Published : 05 Jul 2015 01:19 PM
Last Updated : 05 Jul 2015 01:19 PM
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் குரேஷியாவின் மரின் சிலிச், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் 3-வது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள மரின் சிலிச் 7-6 (4), 6-7 (6), 6-4, 6-7 (4), 12-10 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 17-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார்.
நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றும் நடைபெற்றது. 4 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ‘பிக் செர்வர்களான’ ஜான் இஸ்னரும், சிலிச்சும் விடாப்பிடியாக போராடினர். 5-வது செட்டில் ஒரு கட்டத்தில் இருவரும் 10-10 என சமநிலையில் இருந்தனர். ஆனால் அடுத்த இரு கேம்களில் அபாரமாக ஆடிய மரின் சிலிச் அதைக் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
விம்பிள்டனில் இவர்கள் இருவரும் நீண்டநேர ஆட்டங்களில் விளையாடுவது 2-வது முறையாகும். 5 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் 11 மணி நேரம், 5 நிமிட போராட்டத்துக்குப் பிறகு பிரான்ஸின் நிகோலஸ் மஹத்தை வீழ்த்தினார் இஸ்னர். கடைசி செட் 70-68 என்ற கணக்கில் முடிந்த அந்த ஆட்டத்தில் இஸ்னர் வெற்றி கண்டார். டென்னிஸ் வரலாற்றில் நீண்ட நேரம் நடைபெற்ற ஆட்டம் இதுதான்.
2012 விம்பிள்டனில் சிலிச்-சாம் கியூரி இடையிலான ஆட்டம் 5 மணி, 31 நிமிடங்கள் நடை பெற்றது. கடைசி செட் 17-15 என்ற கணக்கில் முடிந்த அந்த ஆட்டத் தில் சிலிச் வெற்றி கண்டார். இது தான் விம்பிள்டன் வரலாற்றில் 2-வது நீண்ட நேர ஆட்டம்.
இதேபோல் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா ஆகியோர் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT