Published : 22 Jul 2019 11:42 AM
Last Updated : 22 Jul 2019 11:42 AM

டெஸ்ட் போட்டி அணியில் ரோஹித் சர்மா தேவையா? பேட்டிங் தரம் மேம்பட்டு விட்டதா?

ஒருநாள் போட்டிகளில் உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்து உலக சாதனை புரிந்த ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளுக்குத் தகுதியானவரா என்பது சோதிக்கப்படாமலே வெறும் ‘லாபி’ அடிப்படையில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

உண்மையில் பிரித்வி ஷா இடம்பெற்றிருக்க வேண்டும் ரோஹித் டவுனில் கே.எல்.ராகுல் இருக்க வேண்டும், ரோஹித் சர்மா டெஸ்ட் அணிக்கு லாயக்கானவர் அல்ல. 

உலகக்கோப்பைப் போட்டிகளிலும் கூட ஏறக்குறைய 5 சதங்கள் உள்ளிட்ட இன்னிங்ஸ்களில் அவருக்கு 1-2-3 கேட்ச்கள் வரை விடப்பட்டுள்ளன என்பதையே நாம் பார்த்தோம்.  இன்னும் இடது கை வேகப்பந்து வீச்சாளரின் இன்ஸ்விங்கர் பந்துக்கு எல்.பி.யோ பவுல்டோ ஆகிறார், இன்னமும் கூட ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே 4வது ஸ்டம்பில் வீசி வெளியே எடுத்தால் எட்ஜ் செய்யும் பழக்கம் அவருக்கு இருக்கிறது. 

டெஸ்ட் போட்டிகளில் உத்தி ரீதியாக தரமான பேட்ஸ்மெனாக ரோஹித் சர்மா இருந்ததில்லை என்பதற்கு உதாரணமே 47 இன்னிங்ஸ்களில் 1585 ரன்களை 39 என்ற சராசரியில் அவர் எடுத்ததே. எந்த ரஞ்சி கிரிக்கெட்டில், துலிப் டிராபி போன்ற அதிக நாட்கள் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஸ்கோர் செய்தார் அவரை டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்ய?

இந்த ரன்களையும் 3 சதங்களையும் அவர் பெரும்பாலும் பேட்டிங் சாதக இந்திய மட்டைக்களங்களில்தான் ரோஹித் சர்மா எடுத்துள்ளார். அதுவும் பரிதாப நிலையிலிருந்த மே.இ.தீவுகள், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அடித்த ரன்களாகும் இவை. அயல்நாட்டு டெஸ்ட் ரன்களைப் பார்த்தால் இவரை ஏன் மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்தார்கள் என்ற கேள்வி இன்னும் தீவிரமாகவே எழும். அயல்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 816 ரன்களை 26 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

எப்படி இவரைத் தேர்வு செய்ய முடியும்? அதே போல் டெஸ்ட் அணியில் விருத்திமான் சஹாவைத் தேர்வு செய்தது. எதிர்காலத்தை நோக்கிய தேர்வு எனில் இஷான் கிஷன் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும், சஞ்சு சாம்சனுக்கு டி20 அணியிலும் இடமில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இந்திய அணியில் ‘லாபி’ இருந்தால் மட்டுமே இடம்பெற முடியும் என்று தெரிகிறது. 

ஒருநாள், டி20 போல் அல்லாது, டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா ஒரே நிலையில் நின்ற படி ஆட முடியாது. பவுலிங் சாதக ஆட்டக்களங்களில் பின்னாl செல்வதும், முன்னால் செல்வதும் பேட்ஸ்மெனின் டைமிங்கை முடிவு செய்வதாகும். ஆனால் ரோஹித்துக்கு முன்னால், பின்னால் சென்று ஆடுவது கடினம் என்று தெரிகிறது, நின்ற இடத்திலிருந்து விளாசும் மட்டைப் பிட்ச்களில் அவரது உத்தி சரிப்பட்டு வரும், ஆனால் இம்முறை மே.இ.தீவுகளில் இங்கிலாந்துக்கு போடப்பட்டது போல் கிரீன் டாப் பிட்ச்களைப் போடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம், அப்படிப் போடும் பட்சத்தில் ரோஹித் சர்மா நிச்சயம் ஸ்கோர் செய்வது மிகக் கடினம். 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இவர் இங்கிலாந்து அழைப்பது போல் ‘பிளாட் ட்ராக் புல்லி’தான். ஆனாலும் இங்கும் கூட சரியான பந்துகளுக்கு விரைவில் ஆட்டமிழக்கவே செய்கிறார். ஐபிஎல் போன்ற தரமற்ற கிரிக்கெட் ஆட்டங்களை அதிகம் ஆடுபவர் ரோஹித் சர்மா. அதனாலேயே அவரது உத்தி உயர்மட்ட டெஸ்ட்பவுலிங்குக்கு எதிராக இன்னும் முன்னேறாமல் உள்ளது. 

எனவே ரோஹித் சர்மா தரமான டெஸ்ட் பேட்ஸ்மனாக முடியுமா என்பதே நம் கேள்வி? இவருக்குப் பதில் இளம் வீரரைத் தேர்வு செய்தோ, இன்னொரு ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்தோ வளர்ப்பதுதானே சரியான தொலை நோக்குப் பார்வையாக இருக்க முடியும்?

தொலைநோக்குப் பார்வையாவது ஒன்றாவது, இந்திய அணித் தேர்வை வர்த்தக சக்திகள்தானே தீர்மானிக்கிறது, இந்த நிலை நீடிக்கும் வரை இளம் வீரர்கள் வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்க்கப் போகலாம். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x