Published : 30 Jul 2015 04:20 PM
Last Updated : 30 Jul 2015 04:20 PM
ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் உண்மையான திறமை குறித்த கேள்விகளை இங்கிலாந்து ஸ்விங் பவுலர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டியில், நேற்று முதல் நாளில் 37-வது ஓவரிலேயே 136 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா. இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் உண்மையான திறமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆண்டர்சன் நேற்று ஆஸ்திரேலியாவின் பேட்டிங் உத்திகளின் போதாமையை அம்பலப்படுத்தினார்.
பந்துகள் ஸ்விங் ஆனால் இங்கிலாந்தில் ஆடினாலும் அல்லது தன் சொந்த மண்ணில் ஆடினாலும் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வும் என்றே தெரிகிறது. புள்ளி விவரங்களும் அவ்வாறே தெரிவிக்கின்றன.
பொதுவாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தோற்றுசெல்லும் உயர்மட்ட அணிகள், பிட்சை குறைகூறுவது வழக்கம். குறிப்பாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்திய பேட்ஸ்மென்களை 'flat track bullies' அதாவது மந்தமான ஆடுகளத்தில் வெளுத்துக் கட்டுபவர்கள் என்ற தொனியில் ஆஸ்திரேலியர்களும், இங்கிலாந்து கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் இந்நாள் வீரர்களும் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பாக பாய்காட் போன்றவர்கள் எந்த பிட்சிலும் அடித்து நொறுக்கும் சேவாக் போன்ற மரபை மீறிய பேட்ஸ்மென்களையும் மட்டை ஆட்டக்கள சூரர்கள் என்று வர்ணிப்பார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றதற்குக் காரணம் அந்த அணியின் பேட்ஸ்மென்கள் அதீத தன்னம்பிக்கையில் ஆடினர் என்று கூறப்பட்டது. லார்ட்ஸ் பிட்ச் அதன் வழக்கமான உயிரை இழந்து உயிரற்ற ஆட்டக்களமான போது ரன்களைக் குவித்து அதன் பிறகு இங்கிலாந்து நெருக்கடிக்குள்ளானதோடு, அந்த மட்டைப் பிட்சிலும் மோசமாக ஆடி தோல்வி தழுவியது, எனவே செத்த ஆட்டக்கள தீரர்கள் என்ற அந்த ‘அவப்பெயர்’ கூட இங்கிலாந்துக்கு கிடைக்காமல் போனது.
ஆனால், நேற்று மைக்கேல் கிளார்க் புற்கள் உள்ள உயிரோட்டமான, பந்துகள் ஸ்விங் ஆகும் சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் முடிவின் மீது தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. ஏன் கிளார்க்கை இதற்காக சாட வேண்டும் என்பதே நம் கேள்வி. அவர்கள்தான் எந்தப் பிட்சிலும் ஆடும் தீரர்கள், சூரர்கள் ஆயிற்றே, ஏன் நேற்று முடியவில்லை? உண்மையில் மிகவும் துல்லியமான ஸ்விங் பவுலிங்குக்கு எதிராக எந்த அணியும் சரணடைவதுதான் நடக்கும்.
ஆனால், அத்தகைய தருணங்களில் ரிச்சர்ட்ஸ், லாரா, சச்சின், திராவிட், சங்கக்காரா, ஜாக் காலிஸ் போன்ற வீரர்கள் தங்களது உத்தியின் வலிமையையும், மனவலிமையையும் உறுதிப்பாட்டையும் காண்பித்துள்ளனர். ‘செத்த ஆட்டக்கள தீரர்கள்’ என்று ஒரு சில இந்திய, இலங்கை வீரர்களை அவர்கள் வர்ணிக்கலாம், ஆனால் ஸ்விங் ஆட்டக்களத்தில் மேற்கூறிய வீரர்கள் தங்களுக்கேயுரிய பாணியில் எதிரணியினரை ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதே உண்மை.
அத்தகைய டெஸ்ட் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இப்போது இல்லை என்பதே உண்மை. ஸ்டீவ் ஸ்மித்தை இப்போது செத்த ஆட்டக்கள தீரர் என்று ஒருவர் அழைத்தால் அது எவ்வளவு அபத்தமாக அமையும்?
ஆனால், நேற்று அவருக்கு ஸ்டீவன் ஃபின் வீசிய பந்து அருமையானது, ஒரு பந்தை டிரைவ் ஆடிவிட்டால், உடனே தன்னம்பிக்கையின் உச்சத்துக்கு சென்று விடக்கூடாது என்று வேகப்பந்து வீச்சை அணுஅணுவாக ஆடிக் கணித்துள்ள சுனில் கவாஸ்கர் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.
