Published : 05 Aug 2019 12:39 PM
Last Updated : 05 Aug 2019 12:39 PM

டி20 தொடரை வென்றது இந்தியா: மூன்றாவது ஆட்டத்தில் ரிஷப்பந்த்துக்கு பதிலாக ராகுலா? கோலி சூசகம்

லாடர்ஹில்,

லாடர்ஹில்லில் நேற்று நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 22 ரன்களில் இந்திய அணி வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது.

மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி சூசகமாகத் தெரிவித்தார்.

லாடர்ஹில் நகரில் நேற்று மே.இ.தீவுகள் மற்றும் இந்திய அணி மோதும் 2-வது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 

அதிகபட்சமாக ரோஹித் சர்மா 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தவாண் 23, கோலி 28 ரன்களில் வெளியேறினார்கள். அதன்பின் வந்த ரிஷப் பந்த் 4 ரன்னிலும், மணிஷ் பாண்டே 6 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். குர்னால் பாண்டியா 20 ரன்னிலும், ஜடேஜா 9 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மே.இ.தீவுகள் தரப்பில் தாமஸ், காட்ரெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து, 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. சுனில் நரேன் 4 ரன்னிலும், லூயிஸ் டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். பூரண் 19 ரன்னிலும், பாவெல் 54 ரன்கள் சேர்த்தும் குர்னால் பாண்டியா பந்து வீச்சில் வெளியேறினார்கள்.

பொலார்ட் 8 ரன்னிலும், ஹெட்மெயர் 6 ரன்னிலும் களத்தில் இருந்தபோது மேகக்கூட்டம் மழை பெய்வதுபோல் வந்து இருள் சூழ்ந்து வெளிச்சக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது மே.இ.தீவுகள் அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்திருந்தது. இந்தியத் தரப்பில் குர்னால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் போட்டி நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 22 ரன்களில் இந்திய அணி வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆட்டநாயகனாக குர்னால் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

டி20 தொடர் வெற்றிக்குப் பின் கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், "வெற்றி பெறுவதுதான் எப்போதும் எங்களின் நோக்கம். ஆனால் இந்தத் தொடர் வெற்றி பல வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. ஆடுகளம் நன்றாக இருந்தது. பந்து பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வந்ததால், விளையாடுவதற்கு எளிதாக இருந்தது. 

தொடக்க வீரர்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். இறுதியில் குர்னால் பாண்டியாவும், ஜடேஜாவும் நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள். ஆனால்,  10 ஓவர்களுக்குப் பின் ஆடுகளத்தில் மாற்றம் ஏற்பட்டதால் அடித்து ஆட முடியவில்லை.

மூன்றாவது போட்டியில் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, புதிய விஷயங்கள் பரிசோதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இரு போட்டிகளிலும் களமிறங்காத ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் சாஹர், தீபக் சாஹர் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. 

அதேபோல, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இரு போட்டிகளிலும் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பதால், அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக நியமித்து ரிஷப்பந்தை வெளியே அமரவைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x