Published : 29 Jul 2015 08:57 PM
Last Updated : 29 Jul 2015 08:57 PM

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்விங்கில் 136 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது, டாஸ் வென்ற கிளார்க் பேட் செய்ய முடிவெடுத்தார். 36.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில் மைதானத்தின் பெயருக்கேற்ப ஆஸ்திரேலிய வீரர்கள் எட்ஜில் காலியாயினர். எட்ஜ்பாஸ்டனில் ஆஸ்திரேலிய வீரர்கள் ‘எட்ஜ் பேட்ஸ்மென்’ களானார்கள்.

கடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 103 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டதையடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் இங்கிலாந்தை கடுமையாகக் கேலி செய்திருந்தன, அதற்கு இங்கிலாந்து இப்போது பதிலடி கொடுத்துள்ளது, ஆனால் இங்கிலாந்து இன்று இன்னமும் குறைந்த்து 53 ஓவர்களையாவது சந்திக்க வேண்டியுள்ளது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 14.4 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 47 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் திருப்பு முனை ஏற்படுத்தியவர் மார்க் உட்டுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஸ்டீவன் ஃபின். இவர் அடுத்தடுத்து உலகின் இப்போதைய தலைசிறந்த பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோரை சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 7 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இதில் ஆண்டர்சன் மட்டும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிட்ச் பற்றி நேற்று கிளார்க் கூறும் போது பவுலிங்கை முதலில் தேர்வு செய்ய வேண்டிய பிட்ச் என்றார். இன்றும் ஷேன் வார்னும், ரிக்கி பாண்டிங்கும் பிட்ச் பற்றி அறுதியிடும் போது முதலில் பந்துவீச வேண்டிய பிட்ச் என்றார். ஆனால் மைக்கேல் கிளார்க், பிரபலமான ஆஸ்திரேலிய வழியை தேர்ந்தெடுத்தார். டாஸ் வென்றால் பேட்டிங் என்பதே அதன் தாரக மந்திரம், ஆனால் இம்முறை இங்கிலாந்தின் பிரபலமான ஸ்விங் எடுக்க, ஆஸி தாரக மந்திரம் உடைந்து நொறுங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் 52 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

தொடக்கத்திலேயே ரன் அவுட்டிலிருந்து தப்பித்த வார்னர், 2 ரன்களில் ஆண்டர்சனிடம் எல்.பி.ஆனார். மிடில் லெக்கில் பிட்ச் ஆன பந்து சற்றே நேராக, கால்காப்பில் வாங்கினார் வார்னர், அவுட் தீர்ப்பை தவறாக ரிவியூ செய்தார். வெளியேறினார். கிரீஸில் தேங்கச் செய்யப்பட்டார் வார்னர், அருமையான பந்து வீச்சு.

நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு பவுண்டரியை தைரியமாக அடித்தார். ஆனால் ஸ்டீவ் ஃபின் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் நேராக பிட்ச் செய்ய பந்து லேட் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆனது குக் கேட்ச் எடுத்தார். ஸ்மித் 7 ரன்னில் அவுட்.

கிளார்க் 2 திருப்தியற்ற பவுண்டரிகளை அடித்தார். ஒன்று எட்ஜ், ஒன்று பந்தை விட்டுவிடலாம் என்று அரைகுறை மனதோடு ஆடிய போது மட்டையின் விளிம்பில் பந்தே பட்டு பவுண்டரிக்குச் சென்றது. கிளார்க் ஆடும் போது அவரது உடல் முன்னால் செலுத்தப்படுவதற்கு பதிலாக பின்னால் செல்கிறது, இந்த உத்தியிலிருந்து அவர் வெளியே வர வேண்டும் என்று பாண்டிங் ஏற்கெனவே கூறியுள்ள நிலையில், முன்னால் வந்து ஆட வேண்டிய பந்துக்கு கிரீசிலேயே நின்றதால் ஃபுல் லெந்த் பந்துக்கு மட்டையை விரைவில் கீழே இறக்க முடியவில்லை. பவுல்டு ஆனார்.

வோஜ்ஸ் கதை அவர் 16 ரன்களில் இருந்த போது முடிந்தது. ஆண்டர்சன் பந்தை விட்டு விட ஆடினார் ஆனால் பந்து எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆனது. மிட்செல் மார்ஷ் மிக மோசமாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் ஸ்விங் பந்தை விடுவதற்கு பதிலாக டிரைவ் ஆடி ஆண்டர்சனிடம் டக் அவுட் ஆனார்.

விக்கெட் கீப்பர் பீட்டர் நெவிலுக்கு தனது கால் எங்கிருக்கிறது, ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லையாதலால், ஆண்டர்சனின் ஆங்கிளாக உள்ளே வந்த பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். ஜான்சனுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசினார் ஆண்டர்சன், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டார் 4-வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

கிறிஸ் ராஜர்ஸ் 52 ரன்கள் எடுத்தார். அவர் 89 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடித்தார். இவர் மட்டுமே இங்கிலாந்தின் ஸ்விங் பந்து வீச்சை சரியாகக் கணித்து ஆடினார்.

ஆனால் கடைசியில் பிராட் வீசிய பந்தின் திசையைக் கணிக்கத் தவறி கால்காப்பில் வாங்கி எல்.பி ஆகி வெளியேறினார், ரிவியூவும் பயனளிக்கவில்லை. ஸ்டார்க்கும் பந்தை விட்டு விட தாமதமாகச் செயல்பட்டதால் மட்டையின் விளிம்பில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது.

கடைசியில் 37-வது ஓவரில் ஆண்டர்சனிடம் பிளேய்ட் ஆன் ஆனார் லயன். ஆஸ்திரேலியாவை 37-வது ஓவரில் மடித்தது இங்கிலாந்து. ஆண்டர்சன் 6 விக்கெட்டுகள், ஃபின் மற்றும் பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x