Last Updated : 21 Jul, 2015 02:29 PM

 

Published : 21 Jul 2015 02:29 PM
Last Updated : 21 Jul 2015 02:29 PM

சாம்பியன்ஸ் லீக் டி20 ரத்து செய்யப்பட்டதால் இழப்பு யாருக்கு?

ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ததால் பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கு எந்த வித இழப்பும் இல்லை.

மற்ற அயல் உள்நாட்டு அணிகளுக்கே இழப்பு ஏற்படும். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ பத்தியாளார் ஃபிர்தூஸ் மூண்டா எழுதிய விவரங்கள் வருமாறு:

இந்தியா அல்லாத பிற அயல் உள்நாட்டு அணிகளுக்கு சாம்பியன்ஸ் லீக் மூலம் 3 விதமான வருவாய் கிட்டும். பங்கேற்புத் தொகையாக அணிக்கு தலா 5 லட்சம் டாலர்கள் கிடைப்பதோடு, பரிசுத் தொகை மற்றும் வீரர் ஒருவர் தனது சொந்த உள்நாட்டு அணியை விட்டு ஐபிஎல் அணிக்கு விளையாட முடிவெடுத்தால் 1,50,000 டாலர்கள் கிடைக்கும்.

வாரியங்களுக்கு என்ன கிடைக்கும்?

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட்டின் முக்கிய வாரியங்களான பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. மாறாக செட்டில்மெண்டில் பிசிசிஐ-க்கு 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். ஐபிஎல் அணிகளுக்கும் ஒன்றும் பெரிய இழப்பு இல்லை.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு செட்டில்மெண்டாக 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் 60 மில்லியன் டாலர்கள் கிடைக்கும். ஆனால் டி20 அணிகளை நடத்தும் உரிமையாளர்களுக்கு சாம்பியன்ஸ் லீக் ரத்து செய்யப்பட்டதால் கவலை ஏற்பட வாய்ப்புள்ளது. தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக் அணி உரிமையாளர்களுக்கு சாம்பியன்ஸ் லீகிலிருந்து வரும் வருவாய் மிகவும் முக்கியமானது. உள்நாட்டில் டி20 தொடரை வெல்வதன் மூலம் கிடைக்கும் தொகையை விட சாம்பியன்ஸ் லீக் பங்கேற்பு தொகை அதிகம், என்று கோப்ராஸ் அணியின் தலைமைச் செயலதிகாரி நாபீல் டயன் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் ரத்து செய்யப்பட்டதால் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 3,00,000 டாலர்களிலிருந்து 4,00,000 டாலர்கள் வரை இழப்பு ஏற்படலாம். சாம்பியன்ஸ் லீகிலிருந்து கிடைக்கும் தொகையில் பாதிக்கும் மேல் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அது முடங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை அனைத்து அணிகளையும் வாரியமே வைத்திருப்பதால் பிரச்சினைகள் அதிகம். சாம்பியன்ஸ் லீக் பங்கேற்புத் தொகை மட்டுமே 5,00,000 அமெரிக்க டாலர்கள், தவிர ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்படும் இலங்கை வீரர்களுக்கான தொகை இவை அனைத்தும் இழக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x