Published : 29 Jul 2019 10:06 AM
Last Updated : 29 Jul 2019 10:06 AM

தோனிதான் கிரிக்கெட்டின் உத்வேகம்: சல்யூட் அடித்து மே.இ.தீவுகள் வீரர் காட்ரெல் புகழாரம் 

மே.இ.தீவுகள் வீரர் காட்ரெல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி : கோப்புப்படம்

புதுடெல்லி, 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ராணுவத்தில் கவுரவ லெப்டினென்டாகப் பணியாற்றுவதைப் பார்த்த மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் புகழாரம் சூட்டியுள்ளார். 

கிரிக்கெட்டின் உத்வேகம் தோனிதான், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்று காட்ரெல் பாராட்டி, சல்யூட் அடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெலும் ராணுவத்தில் பணியாற்றியவர். ஜமைக்கா ராணுவத்தில் பணியாற்றிவிட்டு கிரிக்கெட்டுக்கு வந்துள்ளதால், எந்த விக்கெட் எடுத்தாலும் ஆட்டமிழந்து செல்லும் வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில் களத்தில் சல்யூட் அடிப்பதை காட்ரெல் வழக்கமாக வைத்துள்ளார். உலகக்கோப்பை போட்டியில் காட்ரெலின் சல்யூட் ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்திய ராணுவ பாராசூட் ரெஜிமென்டில் தோனி, லெப்டினென்ட் அந்தஸ்தில் 2011-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது வளரும் இளைஞர்களை ராணுவப் பணியில் ஆர்வத்துடன் சேர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், அதற்கான விழிப்புணர்வாக அவர் அதைச் செய்து வருகிறார்.

மே.இ.தீவுகள் தொடரில் இருந்து தாமாக முன்வந்து விலகிய தோனி, 2 மாதங்கள் பாராசூட் ரெஜிமென்டில் சேர்ந்து பயிற்சி பெறப் போவதாகத் தெரிவித்தார். தோனி 106 பாரா டிஏ பாராசூட் ரெஜிமென்டில் முறைப்படி கடந்த 25-ம் தேதி சேர்ந்த தோனிக்கு காஷ்மீரில் பயிற்சி அளிக்கப்படஉள்ளது. 

இந்நிலையில், தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கிரிக்கெட்டுக்கு உத்வேகமான வீரர், தேசபக்தி மிகுந்தவர் தோனி. ஜமைக்காவில் அனைவரிடமும் தோனி குறித்த விவரங்களை கூறி உத்வேகத்தை அளிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

காட்ரெல் ட்விட்டரில் கூறுகையில், " கிரிக்கெட்டின் உத்வேகமாக தோனி திகழ்கிறார். தேசபக்தி மிகுந்தவரான தோனி, தன்னுடைய விளையாட்டுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய நாட்டுக்கு கடமையைச் செய்கிறார். ஜமைக்காவில் என்னுடைய நண்பர்களிடமும், இளைஞர்களிடமும் தோனி குறித்த விஷயங்களையும், உத்வேகத்தையும் எடுத்துக்கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார். 

— Sheldon Cotterell (@SaluteCotterell) July 28, 2019

மற்றொரு ட்வீட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் விருதுபெறும் தோனி குறித்த வீடியோவை காட்ரெல் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், "தோனியின் இந்த வீடியோவை எனது நண்பர்கள், குடும்பத்தாரிடம் பகிர்வேன். ஏனென்றால், ராணுவத்தில் பணியாற்றுவது எவ்வளவு கவுரவம் என்பதை நான் உணர்கிறேன் என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால், நாட்டின் மீது பற்றும், அன்பும் வைத்துள்ள கணவன், மனைவிக்கும் இடையிலான அந்த கணத்தைக் காண முடிகிறது. அனைவரும் பார்த்து ரசியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x