Published : 06 Jul 2015 08:29 PM
Last Updated : 06 Jul 2015 08:29 PM
இலங்கைக்கு எதிராக பல்லெகிலேயில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று 377 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிவரும் பாகிஸ்தான் அணி ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.
13/2 என்று தடுமாற்றத்தில் தொடங்கிய பாகிஸ்தான் அணியில், புதிய இடது கை தொடக்க வீரர் ஷான் மசூத் 114 ரன்களுடனும் யூனிஸ் கான் 101 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 377 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுவிட்டால், இலங்கை மண்ணில் அதிகபட்ச இலக்கைத் துரத்திய வரலாற்றை பாகிஸ்தான் நிகழ்த்தும்.
இருவரும் இணைந்து 217 ரன்களைச் சேர்த்து, டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிகபட்ச ரன்களை ஜோடியாக சேர்த்து பாகிஸ்தானுக்கான புதிய சாதனை படைத்துள்ளனர்.
பிட்ச் கடுமையாக மந்தமடைந்த நிலையிலும் இலங்கையின் விக்கெட் வீழ்த்தும் தரிந்து கவுஷல் 20 ஓவர்களில் 92 ரன்கள் கொடுத்து, முற்றிலும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததும் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.
சுரங்க லக்மல், அகமது ஷேசாத்துக்கு ஒரு பந்தை வெளியே இழுத்து பீட் செய்து, பிறகு ஒரு பந்தை உள்ளே கொண்டு வர ஷேசாத் பவுல்டு ஆனார். ஆஃப் ஸ்ட,ப் பறந்தது. தம்மிக பிரசாத் லெக் திசை பந்தை அசார் அலி, விக்கெட் கீப்பர் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற 13/2 என்று ஆனது.
எதிர்முனையில் ஷான் மசூத் அவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. யூனிஸ் கான் களமிறங்கி தனது அனுபவத்தின் மூலம் பந்துகளை நகர்ந்து வந்து கடைசி நேரத்தில் ரன்னுக்கோ, அல்லது தடுத்தோ ஆடி நம்பிக்கையூட்ட ஷான் மசூத் மெதுவே நம்பிக்கை பெற்றார். ஓவர் பிட்ச் பந்துகளை சிறப்பாக ஆடும் ஷான் மசூத், ஷார்ட் பிட்ச் பந்துகளில் திக்கித் திணறினார்.
தரிந்து கவுஷல் வந்தவுடன் யூனிஸ், ஷான் மசூத் இருவரும் அடிக்கத் தொடங்கினர். யூனிஸ் கான் 71 பந்துகளில் அரைசதம் எடுத்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிட்சில் ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் யூனிஸ் கான் வேகப்பந்து வீச்சாளர்களை சில அபாரமான கவர் டிரைவ்களை ஆடினார். அரைசதம் எடுக்கும் முன்னர் பிரசாத் பந்தை மிட்விக்கெட்டில் ஒரு ஷாட்டையும் பிறகு ஒரு கவர் டிரைவையும் அடுத்தடுத்து அடித்து அரைசதம் கடந்தார்.
கடைசியில் கேப்டன் மேத்யூஸ் பவுலிங்கிலும் தன் பங்களிப்பை நிகழ்த்த வேண்டி வந்தார். ஏற்கெனவே பேட்டிங்கில் அவரது சதத்தினால்தான் இலக்கு 377 ரன்களாக உள்ளது. இந்நிலையில் மசூத் 79 ரன்னில் இருந்த போது ஒரு எல்.பி.முறையீடு நிராகரிக்கபப்ட்டது. ரிவியூவில் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டதா என்பது சரியாகத் தெரியாததால் களதீர்ப்பான நாட் அவுட் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நடுவே அஞ்சேலோ மேத்யூஸ் கேப்டனாக ‘தோனி’-யின் டெஸ்ட் போட்டி ஸ்டைலைக் கடைபிடிக்கத் தொடங்கினாரோ என்ற சந்தேகம் எழுந்தது, களவியூகத்தை விரிவுபடுத்தினார். இதில் யூனிஸ் கான், ஷான் மசூத் தங்கள் இஷ்டத்துக்கு சிங்கிள்களை எடுக்க சுத்தமாக அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படவில்லை.
தரிந்து கவுஷலை யூனிஸ் கான் இஷ்டத்துக்க்கு ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிக்கொண்டேயிருந்தார். பீல்டிங் அமைப்பினால் தைரியம் பெற்ற மசூத் இறங்கி வந்து கவுஷலை ஒரு சிக்ஸ் அடித்து தன் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் கவுஷலை ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து யூனிஸ் கான் தனது 30-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதோடு 5-வது முறையாக 4 வது இன்னிங்ஸில் சதம் எடுத்த முதல் வீரரானார் யூனிஸ் கான்.
முன்னதாக இன்று காலை 77 ரன்களில் இறங்கிய மேத்யூஸ் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முபாரக் 35 ரன்களையும், சந்திமால் 67 ரன்களையும் எடுக்க, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை தன் 2-வது இன்னிங்ஸில் 313 ரன்களை எட்டியது.
நாளை 377 ரன்களை பாகிஸ்தான் வெற்றிகரமாகத் துரத்தினால், பாகிஸ்தானின் சிறந்த டெஸ்ட் விரட்டலாக இது அமையும், மேலும் இலங்கை அணியை டெஸ்ட் தொடரில் 2-1 என்று வெற்றியும் பெறும்.
நாளை புதிய பந்து எடுக்கப்படும், அதற்கு இன்னமும் 17 ஓவர்கள் மீதமுள்ளன. இந்த 17 ஓவர்களில் குறைந்தது 65 ரன்களையாவது விக்கெட் இழக்காமல் பாகிஸ்தான் எடுக்க வேண்டும். அதாவது 300 ரன்களை புதிய பந்து எடுப்பதற்குள் எடுத்து விட வேண்டும், யூனிஸ் கான் நிச்சயம் அவுட் ஆக கூடாது, அப்படியெனில் பாகிஸ்தான் சாதனை வெற்றியைப் பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT