Published : 28 Jul 2015 09:39 AM
Last Updated : 28 Jul 2015 09:39 AM
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் விளையாடுகிறது. இந்த 9 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டி20, 5 ஒருநாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
செப்டம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடர் டி20 பயிற்சி போட்டியுடன் தொடங்குகிறது. இந்திய மண்ணில் முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ளது தென் ஆப்பிரிக்கா. அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதற்கு பயிற்சி பெறும் வகையில் டி20 போட்டியில் பங்கேற்கிறது.
இந்திய மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். எனவே இது ஹசிம் ஆம்லா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 2 முதல் 8 வரை டி20 தொடரும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 11 முதல் 25-ம் தேதி வரை ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளன. டெஸ்ட் தொடர் நவம்பர் 5 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறவுள்ளது. இதில் பெங்களூரில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டி டிவில்லியர்ஸின் 100-வது போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
72 நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடர் இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விளையாடவிருக்கும் மிக நீண்ட கிரிக்கெட் தொடராகும். எனவே இதனை ‘மைல்கல்’ தொடர் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வர்ணித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT