Published : 15 Jul 2019 03:25 PM
Last Updated : 15 Jul 2019 03:25 PM
புதுடெல்லி பிடிஐ
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியை பவுண்டரியை வைத்து தீர்மானிப்பதா, என்ன கேலி பண்ணுகிறதா ஐசிசி, இதெல்லாம் விதிமுறையா என்று முன்னாள் வீரர்களும், நியூஸிலாந்து ஊடகங்களும் கடுமையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை(ஐசிசி) சாடியுள்ளன.
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்க்க, நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் சேர்த்து சமனில் முடிந்தது. பவுண்டரி அதிகமாக அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகள் அடித்த நிலையில், நியூஸிலந்து 17 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தது.
பிராதான ஆட்டமும் சமனில் முடிந்தது, சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதனால் வெற்றியாளரைக் கண்டுபிடிக்க அதிகமான பவுண்டரிகள் அடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்குவது என்று ஐசிசி விதிமுறைகளில் இருந்ததால் இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது.
அதிகமான பவுண்டரிகள் அடித்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கும் ஐசிசியின் விதிமுறையை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நியூஸிலாந்து முன்னாள் வீரரும், ஆல்ரவுண்டருமான ஸ்காட் ஸ்டைரிஸ் ட்விட்டரில் கூறுகையில், " அருமையாக வேலை பார்க்கிறீங்க ஐசிசி... உங்கள் செயல் நகைச்சுவையாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ட்விட்டரில் கூறுகையில், " டக்வொர்த் லூயிஸ் விதி என்பது விக்கெட் இழப்பு ரன்கள் சேர்ப்பு அடிப்படையில் அமைந்தது. ஆனால், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பவுண்டரியை அடிப்படையாக வைத்து முடிவு எடுப்பதா. என்னைப் பொருத்தவரை இது நேர்மையான முடிவு அல்ல " எனத் தெரிவித்தார்.
நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் டியான் நாஷ் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " இறுதிப்போட்டியின் முடிவுகள் ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். இந்த முடிவு ஒன்றுமில்லாததுபோல், ஏமாற்றிவிட்டதைப் போல் இருக்கிறது. பவுண்டரி அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்கும் முடிவு, கேலிக்குரியது. உண்மையில் ஐசிசியின் இந்த விதிமுறை கேட்பதற்கை நகைப்புக்குரியதாக இருக்கிறது.
இந்த போட்டித் தொடருக்கு முன்பாக ஐசிசி விதிமுறைகள் குறித்து யாரும் எந்தவிதமான புகாரும் தெரிவிக்கவில்லை. மக்களின் பார்வையில் இருந்து ஐசிசி இந்த விதிமுறைகளைப் பார்க்க வேண்டும். பிரதானப் ஆட்டத்திலும் சமன், சூப்பர் ஓவரிலும் சமன் அப்படியென்றால் வெற்றி வாய்ப்பு யாருக்கு.
உங்களால் கடைசிநேரத்தில் இதுகுறித்து புகார் அளிக்க முடியாது. போட்டி தொடக்கத்திலேயே இதுபோன்ற கேலியான விதிமுறையை பற்றி புகார் அளித்திருக்க வேண்டும். அதிகமான பவுண்டரிகள் எடுத்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கொடுத்ததைப் போல், அதிகமான விக்கெட்அல்லது ஆல்அவுட் ஆக்கிய அணிக்கு ஏன் அதே வெற்றி வாய்ப்பை ஏன் வழங்கவில்லை " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூஸிலாந்து முன்னாள் வீரர் மில்ஸ் ட்விட்டரில் கூறுகையில், " இந்த போட்டியின் முடிவு ரன்கள், விக்கெட்டுகள் அடிப்படையில் கணக்கிட வேண்டும். ரன்களில் இரு அணிகளும் சமனில் இருக்கும்போது, விக்கெட் வீழ்த்தியதில் எந்த அணி முன்னணியில் இருக்கிறது என்பதைத்தான் பார்த்திருக்க வேண்டும். அதை கவனிக்கதவறிவிட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT