Published : 07 Aug 2019 05:42 PM
Last Updated : 07 Aug 2019 05:42 PM
கயானா,
கயானாவில் நாளை நடைபெறும் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்திலும் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது
மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று வொயிட்வாஷ் செய்து இந்திய அணி அபாரமான நம்பிக்கையுடன் ஒருநாள் தொடரை நாளை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டம் கயானாவில் நாளை பகல் ஆட்டமாக நடக்கிறது.
உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் முன்பில் இருந்து 4-ம் இடத்தில் யாரை களமிறக்கலாம் என் பல்வேறுசோதனை முயற்சிகளை கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் செய்தார்கள். ஆனால், எந்த வீரரையும் அடையாளம் காணமுடியாததால், உலகக் கோப்பைப் போட்டியில் 4-வது இடம் கேள்விக்குள்ளானது, இது இப்போதும் தொடர்கதையாகி உள்ளது.
இந்த முறையும் 4-வது இடத்துக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் மணிஷ் பாண்டே, கே..எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், கேதார் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். கூடுதல்ஆல்ரவுண்டர்கள் தேவை எனும் பட்சத்தில் மட்டுமே ஜாதவே தேர்வு செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இந்த 4 பேருக்கு இடையே கடும் போட்டி ஏற்படும்.
ஏற்கனவே டி20 தொடருக்கு ஸ்ரேயாஸ் அய்யரை தேர்வு செய்து ஒரு போட்டியில் கூட களமிறக்கவில்லை. ஆனால், மணிஷ் பாண்டே தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பில்லை.
உலகக் கோப்பைப் போட்டியில் காயத்தால் பாதியில் விலகிய ஷிகர் தவண் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். ஆதலால், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து தவண் களமிறங்குவார், 3-வது இடத்தை கோலி நிரப்புவார். இந்த 3 பேட்ஸ்மேன்களும் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி வருகின்றன.
இதில் 4-வது இடத்துக்கு கே.எல்.ராகுல் களமிறங்கவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு பின் ரிஷப் பந்த் களமிறக்கப்படுவாரா அல்லது கூடுதல் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்படும் வீரர் மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ஜாதவ் களமிறங்குவார்களா என்பது உறுதியில்லாமல் இருக்கிறது.
அணிக்குள் அதிகமான லாபி இருப்பதில், கேதார் ஜாதவ் நாளை களமிறங்க வாய்ப்புள்ளது. மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் இருவரில் ஒருவர் நாளை முடிவு செய்யப்படுவார்கள். இருவருமே சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்றாலும் ஒருநாள் போட்டிக்கு மணிஷ் பாண்டேவைக்காட்டிலும், ஸ்ரேயாஸ் அய்யர் சழலுக்கு ஏற்றார்போல் தன்னை தகவமைத்து ஆடக்கூடியவர்.
மே.இ.தீவுகள் ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், நாளை 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. புவனேஷ்வர் குமார், முகமது ஷமி இருவரும் இடம் பெறுவது உறுதி, டி20போட்டியில் அசத்திய நவ்தீப் சைனி நாளை களமிறங்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
சுழற்பந்தவீச்சில் சாஹல், குல்தீப் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கலாம். ஆல்ரவுண்டர் தேவை எனும் பட்சத்தில் ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படுவார்.
மே.இ.தீவுகள் அணியைப் பொருத்தவரை உள்நாட்டு மைதானம், உள்நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பலமாகும் இந்த தொடருடன் கெயில் ஓய்வு பெற இருப்பதால் நிச்சயம் தனது முத்திரை பதிக்கும் வகையில் விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை.
இதுதவிர இடதுகை பேட்ஸ்மேன் ஜான் கேம்பெல், ராஸ்டன் சேஸ், ஆல்ரவுண்டர் கீமோ பால், பூரண், பிராத்வெய்ட், லூயிஸ், ஹெட்மெயர், ஹோல்டர், பிராத்வெய்ட் என இந்திய அணிக்கு சவால்விடுக்கும் வகையில் பேட்டிங் வரிசை இருக்கிறது. உலகக் கோப்பைப் போட்டியிலும் இதே வீரர்கள்இருந்தாலும் அப்போது குறிப்பிடத்தகுந்த அளவில் யாரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அதேசமயம் அந்த ஆட்டத்தை வைத்து இப்போது மே.இ.தீவுகள் வீரர்களை எடைபோட முடியாது. சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக விளையாடும் திறமைபடைத்தவர்கள். மேலும், ஆடுகளம் குறித்து அறிந்திருப்பதால், பந்துவீச்சில் காட்ரெல், ஹோல்டர், தாமஸ், ரோச் ஆகியோர் இருக்கிறார்கள்.
வேகப்பந்துவீச்சில் வலிமையான அணி என்றாலும் இந்திய அணியை ஒப்பிடும்போது, பந்துவீ்ச்சில் ஒழுக்கமில்லாமல் பந்துவீசுவார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதாவது அதிகமான வைடுகள், நோபால்கள் வீசுவார்கள். இந்திய அணி வீரர்களிடம் இந்த விஷயங்கள் அதிகமாக இருக்காது.
இரு அணிகளுமே உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வி காயத்தோடுதான் களமிறங்குவதால், பரபரப்பான ஆட்டமாகத்தான் அமையும் என்று நம்பலாம்.
இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவண், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.
மே.இ.தீவுகள் அணி :
ஜேஸன் ஹோல்டர்(கேப்டன்) கிறிஸ் கெயில், ஜான் கேம்பெல், இவின் லூயிஸ், ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மெயர், நிகோலஸ் பூரண், ராஸ்டன் சேஸ், பேபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வெய்ட், கீமோ பால், ஷெல்டன் காட்ரெல், ஓஷ்னே தாமஸ், கீமர் ரோச்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT