Published : 25 May 2014 11:38 AM
Last Updated : 25 May 2014 11:38 AM
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரோலன்ட் கேர்ரஸில் இன்று தொடங்குகிறது.
பிரெஞ்சு ஓபனில் 8 முறை பட்டம் வென்று முடிசூடா மன்னனாகத் திகழும் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 9-வது முறையாக பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிரெஞ்சு ஓபன் என்றாலே அதில் நடால்தான் சாம்பியனாவார் என டென்னிஸ் ரசிகர்கள் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையை நடாலும் வீணடித்ததில்லை.
வழக்கம்போல் இந்த முறையும் நடால் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும்கூட, சமீபத்தில் நடைபெற்ற ரோம் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் அவர் தோல்வி கண்டது அவருடைய ரசிகர்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் தங்களின் நாயகன் நடால், முழு பலத்தோடு விளையாடி சமீபத்திய சரிவுகளிலிருந்து மீள்வார் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நடால் தனது முதல் சுற்றில் அமெரிக் காவைச் சேர்ந்த மூத்த வீரரான ராபி ஜினெப்ரியை சந்திக்கிறார். இவர் வைல்ட்கார்ட் வீரர் ஆவார். 27 வயதாகும் நடால் 2005-ல் முதல்முறையாக பிரெஞ்சு ஓபனில் களமிறங்கினார்.
அது முதல் தொடர்ச்சி யாக 9 ஆண்டுகள் விளையாடி யுள்ள அவர், 2009 நீங்கலாக அனைத்து ஆண்டு களிலும் பட்டம் வென்றுள்ளார். இங்கு மொத்தம் 60 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 2009-ல் ராபின் சோடர்லிங்குக்கு எதிராக மட்டுமே தோல்வி கண்டுள்ளார்.
நடால் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்று மற்றும் காலிறுதி சுற்றுகளில் முறையே சகநாட்டவர்களான அல்மாக்ரோ, டேவிட் ஃபெரர் ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளது. அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா அல்லது பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை நடால் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் 4-ம் நிலை வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது முதல் சுற்றில் ஸ்லோவேகியாவின் தகுதிநிலை வீரரான லூகாஸ் லேகோவை சந்திக்கிறார். ஃபெடரர் தனது காலிறுதியில் உலகின் 6-ம் நிலை வீரரான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்க வாய்ப்புள்ளது.
மற்றொரு காலிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் கனடாவின் மிலோஸ் ரயோனிச் அல்லது ஜப்பானின் நிஷிகோரி மோதுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. உத்தேசமாக அரையிறுதியில் ஃபெடரரும், ஜோகோவிச்சும் மோத வாய்ப்புள்ளது.
பிரெஞ்சு ஓபனில் இதுவரை பட்டம் வெல்லாத குறையைத் தீர்க்க ஜோகோவிச் இந்த முறை போராடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. சமீப காலமாக களிமண் தரைகளில் அபாரமாக ஆடி வரும் ஜோகோவிச்சுக்கு பிரெஞ்சு ஓபன் பட்டம் கிட்டுமா அல்லது நடாலின் ஆதிக்கம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மகளிர் பிரிவு
மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா தனது காலிறுதியில் ரஷியாவின் மரியா ஷரபோவா அல்லது ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவுடன் மோதலாம். மற்றொரு காலிறுதியில் போலந்தின் அக்னீஸ்காவும், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரும் மோத வாய்ப் புள்ளது.
மற்றொரு பாதி டிராவைப் பொறுத்தவரையில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நாவும், செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவும் அரையிறுதியில் சந்திக்க வாய்ப்புள்ளது.
ரூ.199 கோடி பரிசு
இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.199 கோடி யாகும். ஆடவர், மகளிர் என இரண்டிலும் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர் களுக்கு தலா ரூ.13 கோடி ரொக்கப் பரிசாகக் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT