Last Updated : 01 Jul, 2015 09:30 PM

 

Published : 01 Jul 2015 09:30 PM
Last Updated : 01 Jul 2015 09:30 PM

இங்கிலாந்து அணி 2 மாதங்கள் தாமதமாகப் பெருமைப் படுகிறது: பிராட் ஹேடின் கிண்டல்

நியூஸிலாந்து அணிக்கு எதிராக ‘புதிய இங்கிலாந்து அணி’ ஒருநாள் தொடரில் 3-2 என்று வெற்றி பெற்று, அது பற்றி பெருமையடித்து கொள்வது ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் கேலிக்குள்ளாகியுள்ளது.

ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ‘பரம்பரை வைரிகளான’ ஆஸ்திரேலியா-இங்கிலாந்து வீரர்கள் இப்படிப்பட்ட சொற்போரில் ஈடுபடுவது வழக்கம் என்றாலும், மார்க்கெட்டிங் உத்தி என்றாலும் ஒரு அணி பெற்ற வெற்றியை கேலி பேசுவதென்பது இதுவரை இருந்ததில்லை. இப்போது இந்த புதிய டிரெண்டையும் ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.

பொதுவாக இங்கிலாந்து ஊடகங்கள், இந்திய ஊடகங்களைப் போலவே வெற்றிகளை அதற்குரிய தர நிலைகளிலிருந்து சற்று உயர்த்தி ஊதிப்பெருக்குவதும், தோற்றால் அப்படியே தரநிலைகளிலிருந்து தாழ்ந்து விமர்சனங்களில் காற்றைப் பிடுங்கி விடுவதும் நாம் பார்த்துப் பழகிய ஒன்றுதான்.

இந்நிலையில் டெஸ்ட் கேப்டன் அலிஸ்டர் குக், இங்கிலாந்து ஒருநாள் அணியின் புதிய உத்வேகத்தை டெஸ்ட் வீரர்களிடத்திலும் செலுத்துவேன் என்று கூறினாலும் கூறினார், ‘உலக சாம்பியன்’ ஆஸ்திரேலியா சும்மா இருக்குமா? இதோ சில:

பிராட் ஹேடின் கூறும்போது, “ஒருநாள் தொடர் (இங்கி-நியூஸி ஒருநாள் தொடர்) வெற்றி பற்றிய அவர்களின் ஊதிப்பெருக்கலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் இப்போதுதான் உலகக்கோப்பையுடன் வந்துள்ளோம். அவர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வடிவத்தில் அவர்கள் படாதபாடு பட்டு கடைசியாகக் கண்டடைந்த ஃபார்ம் குறித்து அவர்களது பெருமை எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. உலகக் கோப்பையில் அந்த அணி சரியாக ஆடவில்லை. இப்போதைய கொண்டாட்டம் அவர்களிடத்தில் 2 மாதங்கள் மிகதாமதமாக வந்து சேர்ந்துள்ளது.

உலகக் கோப்பையில் எங்களுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடினர். அது தொடங்கியவுடன் அவர்களுக்கு நெருக்கடியும் தொடங்கி விட்டது. இதற்கு முன்பாக அவர்கள் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆடவில்லையா என்ன? இந்தப் பெருமிதங்களெல்லாம் எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. ஒருவேளை நான் வெகுளியாக இருக்கலாம்” என்றார்.

ஷேன் வாட்சன்: இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் வழக்கத்துக்கு மாறாக ஆடியது, உண்மைதான். ஆனால், பாவம் அவர்களுக்கு இது 2 மாதங்கள் தாமதமாக கிடைத்துள்ளது. இன்னும் மூன்றரை ஆண்டுகள் அடுத்த உலகக் கோப்பைக்காக காத்திருக்க வேண்டும். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போலவே டெஸ்ட்டிலும் அவர்கள் புதிய பரிணாமம் பெறுவார்களா பார்க்கலாம். அதற்கு உண்மையில் திறமையான வீரர்கள் வேண்டும். அவர்கள் ஆட்டம் பரிணாமம் அடைந்துள்ளதா என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x