Published : 11 Jul 2015 03:07 PM
Last Updated : 11 Jul 2015 03:07 PM
வங்கதேசத்துக்கு எதிராக நேற்று மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரபாதா ஹாட்ரிக்குடன் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, வங்கதேசம் 36.3 ஓவர்களில் 160 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 32-வது ஓவரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
தமிம் இக்பால், லிட்டன் தாஸ், மஹமுதுல்லா ஆகியோரை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ரபாதா.
6 விக்கெட்டுகளை அறிமுக போட்டியிலேயே கைப்பற்றிய கேகிஸோ ரபாதாவுக்கு வயது 20. இவரை பெரிய அளவில் தென் ஆப்பிரிக்கா எதிர்பார்க்கிறது. இவர் சீராக மணிக்கு 140 கிமீ வேகத்தைக் காட்டிலும் வீசக்கூடியவர். நேற்று வங்கதேசம் இவரிடம் சிக்கி சின்னாபின்னமானது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் 16 ரன்களுக்கு இவர் கைப்பற்றிய 6 விக்கெட்டுகள் என்பது புதிய உலக சாதனையாகும், ஒருநாள் போட்டியில் அறிமுக வீரர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் முதலில் சாதனை நிகழ்த்தியவர் மே.இ.தீவுகளின் பிடல் எட்வர்ட்ஸ், இவர் ஜிம்பாப்வேயிற்கு எதிராக 2003-இல் 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அறிமுக பவுலர் சாதனையை தன் வசம் வைத்திருந்தார். அதனை தற்போது ரபாதா முறியடித்தார்.
இதற்கு முன்னதாக மகாயா நிடினி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2006-இல் 22 ரன்களுக்கு 6 விக்கெட்டைக் கைப்பற்றினார், இதுவே தென் ஆப்பிரிக்காவின் சிறந்த ஒருநாள் வீச்சாக இருந்து வந்தது. மேலும் அறிமுக போட்டியில் வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாமுக்குப் பிறகு ரபாதா ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.
ரபாதாவின் வேகமும், அவரது பந்து வீச்சின் சிறப்பாக குறிப்பிடப்படும் துல்லியமும் வங்கதேசத்தை சீரழித்தது. இந்தியாவுக்கு எதிராக சிலம்பிய தமிம் இக்பாலை ஆட்டிப் படைத்தார் ரபாதா. முதல் 3 ஓவர்களில் ரன் அடிக்க முடியவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகளை வேகமாகவும் துல்லியமாகவும் வீச தமிம் திணறி கடைசியில் 13 பந்துகள் ரன் எடுக்காமல் ஆஃப் மிடிலுக்கு நேராக வந்த பந்தை தவறாக ஆடி பவுல்டு ஆகி ரபாதாவின் முதல் விக்கெட்டானார்.
லிட்டன் தாஸ் கால்திசையில் வந்த பந்தை நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் மஹமுதுல்லா ஹாட்ரிக் பந்தை எதிர்கொண்டார். வந்தவுடனேயே ரபாதாவின் வேகத்துக்கு நேராக எல்.பி.ஆகி வெளியேறினார். அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.
சவுமியா சர்க்கார் மட்டுமே ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து 27 ரன்கள் எடுத்தார் ஆனால் இவரும் ரபாதாவிடம் வீழ்ந்தார். ஷாகிப் அல் ஹசன் மட்டுமே அதிகபட்சமாக 48 ரன்களை எடுத்தார். முஷ்பிகுர் 24 ரன்களில் பொறுப்பற்ற ஷாட்டில் அவுட் ஆனார். நசீர் ஹுசைன் 31 ரன்கள் எடுத்தார்.
பிறகு மஷ்ரபே மொர்டசா, ஜுபைர் ஹுசைனையும் ரபாதா வீழ்த்தி 8 ஓவர்கள் 3 மெய்டன் 16 ரன்கள் 6 விக்கெட் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு இளம் வேகப்புயல் வரவை அறிவித்தார். வங்கதேசம் 40 ஓவர்களுக்கு குறைக்கப்பட்ட போட்டியில் 160 ரன்களுக்கு 37-வது ஓவரிலேயே மடிந்தது.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஆம்லா 14 ரன்களில் மொர்டசாவிடம் ஆட்டமிழக்க, குவிண்டன் டி காக் 35 ரன்களையும், டுபிளெஸிஸ் 63 ரன்களையும், ரைலி ரூசோவ் 45 ரன்களையும் எடுக்க 31.1 ஓவர்களில் 164/2 என்று அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரபாதா தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT