Published : 10 Jul 2015 02:35 PM
Last Updated : 10 Jul 2015 02:35 PM

ஜிம்பாப்வே அபாரம்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்

ஹராரேயில் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய ஜிம்பாப்வேயினால் அழைக்கப்பட்ட இந்திய அணி 5 விக்கெட்டுகளை 88 ரன்களுக்கு இழந்து கடுமையாக திணறி வருகிறது. .

24.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் என்று 3.54 என்ற ரன் விகிதத்தில் உள்ளது. பிட்ச் முதல் அரை மணி, முக்கால் மணி நேரத்துக்குச் சற்றே வேகப்பந்து வீச்சுக்கு உதவியது.

பெரிதும் எதிர்பார்த்த விஜய், திவாரி, ராபின் உத்தப்பா, கேதர் ஜாதவ் ஆகியோருடன் கேப்டன் ரஹனேயும் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரஹானேயும், முரளி விஜய்யும் களமிறங்கினர். பன்யாங்கரா ஓவர் த விக்கெட்டில் ஸ்டம்ப்களை விட்டு விலகி வைடு ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை வீசி ரஹானேயை குழப்பத்தில் ஆழ்த்தினார். பந்து அந்த கோணத்திலிருந்து உள்ளே வருகிறதா அல்லடு வெளியே செல்கிறதா என்பதை கணிக்க ரஹானே விஜய் இருவருமே திணறினர். முதல் ஓவர் அபாரமான மெய்டனாக அமைந்தது.

விஜய் 9 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்த நிலையில் இடது கை ஸ்விங் பவுலர் விட்டோரியிடம் அவுட் ஆனார். மிகச் சாதாரணமான இடது கை ஸ்விங் பவுலரின் வெளியே செல்லும் பந்து, அதனை சாதாரணமாக விட்டுவிடுவார் விஜய், இங்கு சபலம் தட்ட அதனை தொட்டார் 2-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. 4-வது ஓவரில் அம்பாத்தி ராயுடு வந்துதான் முதல் பவுண்டரியே வந்தது.

இடையே பன்யாங்கரா தனது கோணத்தால் ரஹானேயை தொடர்ந்து இன்ஸ்விங்கர், அவுட்ஸ்விங்கர் குழப்பத்தில் ஆழ்த்தி தொந்தரவு செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஒரு ஓவர் பிட்ச் பந்தில் விட்டோரியை நேராக பவுண்டரி அடித்தார் ரஹானே.

சரியான முறையில் சுறுசுறுப்பாக ஆட முடியாத இந்திய அணி 10 ஓவர்களில் 32/1 என்று இருந்தது. அதன் பிறகு ரஹானே 49 பந்துகளீல் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கல் எடுத்திருந்த போது திரிபானோ வீசிய ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை, தேர்ட்மேனில் தட்டி விட நினைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மீண்டும் ஒரு கடின உழைப்புடன் தொடங்கிய ரஹானே பாதியில் கோட்டைவிட்டார். மனோஜ் திவாரி, இவர் வாய்ப்புக்காக ஏங்கியவர், ஆனால் 14 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிபாபா பந்தில் எல்.பி.ஆனார். ஃபுட்வொர்க்கும் இல்லை, ஒன்றும் இல்லை. கால்கள் இந்த 14 பந்துகளில் நகரவேயில்லை. இதனால் அவுட் ஆனார்.

அடுத்த ஓவரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராபின் உத்தப்பா சிங்கிளை கணிக்க முடியாமல் டக் அவுட் ஆனார். அவர் விட்டோரி பந்தை ஷார்ட் கவரில் தட்டி விட்டு விரைவு சிங்கிளை எடுக்க நினைத்தார், ஆனால் சிகந்தர் ரசா வலது புறம் துரிதமாக நகர்ந்து பந்தை நேராக ஸ்டம்பில் அடிக்க ரன்னர் முனையில் உத்தப்பா ரன் அவுட்.

கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்து கிரீசில் நின்ற படியே சிபாபா பந்தை கட் செய்ய முயன்றார், எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அம்பாத்தி ராயுடு 60 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களுடன் ஆடி வருகிறார், மற்றொரு முனையில் ஸ்டூவர்ட் பின்னி 1 ரன்னுடன் ஆடி வருகிறார். சிபாபா 7 ஓவர்கள் 13 ரன்கள் 2 விக்கெட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x