Published : 21 Jul 2019 12:12 PM
Last Updated : 21 Jul 2019 12:12 PM
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை பரபரப்பு அடங்குவதற்குள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்க இருக்கிறது. ஆனால், இது ஒரே மூச்சாக நடத்தப்படாமல் 2 ஆண்டுகள் வரையிலும் நிதானமாக நடத்தப்பட உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.
2019-ம் ஆண்டுமுதல் 2021-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகளில் 9 அணிகள் மட்டும் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.
வழக்கமாக ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. ஆனால், இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.
எத்தனை தொடர்கள்?
ஐசிசி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 9 அணிகளில் ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும், 3 டெஸ்ட் தொடர்கள் உள்நாட்டிலும், 3 தொடர்களை வெளிநாட்டிலும் சென்று ஒரு அணி விளையாட வேண்டும்.
தங்களுக்கு பிடித்த, புரிந்துணர்வு கொண்ட 6 அணிகளைத் தேர்வு செய்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு அணி விளையாடிக் கொள்ளலாம். ஒரு டெஸ்ட் தொடர்(Testseries) எத்தனை ஆட்டங்கள் கொண்டதாகவும் இருக்கலாம்.
உதாரணமாக, 3 ஆட்டங்கள் கொண்ட தொடராகவோ, ஆஷஸ் போன்று 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடராகவோ இருக்கலாம்.
ஆனால், இது முழுமையான “ரவுண்ட் ராபின்” முறை எனச் சொல்லமுடியாது. ஏனென்றால், 9 அணிகளில் ஒரு அணி 8 அணிகளுடன் விளையாடினால் மட்டுமே அது ரவுண்ட்ராபின் சுற்று, ஆனால், இதில் அவ்வாறு இல்லை.
9 ஆண்டுகளுக்குப்பின்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்துவதற்கு ஐசிசி கடந்த 2010-ம் ஆண்டே அனுமதியளித்துவிட்டது. ஆனால், கடந்த 2013, 2017-ம் ஆண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு அது ரத்து செய்யப்பட்டது. இப்போது 9 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் வெற்றிகரமாக தொடங்க உள்ளது.
எப்போது தொடக்கம்?
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பாரம்பரிய "ஆஷஸ் டெஸ்ட் தொடர்" வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இங்கிலாந்தில் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடங்கி அடுத்தடுத்த நாடுகள் தொடர்ந்து விளையாட உள்ளன.
2019 முதல் 2021-ம் ஆண்டுவரை நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் 9 அணிகள் பங்கேற்று மொத்தம் 72 போட்டிகளில் விளையாட உள்ளன.
எவ்வளவு புள்ளிகள்?
ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். ஒரு அணி அதிகபட்சமாக 6 தொடர்கள் மூலம் 720 புள்ளிகள் பெற முடியும்.
புள்ளிகள் கணக்கீடு எப்படி?
2 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள் வீதம் 2 போட்டிகளுக்கு 120 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி “டை”யில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 30 புள்ளிகளும். முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தால் தலா 20 புள்ளிகளும் வழங்கப்படும்
1. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகளும், “டை”யில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 20 புள்ளிகளும். முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தால் தலா 13.3 புள்ளிகளும் வழங்கப்படும்
2. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 30 புள்ளிகளும், “டை”யில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 15 புள்ளிகளும். முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தால் தலா 10 புள்ளிகளும் வழங்கப்படும்
3. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 24 புள்ளிகளும், “டை”யில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 12 புள்ளிகளும். முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தால் தலா 8 புள்ளிகளும் வழங்கப்படும்.
4. அதிகமான புள்ளிகளைப் பெறும் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் மோதும்.
ஆஷஸ் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வருகிறதா?
ஆகஸ்ட் 1-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் தொடங்கும்போது, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் தொடங்கிவிடும்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 நாடுகள் டெஸ்ட் போட்டியில் விளையாகின்றன. இங்கிலாந்து, ஆஸி. மோதும் ஆஷஸ் தொடர், நியூஸிலாந்து, இலங்கை அணிகள் இடையே டெஸ்ட் தொடர், இந்தியா, மே.இ.தீவுகள் இடையே டெஸ்ட் தொடர் நடக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டியலிடப்படாத ஆட்டங்களும் நடக்குமா?
ஆம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டியலிடப்படாத போட்டிகளும் நடக்கும். உதாரணமாக, இங்கிலாந்து அணியின் விருப்பப்பட்டியலில் நியூஸிலாந்து அணி இல்லை. இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இங்கிலாந்து அணி மோதாது.
ஆனாலும், இந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் அல்லாத போட்டியில் விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விமர்சனங்கள் ஏதும் இருக்கிறதா?
ஆம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரை பரவலான கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள், முன்னாள் வீரர்கள் வரவேற்றபோதிலும் சில விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.
இது முழுமையான ரவுண்ட் ராபின் சுற்றாக இல்லை. அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் மோதுமாறு வைக்காமல், தங்களுடன் புரிந்துணர்வு கொண்ட அணியுடன் மட்டுமே மோதுகின்றன . குறிப்பாக வலிமையான அணிகளோடு விளையாடுவதை தவிர்த்து, தங்களுக்கான எளிதான சுற்றை அமைத்துக்கொள்வதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
உள்நாட்டில் 3 தொடர்களிலும், வெளிநாட்டில் 3 தொடர்களிலும் ஒரு அணி விளையாட வேண்டும் என சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் அதிகமான போட்டிகளில் ஒரு அணி விளையாட நினைத்தாலும் முடியாத சூழல், சிக்கல் ஒரு அணிக்கு இருக்கிறது . இதுபோன்ற விமர்சனங்கள் எழுகின்றன.
இறுதிப்போட்டி சமனில் முடிந்தால் என்ன செய்வது?
உலகக்கோப்பை போன்று இறுதிப்போட்டி சமனில் முடிந்தால், நிச்சயம் பவுண்டரிகள் அடிப்படையில் யார் சாம்பியன் என்று நிர்ணயிக்கப்படாது. கடந்த 2 ஆண்டுகளில் அதிகமான முறை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் எந்த அணி இருக்கிறது என்பதை கணித்து சாம்பியன்ஷிப் முடிவு செய்யப்படும்.
யார், யாருடன் மோதல் பட்டியல்
தரவரிசை |
அணிகள் |
டெஸ்ட் |
உள்நாட்டுபோட்டிகள் |
வெளிநாட்டு போட்டிகள் |
தவிர்க்கும் அணிகள் |
1 |
இந்தியா |
18 |
10(தெ.ஆப்பி, வங்க.,இங்கி.) |
8(மே.இ.தீவுகள், நியூஸி, ஆஸி. |
பாக். இலங்கை |
2 |
நியூஸி. |
14 |
7(இந்தியா,மே.இ.தீவுகள், பாக்.) |
7(இலங்,வங்கம். ஆஸி.) |
இங்கி., தெ.ஆப்பி. |
3 |
தெ.ஆப்பி |
16 |
9(இங்கி,இலங்,ஆஸி) |
7(மே.இ.தீவுகள், பாக். இந்தியா) |
நியூஸி, வங்கம் |
4 |
இங்கி. |
22 |
11(ஆஸி. மே.இ.தீவுகள், பாக்) |
11(தெ.ஆப்பி, இலங்,இந்தியா) |
நியூஸி, வங்கம் |
5 |
ஆஸி. |
19 |
9(பாக்., நியூஸி., இந்தியா) |
10(தெ.ஆப்பி, இங்கி, வங்கம்) |
இலங்கை, மே.இ.தீவு |
6 |
இலங்கை |
13 |
7(இங்கி,நியூஸி., வங்கம்) |
6(மே.இ.தீவுகள், பாக். தெ.ஆப்பி) |
இந்தியா, ஆஸி. |
7 |
பாகிஸ்தான் |
13 |
6(இலங்கை,வங்கம், தெ.ஆப்பி) |
7(ஆஸி., நியூஸி, இங்கி.) |
இந்தியா, மே.இ.தீவு |
8 |
ேம.இ.தீவுகள் |
15 |
6(இந்தியா, இலங்கை, தெ.ஆப்பி) |
9(இங்கி., நியூஸி., வங்கம்) |
ஆஸி. பாக். |
9 |
வங்கதேசம் |
14 |
7(நியூஸி,ஆஸி., மே.இ.தீவு) |
7(இலங்,பாக். இந்தியா) |
இங்கி, தெ.ஆப்பி |
இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளின் பட்டியல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT