Published : 02 Aug 2019 05:23 PM
Last Updated : 02 Aug 2019 05:23 PM
லாடர்ஹில்,
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நாளை (3-8-19) நடக்கும் டி20 போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தும் முனைப்பில் எதிர்கொள்கிறது இந்திய அணி.
உலகக் கோப்பைப் போட்டி தோல்விக்குப்பின் ஹர்திக் பாண்டியா, பும்ரா, தோனி ஆகியோருக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது.
ஆனால், இன்னும் பல முன்னணி வீரர்களின் ஆக்கமிரமிப்பு அணியில் இருப்பதால், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே ஆகியோர் நாளைய ஆட்டத்திலும் பெஞ்சில் அமர வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் விளையாடும் இந்திய அணியின் நோக்கமே, அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் பிசிசிஐ தயாராகி வருகிறது.
இந்தத் தொடருக்கு முன்பாகவே இந்திய ஏ அணி மேற்கிந்தியத்தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் மணிஷ் பாண்டேவும், ஸ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாகவே செயல்பட்டார்கள். இவர்கள் இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
ஆனால் பலமுறை இருவரும் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டும் முறையான வாய்ப்பு வழங்கப்படாமல் தொடர்ந்து பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டனர். கடைசியாக கடந்த ஆண்டு நவம்பரில் மணிஷ் பாண்டேவும், பிப்ரவரி மாதம் ஸ்ரேயாஸ் அய்யரும் இந்திய அணியில் இடம் பெற்றனர். இருவரும் அதன்பின் இந்திய அணியில் விளையாடவில்லை.
இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் மூத்த வீரர்கள் தங்களின் பேட்டிங் திறமையை வலுவாக வெளிப்படுத்துவதும் இளம் வீரர்கள் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட காரணமாக இருக்கிறது
தொடக்க வரிசையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் என ஃபார்மில் உள்ள வீரர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை.
உலகக்கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த ரோஹித் சர்மா, சதம் அடித்து காயத்துடன் வெளியேறிய தவண், 6 அரைசதம் அடித்த கோலி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே மைதானத்தி்ல் சதம் அடித்த ராகுல் என ஒவ்வொருவரும் தங்களின் பேட்டிங் ஃபார்மை குறையாமல் வைத்துள்ளார்கள்.
6-வது வீரராக ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது நாளைதான் தெரியும். ஏனென்றால், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவிந்திர ஜடேஜா, குர்ணல் பாண்டியா, இருவர் இருப்பதால் ஸ்ரேயாஸ் அய்யர், பாண்டே இருவரின் இடத்துக்கும் போட்டி இருக்கும்.
சுழற்பந்துவீச்சில் ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் இருவர் இருந்தாலும் ராகுல் சாஹருக்கே அதிகமான வாய்ப்பு வழங்கப்படும்.
பும்ரா இல்லாத நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சை வழிநடத்துவார். அவருக்கு அடுத்தாற் போல் கலீல் அகமது இடம் பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக தீபக் சாஹர் அல்லது சைனி இருவரில் ஒருவருக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இதில் தீபக் சாஹரைக் காட்டிலும் சைனி அதிவேகமாகவும் லைன் லென்திலும் பந்துவீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி இல்லாத நிலையில், ரிஷப் பந்துக்கு அதிகமான பொறுப்புகள் காத்திருக்கிறது. விக்கெட் கீப்பிங் பணியைத் தவிர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் பந்த் இருக்கிறார். களத்தில் பொறுமையாக பேட் செய்யாமல் அவசரப்பட்டு ஷாட்களை ஆடும் ரிஷப் பந்த் தனது இடத்தை தக்கவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொருத்தவரை டி20 உலகக்கோப்பைப் போட்டியின் இறுதிஆட்டத்தில் சிக்ஸர் அடித்து அணியை வெல்ல வைத்த பிராத்வெய்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலத்துக்குப்பின் சுனில் நரேன், கெய்ரன் பொலார்ட் ஆகியோர் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். ஆன்ட்ரே ரஸல் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் முழங்கால் காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை என்பதால், அவர் நாளை விளையாடுவாரா என்பது சந்தேகம் தான்.
உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமாக தோற்று லீக் சுற்றோடு வெளியேறியது.
டி20 போட்டித் தொடரில் நடப்பு சாம்பியனாக இருக்கும் மே.இ.தீவுகள் நாளை எளிதாக இந்திய அணிக்கு வெற்றியை அளித்துவிட மாட்டார்கள். வேகப்பந்துவீச்சில் பிராத்வெய்ட், காட்ரெல், பாவெல், தாமஸ், பொலார்ட் ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சுழற்பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறி்ப்பாக சுழற்பந்துவீச்சில் சுனில் நரேன், காரே பியர், ஜான் கேம்பெல் ஆகியோர் இருக்கின்றனர்.
தொடக்க ஆட்டத்தில் கேம்பெல், லூயிஸ், ஹெட்மெயர், பூரண், பொலார்ட், பாவெல்,பிராத்வெய்ட், கீமோ பால், சுனில் நரேன், காட்ரெல், தாமஸ் காரி பெய்ரே ஆகியோர் இருக்கின்றனர். இதில் காரி பெய்ரே புதிய சுழற்பந்துவீச்சாளர் என்பதால், அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறார்.
இதுவரை இந்திய அணியும், மே.இ.தீவுகள் அணியும் 11 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் இரு அணியும் தலா 5 போட்டிகளில் வென்றுள்ளன, ஒரு போட்டி முடிவில்லாமல் இருந்துள்ளது.
இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும்.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், குர்ணல் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர்,புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.
மே.இ.தீவுகள் அணி விவரம்
ஜான் கேம்பெல், எவின் லூயிஸ், ஷிம்ரன் ஹெட்மெயர், நிகோலஸ் பூரண், கெய்ரன் பொலார்ட், ரோவ்மன் பாவெல், கார்லோஸ் பிராத்வெய்ட்(கேப்டன்), கீமோ பால், சுனில் நரேன், ஷெல்டன் காட்ரெல், ஒஷேன் தாமஸ், அந்தோனி பிராம்பில், ஆனட்ரூ ரஸல், காரே பியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT