Published : 07 Aug 2019 05:15 PM
Last Updated : 07 Aug 2019 05:15 PM

நான் எம்.எஸ்.தோனியிடமிருந்து  ‘உணர்வுப் பாடம்’ கற்றுக் கொண்டேன்: மணீந்தர் சிங்

இந்திய அணியின் உலகம் போற்றும் இடது கை ஸ்பின்னராக வருவார், பிஷன் சிங் பேடியின் அடுத்த வாரிசு என்றெல்லாம் போற்றப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணீந்தர் சிங் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சிலபல தொந்தரவுகளினால் பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி கிரிக்கெட் வாழ்க்கையும் சொந்த வாழ்க்கையும் சீரழிந்து தற்போது மீண்டு வந்துள்ளார்.

இந்திய அணிக்காக 1982-93 இடையே விட்டு விட்டு இவர் 35 டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 35 டெஸ்ட் போட்டிகளில் 88 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் 59 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெஸ்ட் போட்டியில் 27 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை ஒருமுறை கைப்பற்றினார். இந்த எண்ணிக்கை காட்டுவதையெல்லாம் விட மிகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர். ஜாவேத் மியாண்டட், விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களே இவரை விதந்தோதியுள்ளனர்.

விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு முறை இவரது பந்து வீச்சை ஆடிவிட்டு ‘செஸ்’ ஆடுவது போல் உள்ளது இவரது பந்து வீச்சை ஆடுவது என்று புகழ்ந்தார். ஆனால் திடீரென அவருக்கு பவுலிங் மறந்து போனது, அவரது அருமையான அந்த ஆக்சனை மறந்தே போனார், பெரிய காய்ச்சல் வந்து 4 மாதங்கள் கிரிக்கெட் ஆடாமல் பவுலிங்கை மறந்து கிரிக்கெட் வாழ்க்கையைத் தொலைத்தார், போதை மருந்து, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையையும் தொலைத்து இப்போது தான் மீண்டு வந்துள்ளார்.

30 வயதில் ஓய்வு அறிவித்தார். இந்தியா ஒரு நல்ல பவுலரை இழந்தது. ஷேன் வார்ன் அளவுக்கு வந்திருக்க வேண்டிய பவுலர் வீண்போனார்.

பாக். வீரர் இஜாஜ் அகமெட் மணீந்தர் பந்தில் பவுல்டு, பின்னால் சந்திரகாந்த் பண்டிட், விக்கெட் கீப்பர் சதானந்த் விஸ்வநாத்

அவர் கிரிக்கெட் மந்த்லி என்ற இதழுக்கு அளித்த விரிவான பேட்டியில் தான் கடந்து வந்த பாதை, சோதனைகள், சவால்கள், கிட்டத்தட்ட பித்த நிலைக்குச் சென்று திரும்பியது என்று அனைத்தையும் பேசியுள்ளார்.

அதில் உணர்வுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது, எப்படி அமைதியாக இருப்பது என்பதைக் கற்றுக்கொண்டேன் என்று கூறும் இடத்தில் எம்.எஸ்.தோனியைக் குறிப்பிட்டார்.

“இன்று நான் ஒரு நல்லமனிதனாக இருக்கிறேன். உணர்வு ரீதியாக பெரிய அளவில் முன்னேறியிருக்கிறேன். எனக்கு கோபமே வராது என்று கூறவில்லை, ஆனால் எப்படி அமைதி காப்பது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டேன்.

மற்றவர்களிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டேன். எம்.எஸ்.தோனியிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன். நான் அவரை ஒரேயொரு முறைதான் சந்தித்தேன். ஆனால் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் அவர் அமைதியாக இருப்பதை கண்டு வியந்தேன், அதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

அமைதியாக இருந்தால் நல்ல முடிவுகளை வாழ்க்கையில் எடுக்க முடியும் நல்ல முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும் என்று நான் கற்றுக் கொண்டேன்” என்றார் மணீந்தர் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x