Published : 05 Jul 2015 01:21 PM
Last Updated : 05 Jul 2015 01:21 PM
சிலியில் நடைபெற்று வரும் தென் அமெரிக்காவின் பிரபல கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியைத் தோற்கடித்து 3-வது இடத்தைப் பிடித்தது.
கான்செப்சியூன் நகரில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் பெரு அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. கார்னரில் இருந்து கிறிஸ்டியான் கியூவா உதைத்த பந்தை கோல் கம்பத்தின் முன்னால் நின்ற ஸ்டிரைக்கர் பாலோ கெரேரோ தலையால் முட்டி கட்டுக்குள் கொண்டு வந்தார். அப்போது பந்து மிட்பீல்டர் ஆன்ட்ரே கேரில்லோ வசம் சென்றது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கேரில்லோ கோலடிக்க, பெரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு பராகுவே அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பு நூலிழையில் நழுவ, 89-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து வந்த கிராஸ் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாலோ கெரேரா அசத்தலாக கோலடிக்க, பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியைத் தோற்கடித்தது.
தொடர்ந்து 2-வது முறையாக 3-வது இடத்தைப் பிடித்துள்ளது பெரு. கடந்த முறை வெனிசுலாவை வீழ்த்தி 3-வது இடத்தைப் பிடித்தது பெரு.
டாப் ஸ்கோரை நோக்கி...
பெரு அணியின் நட்சத்திர முன்கள வீரரான பாலோ கெரேரோ இந்த கோபா அமெரிக்கா போட்டியில் இதுவரை 4 கோல்களை அடித்துள்ளார். தற்போதைய நிலையில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் சிலியின் எட்வர்டோ வர்காஸுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் கெரேரோ.
இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சிலியும், அர்ஜெண்டினாவும் மோதுகின்றன. இதில் வர்காஸ் கோல் எதுவும் அடிக்காதபட்சத்தில் அவருடன் அதிக கோலடித்தவர் என்ற பெருமையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கெரேரோவுக்கு கிடைக்கலாம். கடந்த கோபா அமெரிக்கா போட்டியில் கெரேரோ 5 கோல்களுடன் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர நேற்றைய கோலோடு சேர்த்து பெரு அணிக்காக 25 கோல்களை அடித்துள்ளார் கெரேரோ. அவர் இன்னும் ஒரு கோலடிக்கும் பட்சத்தில் பெரு அணிக்காக அதிக கோலடித்தவர் என்ற சாதனையை டீபிலோ கியூபிலாஸுடன் பகிர்ந்துகொள் வார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT