Published : 29 Jul 2019 07:13 PM
Last Updated : 29 Jul 2019 07:13 PM

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகிறார் பிரவீண் ஆம்ரே?

சச்சின் டெண்டுல்கரின் ஆசானான மறைந்த பயிற்சியாளர் அச்ரேக்கரின் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட பிரவீண் ஆம்ரே இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளார். 

தற்போது 50 வயதாகும் பிரவீண் ஆம்ரே என்றாலே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுக டெஸ்ட் போட்டியில் எடுத்த அருமையான சதம்தான் நினைவுக்கு வரும். இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 425 ரன்களையும் அதில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களையும் எடுத்துள்ளார் ஆம்ரே. இதே தொடரில் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தவும் பிரவீன் ஆம்ரேயின் அரைசதம் உதவியதும் குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் போட்டிகளில் 37 ஆட்டங்களில் 513 ரன்களை 2 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். பேட்டிங்கில் இவரது ஸ்டான்ஸ், ஸ்ட்ரோக் ஆடும் விதம் ஆகியவை பாகிஸ்தான் வீரர் இஜாஜ் அகமெடை லேசாக நினைவுபடுத்தும். 

இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்ட ராபின் உத்தப்பா இவரைத் தனது சொந்தப் பயிற்சியாளராக தன் சொந்த செலவில் நியமித்துக் கொண்டு தன் பேட்டிங்கை மேம்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது யு.எஸ்.ஏ. அணியின் பேட்டிங் ஆலோசகராக இருக்கிறார் ஆம்ரே. சஞ்சய் பாங்கரை ஒப்பிடும்போது பிரவீண் ஆம்ரே உண்மையில் பயிற்சியாளருக்கான திறமையும் நுணுக்கமும் உடையவர் என்பதில் ஐயமில்லை. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x