Last Updated : 09 Jul, 2015 09:33 AM

 

Published : 09 Jul 2015 09:33 AM
Last Updated : 09 Jul 2015 09:33 AM

விம்பிள்டன் டென்னிஸ் 10-வது முறையாக அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார். விம்பிள்டனில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஃபெடரர் 10-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவர் அரையிறுதிக்கு முன்னேறுவது இது 37-வது முறையாகும்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் ரோஜர் ஃபெடரர் 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜில்ஸ் சைமனை தோற்கடித்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி தங்களின் காலிறு தியில் 5-7, 6-4, 7-6 (9), 7-6 (5) என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசை யில் முதலிடத்தில் இருந்த அமெரிக் காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடிக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது.

2 மணி நேரம், 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அசத்தலாக கைப்பற்றிய பிரையன் சகோதரர்கள் அடுத்த செட்டை மிக எளிதாக இழந்தனர். இதன்பிறகு நடைபெற்ற 3 மற்றும் 4-வது செட்களில் இரு ஜோடியும் கடுமையாகப் போராட, அந்த செட்கள் டைபிரேக்கர் வரை சென்றது.

அதில் விடாப்பிடியாக போராடிய போபண்ணா-மெர்ஜியா ஜோடி அந்த செட்களை கைப்பற்றி வெற்றி கண்டது. இதனால் விம்பிள்டனில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரையன் சகோதரர்கள் காலிறுதியோடு வெளியேற நேர்ந்தது. இந்த ஆட்டத்தில் போபண்ணா-மெர்ஜியா ஜோடி 17 ஏஸ் சர்வீஸ்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் போபண்ணா ஜோடி தங்களின் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் எட்வர்ட் ஜூலியன் ரோஜர்-ருமேனியாவின் ஹாரியா டீக்கா ஜோடியை சந்திக்கிறது. இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 6-4, 6-3, 7-6 (2) என்ற நேர் செட்களில் போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கி-செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக் ஜோடியைத் தோற்கடித்தது.

அரையிறுதியில் செரீனா

மகளிர் ஒற்றையர் காலிறுதி யில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பெலார ஸின் விக்டோரியா அசரென்காவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். செரீனா தனது அரையிறுதியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை சந்திக்கிறார்.

மற்றொரு காலிறுதியில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 7-6 (3), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் அக்னீஸ்கா தனது அரையிறுதியில் ஸ்பெயி னின் கார்பைன் முகுருஸாவை சந்திக்கிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x