Published : 08 Aug 2019 03:45 PM
Last Updated : 08 Aug 2019 03:45 PM

கிரிக்கெட்டில் நடுநிலை ‘நடுவர்கள்’ முறை அகற்றப்படுகிறது? பாண்டிங், ஜோ ரூட் கருத்து மோதல்

ஆஷஸ் தொடரில் நடந்து முடிந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது ஒரு புறம் இருந்தாலும் கள நடுவர்களாக பணியாற்றிய அலீம் தார் மற்றும் ஜொயெல் வில்ஸன் இணைந்து மொத்தம் 20 முறை டிஆர்எஸ்-ஐ அழைத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

இங்கிலாந்தின் ஸ்கைஸ்போர்ட்ஸ் இணையதளம் முதல் டெஸ்ட் போட்டியில் அலீம் தார், ஜொயெல் வில்சனின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து போட்டு விட்டதையடுத்து தற்போது முக்கியத் தொடர்களில் ‘நியூட்ரல் அம்பயர்’ முறை தேவைதானா? இதனால் ஒவ்வொரு நாட்டில் உள்ள சிறந்த நடுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் அவர்கள் விரைவில் ஓய்வு அறிவிக்கும் நிலை ஏற்படுகிறது என்பது ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் வாதமாக உள்ளது.

ஆஸ்திரேலியர்கள், இங்கிலாந்து தரப்பிலிருந்து நடுநிலை நடுவர் முறையை அகற்ற வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆனால் நடுவர்களோ தற்போதுள்ள நியூட்ரல் அம்பயர் முறையத் தொடர வேண்டும் என்று கருதுகின்றனர்.

ஒருகாலத்தில் பாகிஸ்தான் சென்று ஆடிய அணிகளுக்கு அந்நாட்டு நடுவர்கள் பல அநீதிகளை இழைத்துள்ளனர். சகூர் ரானா என்று ஒரு நடுவர் இருந்தார், அவர் தன் முதல் விக்கெட்டாக இந்தியாவின் வெங்சர்க்கார் விக்கெட்டைக் ‘கைப்பற்றியதாக’ அப்போது பொதுவெளிகளில் கடும் கிண்டல் இருந்து வந்தது.

இலங்கை நடுவர்களும் அப்போது இப்படித்தான், அர்ஜுணா ரணதுங்காவுக்கு அவுட் கொடுக்க மறுக்கப்பட்டு வந்த நிலையில் அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், நடுவர்களிடம் நேரடியாகவே, ‘அடுத்த போட்டிக்கும் நீங்களே நடுவர்களாக பணியாற்ற நான் ஒப்புக் கொள்கிறேன், ரணதுங்காவுக்கு அவுட் கொடுக்க முடியுமா முடியாதா?’ என்று களத்திலேயே கேட்டதும் பெரிய செய்திகளாக உலவி வந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், ஏன் இந்தியா உட்பட அனைத்து நாட்டு நடுவர்களும் தங்கள் நாட்டுக்கு ஆதரவாக செயலாற்றியதை யாரும் மறுக்க முடியாது, இங்கிலாந்து டிக்கி பேர்ட், ஷெப்பர்ட் ஆகியோரால் தப்பியது, ஆனால் ஷெப்பர்டும் கடைசியில் தவறிழைத்தார்.

இந்நிலையில் தான் தங்கள் நாட்டின் மீதுள்ள கறையைப் போக்க இம்ரான் கான் முதன் முதலாக பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரில் நியூட்ரல் அம்பயர் முறையை தாமாகவே முன் வந்து அமல் படுத்தினார். இந்திய நடுவர்கள் ரிப்போர்ட்டர், ராமசாமி ஆகியோர் அந்தத் தொடரில் நடுவர்களாக பணியாற்ற அழைக்கப்பட்டனர். இருவரும் இம்ரான் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் சென்றனர். 80களில் முதன் முதலில் நியூட்ரல் அம்பயர் முறை வந்தது. பிறகு 1994-ல் நியூட்ரல் அம்பயர் முறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில் நியூட்ரல் அம்பயர் முறையை ஒழிக்க தான் குரல் கொடுக்கப் போவதாகக் கூறிய ரிக்கி பாண்டிங், ஆஸி. ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில், “ஆட்டம் நிறைய மாறி வந்திருக்கிறது ஆகவே நியூட்ரல் அம்பயர் முறை இப்போது தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம் வந்து விட்டது என்கின்றனர், ஆனால் சில தவறுகள் மிக மோசமாக ஏற்படும் போது அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. டிஆர்எஸ் முறை மீது இத்தனையாண்டுகளாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ரிச்சர்ட் கெட்டில்பரோ போன்ற நடுவர்கள் ஆஷஸ் தொடரில் நடுவர் பொறுப்பாற்ற விழைந்தனர், ஆனால் இந்த நடுநிலை நடுவர்கள் என்ற விதிமுறையினால் தரமான நடுவர்கள் வாய்ப்பை இழந்து வருகின்றனர். சிறந்த நடுவர்கள் சிறந்த தொடர்களை இழப்பதால் அவர்கள் விரைவில் ஓய்வு அறிவிப்பது நடக்கிறது” என்று நடுநிலை நடுவர்கள் முறையை ஒழிக்க தன் முதல் குரலை பதிவு செய்தார் ரிக்கி பாண்டிங்.

ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மாறுபடுகிறார், “வீரர்கள் எப்படி தவறான முடிவுகளை எடுக்கிறார்களோ, நடுவர்களும் தவறுகள் செய்வது சகஜமே. அளவுக்கதிகமாக நடுவர்களை விமர்சிப்பதும், கையைக் காட்டுவதும் சுலபம். வீரர்கள் எத்தனை அழுத்தத்திற்கு ஆளாகின்றனரோ அத்தனை அழுத்தங்களுக்கு நடுவரக்ளும் ஆளாகின்றனர். சிலபல தீர்ப்புகளை எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் அவர்கள் தவறாக எடுத்தனர், ஆனால் இவையெல்லாம் கிரிக்கெட்டின் அங்கம். அதனால்தான் தவறான முடிவுகளை மாற்ற டி.ஆர்.எஸ். முறை இருக்கிறது. தவறுகளை நாம் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம், ஆனால் வீரர்கள் ஏற்றுக் கொண்டார்களேயானால் இதே முறை தொடர்வதில் பிரச்சினைகள் இல்லை” என்றார் ஜோ ரூட்.

அடுத்த ஐசிசி கூட்டத்தில் இந்த ‘நியூட்ரல் அம்பயர்’ முறை குறித்து கடும் விவாதங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x