பென் 11-வது ஓவரில் கிறிஸ் லின் மற்றும் இலங்கையின் மகேலா ஜெயவர்தனே ஆகியோரை வீழ்த்தி ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினார். கிறிஸ் கெய்ல், பிளாக்வுட் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்தனர். கெயில் 19-வது ஓவரில் அவுட் ஆனார். 180/6 என்பதை எதிர்த்துக் களமிறங்கிய டிரினிடாட் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அதன் பிறகு எழும்பவில்லை.

ஜமைக்கா அணியில் டேனியல் வெட்டோரி சிக்கனம் காட்டி 22 ரன்களில் 2 விக்கெட்டுகளையும், சாந்தோக் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜெரோம் டெய்லர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டிரினிடாட் 130 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x