அவர் கூறுவார், ஸ்விங் ஆகும் போது ஓவர் பிட்ச் பந்துகள் என்று நாம் தவறாக கருதும் பந்துக்கு டிரைவ் ஆடச் செல்வோம், இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கை அளித்துவிடும். எனவே ஒரு ஷாட்டை முன்னால் வந்து ஆடினோம் என்றால் அடுத்த பந்தை பின்னால் சென்று ஆட வேண்டும் அல்லது ஆடாமல் விட்டு விட வேண்டும் என்பார் சுனில் கவாஸ்கர்.
மைக்கேல் கிளார்க் காயத்திற்குப் பிறகே சரியாக ஆட முடிவதில்லை. அவரது உத்தி முன்னால் வந்து ஆடுவதற்கு ஏற்றதாக இல்லை. பின்னால் சென்றாலும் அவரால் புல், கட், ஹூக் போன்றவற்றை துல்லியமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. டேவிட் வார்னர் நல்ல ஸ்விங் பந்துவீச்சுக்கு முன்னால் ஒன்றுமில்லாத வீரர் என்பதும் நேற்று தெரிந்தது. ஒரு பந்தை ஆடுவதா வேண்டாமா என்பதிலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு நேற்று இரட்டை மனோநிலை ஏற்பட்டது.
துணைக் கண்ட ‘செத்த பிட்ச்’களில் ஆடும் சூரப்புலிகள் என்று உலகின் தலைசிறந்த துணைக்கண்ட வீரர்களையும் கேலி பேசும் அவர்களும் செத்த பிட்ச் நாயகர்கள்தான். இங்கிலாந்தில் இத்தகைய சூழ்நிலைமைகளில் ராகுல் திராவிட் நிறைய சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் வெளுத்துக் கட்டியுள்ளார், அரவிந்த டிசில்வா, சங்கக்காரா, தில்ஷன், ஜெயசூரியா போன்ற துணைக்கண்ட பேட்ஸ்மென்களும் இந்தச் சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால் ஆஸ்திரேலியா நேற்று மட்டுமல்ல 2005 ஆஷஸ் தொடர் முழுதும் இத்தகைய சூழ்நிலைகளை திறமையுடன் எதிர்த்து ஆட முடியாமல் தோல்வி தழுவியது.
1997-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இதே எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் ஒன்றில் மார்க் டெய்லர் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட் செய்து 118 ரன்களுக்குச் சுருண்டதும் அறிந்த கதைதான். அப்போதும் இங்கிலாந்து 3 பவுலர்களையே பயன்படுத்தியது. இப்போதும் 3 பவுலர்களையே இங்கிலாந்து பயன்படுத்தியது. ஆனால் இம்முறை ராஜர்ஸ் அரைசதம் கண்டார், மார்க் டெய்லர் அணியில் ஒருவரும் அரைசதம் அடிக்கவில்லை.
துணைக்கண்ட ‘செத்த பிட்ச்’ களில் ஆடும் பேட்ஸ்மென்கள் என்று அவர்களால் பெயர் பெற்ற பேட்ஸ்மென்கள் ஸ்விங் ஆகும் நிலைகளில் கைகளைத் தளர்வாகக் கொண்டு சென்று பந்தை ஆடுவர், இதனால் எட்ஜ் ஆனாலும் பந்து பீல்டர் கைக்கு செல்லாது.
பவுன்ஸ் பிட்ச்களில் ஆடிப் பழகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள், பந்தை அடிக்க வன்மையாகச் செல்வர், இதனால் எட்ஜ் பீல்டர் கைகளுக்குச் செல்கிறது. இங்குதான் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், சங்கக்காரா ஆகியோரது உத்தி பெரிதும் கைகொடுக்கும்.
எனவே லார்ட்ஸில் செத்த பிட்சில்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சோபித்தனர். ஸ்விங் சாதகமான ஆட்டக்களத்தில் எவ்வளவு ஆக்ரோஷமான அணியாகத் தங்களை ஆஸ்திரேலியா கருதிக் கொண்டாலும் அந்த அணியில் கவாஸ்கர், திராவிட், காலிஸ் பாணி வீரர்களின் தேவை இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.
உண்மையில் நல்ல ஸ்விங் பிட்சிலும் திணறுகிறார்கள், நல்ல ஸ்பின் பிட்சிலும் திணறுகிறார்கள் என்றால் அவர்களும் செத்த பிட்சில் வெளுத்துக் கட்டும் சூரர்கள்தானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT