Published : 02 Aug 2019 12:37 PM
Last Updated : 02 Aug 2019 12:37 PM
எட்ஜ்பாஸ்டன்,
ஸ்டீவ் ஸ்மித்தின் அற்புதமான சதம், ஆர்ப்பாட்டமில்லா ஷாட்கள், அர்ப்பணிப்பான ஆட்டம் ஆகியவற்றால், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல்நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் சேர்த்துள்ளது. பர்ன் 4 ரன்களுடனும், ராய் 6 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை ஒற்றை வீரராக சரிவில் இருந்து மீட்டு மிகப்பெரிய ஸ்கோரை அடைவதற்கு காரணமானவர் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே. அவரின் நேற்றைய ஆட்டம் ஆகச்சிறந்தது.
ஸ்மித் 219 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 144 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரில் பாதிக்கும் மேற்பட்ட ரன்களை ஸ்மித் மட்டுமே சேர்த்தார்.
மற்றபடி சொல்லிக்கொள்ளும் வகையில் ஆஸியின் எந்த முக்கிய பேட்ஸ்மேன்களும் விளையாடவில்லை. 2-வது அதிகபட்சம் என்பது டெய்ல்எண்டர் பேட்ஸ்மேன் பீ்ட்டர் சிடில் சேர்த்த 44 ரன்கள் தான்.
சச்சின், கோலி சாதனை முறியடிப்பு
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 9-வது சதத்தை நேற்று ஸ்மித் நிறைவு செய்தார், மேலும், டெஸ்ட் அரங்கில் ஸ்மித் அடிக்கும் 24-வது சதம் இதுவாகும்.
அதுமட்டுமல்லாமல் 24-வது டெஸ்ட் சதத்தை மிகக்குறைந்த இன்னிங்ஸில் எட்டிய 2-வது பேட்ஸ்மேன் எனும் பெருமையை ஸ்மித் பெற்றார். இந்திய பேட்ஸ்மேன்கள் சுனில் கவாஸ்கர், சச்சின்(125டெஸ்ட்), விராட் கோலி(123டெஸ்ட்) ஆகியோர் 125 டெஸ்ட்களில்தான் 24-வது சதத்தை எட்டிய நிலையில் ஸ்மித் 118-வது இன்னிங்ஸில் 24-வது சதத்தை எட்டினார்.
இதன் மூலம் பேட்டிங் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு(66டெஸ்ட்) அடுத்த இடத்தில் மிக விரைவாக 24 சதங்களை அடித்த வீரர் எனும் பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆஸியின் நட்சத்திர வீரர்களான பான்கிராப்ட், வார்னர், கவாஜா, மாத்யூ வாட், பெய்ன், பட்டின்ஸன், கம்மின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களி்ல் ஆட்டமிழந்தனர்.
கன்னத்தில் விழுந்த அறை
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனையை அனுபவித்து முடித்த பின்பும் ஸ்மித்தையும், வார்னரையும் தொடர்ந்து இங்கிலாந்து ரசிகர்கள் உப்புக் காகிதம் கொண்டு கிண்டல் செய்து வருவது நாகரீகமில்லாத செயல். ஆனால், இங்கிலாந்து ரசிகர்களின் செயலுக்கு ஸ்மத்தின் சதம், அவர்களின் கன்னத்தில் அறைந்தது போன்றுதான் இருந்தது.
மாலை தேநீர் இடைவேளைக்கு முன்பாக ஸ்மித்தின் ஆட்டத்தில் பொறுமையும், நிதானமும் இருந்தது. ஆனால், அதன்பின் ஸ்மித்தின் ஆக்ரோஷமான பேட்டிங், அடித்த ஷாட்களால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
அற்புதமான ஆட்டம்
கடைசி இரு டெய்லண்டர் பேட்ஸ்மேன்களான பீட்டர் சிடில், லயான் ஆகியோரை வைத்துக்கொண்டு, 162 ரன்களை ஸ்மித் சேர்த்து ஆடிய ஆட்டம் அற்புதம்.
பீட்டர் சிடிலுடன் சேர்ந்து 88 ரன்களும், லயானுடன் சேர்ந்து 75 ரன்களும் சேர்த்தார் ஸ்மித்.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை அனாசயமாக வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் கடைசிநேரத்தில் இரு விக்கெட்டுகளை வீழ்த்த மிகுந்த சிரமப்பட வைத்தார் ஸ்மித். அதிலும் கடைசி 13 ஓவர்களில் ஸ்மித் 74 ரன்கள் சேர்த்து டி20 ஆட்டம் போல் ஆடினார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து பந்துவீ்ச்சாளர்கள் ஆன்டர்ஸன், வோக்ஸ், பிராட் ஆகியோர் மிரட்டினார்கள். 4 ஓவர்கள் வீசிய நிலையில் காயம் காரணமாக ஆன்டர்ஸன் பந்துவீச முடியாமல் வெளியேறினார். ஆனால் ஆன்டர்ஸ் இல்லாமலும் வோக்ஸ், பிராடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.
வார்னருக்கு முதல் ஓவரிலேயே பேட்டில் பட்டு பந்து சென்ற நிலையில் அதற்கு நடுவரிடம் டிஆர்எஸ் முறையை இங்கிலாந்து கேட்கவில்லை. ஆனால், லெக் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை கால்காப்பில் வார்னர் வாங்கியபோது, எல்பிடபிள்யு கொடுத்து நடுவர் வார்னரை 2 ரன்னில் வெளியேற்றது நகைச்சுவை.
வோக்ஸ், பிராட் பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய வீரர்களால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லையா என்ற சந்தேகத்தை நேற்று உருவாக்கிவிட்டனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 9 மாதங்கள் தடை பெற்ற பான்கிராப்ட் 8 ரன்னில் பிராட் பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்மித் நிதானமாக ஆடியபோதிலும் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் சரிவைத் தடுக்க முடியவில்லை. சீரான இடைவெளியில் கவாஜா(13), டிராவிஸ் ஹெட்(35), வாட்(1), டிம் பெய்ன்(5), பட்டின்ஸன்(0), கம்மின்ஸ்(5) என விக்கெட்டுகளை இழந்தனர். 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.
ஸ்மித் விஸ்வரூபம்
ஆஸ்திரேலியா நிலைமை அவ்வளவுதான் இனிமேல் கரை சேரமாட்டார்கள் என்று எண்ணி இருந்தபோதுதான் ஸ்மித் விஸ்வரூமெடுத்தார்.
9-வது விக்கெட்டுக்கு பீட்டர் சிடிலுடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார் மாலை தேநீர் இடைவேளைக்குப்பின் ஸ்மித் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். 119 பந்துகளில் அரைசதம் அடித்த ஸ்மித், 184 பந்துகளில் சதம் அடித்தார். அதாவது அடுத்த 65 பந்துகளில் 50 ரன்களை ஸ்மித் எட்டினார்.
அரைசதம் அடிக்க 119 பந்துகளை சந்தித்த ஸ்மித் அடுத்த 50 ரன்களை 65 பந்துகளில் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஸ்மித்துக்கு துணையாக சிடில் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். சிடில் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த லயானுடன் நல்ல பாட்னர்ஷிப் அமைத்த ஸ்மித் அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். கடைசி நேரத்தில் அதிரடியா ஆட்டத்தால் 144 ரன்கள் சேர்த்து ஸ்மித் ஆட்டமிழந்தார். 80.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
இங்கிலாந்துதரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், பிராட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போத்திராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT