Published : 17 Jul 2019 03:27 PM
Last Updated : 17 Jul 2019 03:27 PM

தோனி மே.இ.தீவுகள் கிரிக்கெட் தொடருக்குத் தேர்வு செய்யப்படுவாரா? ஜூலை 19ம் தேதி முடிவெடுக்கும் தேர்வுக்குழு

உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இந்திய அணி பிரமாதமாக ஆடினாலும் அரையிறுதியில் வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கும், ஏன் கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி உள்ளிட்ட வீரர்களுக்குமே பெரிய மனவருத்தமே. ஆனாலும் தொடர் முழுதும் விவாதங்கள் தோனியைப் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தன. 

இந்நிலையில் ஆகஸ்ட் 3 முதல் செப்.4ம் தேதி வரை இந்திய அணி மே.இ.தீவுகளில் பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருக்கிறது. 

இதில் அணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது, குறிப்பாக ஒருநாள், டி20 அணிகளில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 உலகக்கோப்பை ஆகியவற்றை மனதில் கொண்டு சிலபல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தோனியின் இடம்பற்றிய கேள்வி மீண்டும் எழுந்துள்ளது, தன்னுடைய முடிவு என்னவென்பதை தோனி அணி நிர்வாகத்தினரிடையே இன்னும் பேசவில்லை என்று தெரிகிறது, அணி நிர்வாகமும் அவரிடம் பேசியதாகத் தெரியவில்லை. 

கடந்த 12 மாதங்களாக தோனியின் இடம் பற்றிய விவாதங்கள் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் உலகக்கோப்பையில் அவரது இடம் பற்றிய கேள்வி சூடுபிடித்தது, அவரது சமீபத்திய பேட்டிங் ஸ்டைல் மீது சச்சின் டெண்டுல்கரே விமர்சனம் செய்ய நேரிட்டது. தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவுக்கு கதவுகள் மூடப்படும் நிலையில் தோனியின் இடம்மட்டும் நிரந்தரமா என்ற கேள்விகள் பலதரப்பிலும் எழுந்துள்ளன. ஏனெனில் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் அடுத்த நகர்வுக்காக காத்திருக்கின்றனர். 

வெளிப்படையாக தோனியிடம் பேச வேண்டிய நிர்பந்தமும் காலமும் ஏற்பட்டுள்ளது.  மேலும் வீரர்களின் பணிச்சுமையையும் இந்திய தேர்வுக்குழுவினர் முடிவு செய்ய  வேண்டியிருக்கிறது, பும்ரா, ஷமி ஆகியோருக்கு போதிய ஓய்வு அளிப்பதையும், சாஹல், குல்தீப் ஆகியோருக்கு நிரந்தர இடங்கள் பற்றிய கேள்வியும் உள்ளது. 

ஷ்ரேயஸ் கோபால், மயங்க் மார்கண்டே, நவ்தீப் சைனி ஆகியோரது இடங்கள் பற்றியும் பேச வேண்டியுள்ளது, மேலும் வருண் ஆரோனும் தற்போது பிரமாதமான இன்ஸ்விங்கருடன் தயாராக இருக்கிறார். மேலும் விதர்பா அணியின் வேகப்பந்து வீச்சாளரும் பெரிய இன்ஸ்விங்கர் பவுலருமான ரஜ்னீஷ் குர்பானி போன்றோருக்குக் கதவுகள் திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதே போல் ஒருநாள் போட்டிகளில் 4ம் நிலைக்கு நல்ல உத்தியுடன் ஆடக்கூடிய ரஹானே அல்லது புஜாரா அல்லது ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரும் பரிசீலிக்கப்படுவுள்ளார்கள் என்று தெரிகிறது. விஜய் சங்கர் தனது காயங்களை சரியாக நிர்வகிக்கவில்லை எனில் அவருக்கும் வாய்ப்புகள் பிரச்சினையாகும் என்றே தெரிகிறது. 

ஷிகர் தவண், விஜய் சங்கர் ஆகியோரது காயங்களையும் பிசிசிஐ பரிசீலிக்கவுள்ளது. இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது  காயத்திற்குப் பிறகான மறுவாழ்வு முகாமில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் வரும் நாளை மறுநாள் ஜூலை 19ம் தேதி இந்திய அணித்தேர்வுக்குழுவினர் தோனி, உள்ளிட்டோர் குறித்த முடிவுகளுடன் சந்திக்கவிருக்கின்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x