Published : 28 May 2014 06:28 PM
Last Updated : 28 May 2014 06:28 PM
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் உமேஷ் யாதவ் உள்ளிட்ட பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சினால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.
ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் கிங்ஸ் லெவன் விளையாடி வெற்றிபெற்று இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
இலக்கைத் துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 17வது ஓவர் முடிவில் 109/6 என்று தடுமாறிக் கொண்டிருந்தது. 18வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீச தவான் முதலில் 2 ரன்களை எடுத்தார், பிறகு 2வது பந்தை ஃபைன் லெக்கில் சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தே மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்கலாம் என்று மேலேறி வந்தவர் பந்தைத் தவற விட உத்தப்பா ஸ்டம்பிங் செய்தார்.
அடுத்து ஜான்சன் ஒரு சிக்ஸ் அடித்தார். பிறகு பெய்லி கடைசி பந்தை டீப் மிட்விக்கெட் பவுண்டரிக்கு வெளியே பந்தை அனுப்பினார். இன்னொரு சிக்ஸ். இந்த ஓவரில் 21 ரன்கள் குவிக்கப்பட்டது. லேசான நம்பிக்கையை ஏற்படுத்திய ஓவர் இது.
2 ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் சுனில் நரைன் சிறப்பாக வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற அசாத்திய நிலைமை ஏற்பட்டது.
கடைசி ஓவரின் முதல் பந்தில் உமேஷ் யாதவ், கேப்டன் பெய்லியை பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த கரண்வீர் சிங் ஒரு ரன் எடுத்தார். அடுத்த 4 பந்துகள் ஜான்சனின் மட்டையில் படவேயில்லை. கடைசி ஓவரில் ஒரேயொரு ரன். பஞ்சாப் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
முன்னதாக சேவாகை நல்ல வேகமான பந்தில் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். கட்டுப்படுத்த முடியாத சேவாகின் ஷாட் கவர் திசையில் கேட்ச் ஆனது. 2 ரன்னில் அவர் வெளியேறினார்.
மனன் வோரா இந்த முறையும் ஆக்ரோஷம் காட்டினார். அவர் 3 சிக்சர்களை விளாசினார். அதில் குறிப்பாக மோர்னி மோர்கெல் பந்தை அடித்த சிக்ஸ் அபாரமானது. 26 ரன்கள் எடுத்த அவர் 6வது ஓவரில் மோர்னி மோர்கெலிடம் அவுட் ஆகி வெளியேறினார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மேக்ஸ்வெல் களமிறங்கினார். ஒரு பவுண்டரியே அடித்தார் 6 ரன்னில் அவர் யாதவ் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று நேராக வாங்கி எல்.பி.யாகி வெளியேறினார்.
இப்போது பஞ்சாப் அணி விருத்திமான் சஹாவை நம்பியிருந்தது. பெய்லி, டேவிட் மில்லர் இருந்தனர். ஆனால் 12வது ஓவரில் சஹா 35 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து மோர்கெல் பந்தில் அவுட் ஆனார். அதிரடி அபாய பேட்ஸ்மென் மில்லர் 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தபோது பியூஷ் சாவ்லாவின் நல்ல லெக் ஸ்பின் பந்துக்கு ஸ்டம்பைப் பறிகொடுத்தார்.
அதன் பிறகு கிங்ஸ் லெவனின் நம்பிக்கை பெய்லியிடம் மட்டுமே இருந்தது. ஆனால் அவர் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர் அடித்த பிறகு உமேஷ் யாதவிடம் வீழ்ந்தார். உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். மோர்கெல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாவ்லாவும் சிக்கனமாக வீசி 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் பெய்லி முதலில் கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தார். மீண்டும் ராபின் உத்தப்பா அபாரமாக ஆடினார். ஆனால் கேப்டன் கம்பீர் ஜான்சனின் பவுன்சரை புல் ஆட நினைத்து மிட் ஆனில் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் அவுட் ஆனார்.
மணீஷ் பாண்டே, உத்தப்பாவுடன் இணைந்து ஸ்கோரை 7 ஓவர்களில் 67 ரன்களாக உயர்த்தினர். ஜான்சன் வீசிய 4வது ஓவரில் மிட்செல் ஜான்சனுக்கு எதிராக எழுச்சி கண்ட உத்தப்பா 148 கிமீ பவுன்சரை மிட்விக்கெட் திசையில் அபாரமான சிக்சர் அடித்தார். மேலும் இரண்டு பவுண்டரிகளை அவர் அடிக்க அந்த ஓவரில் 17 ரன்கள் குவிக்கப்பட்டது. 6 ஓவர்களில் 55 ரன்கள் எட்டப்பட்டது.
ஆட்டத்தின் 9வது ஓவரில் உத்தப்பா, படேல் பந்தை சிக்சர் அடிக்க நினைத்து கேட்ச் கொடுத்து 42 ரன்களில் வெளியேறினார். அவர் 30 பந்துகளில் 2 சிக்சர் 4 பவுண்டரிகளை அடித்தார்.
அதே ஓவரில் மணீஷ் பாண்டேயும் 21 ரன்னில் படேல் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். அடுத்த 5 ஓவர்களில் 29 ரன்களே எடுக்கப்பட்டது.
பிறகு யூசுப் பதான் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும், ஷாகிப் அல் ஹசன் 18 ரன்கள் எடுத்தும் கரண்வீர் சிங் வீசிய 15வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி 5 ஓவர்களில் 51 ரன்கள் விளாசப்பட்டது. இதில் டென் டஸ்சதே 17 ரன்களையும், யாதவ் 20 ரன்களையும், சாவ்லா 17 ரன்களையும் எடுத்தனர்.
கிங்ஸ் லெவன் அணியில் ஜான்சன், படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, கரண்வீர் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
துபாய் சுற்றில் சொதப்பிய கொல்கத்தா அணி கடைசியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT