Published : 26 Jun 2015 03:35 PM
Last Updated : 26 Jun 2015 03:35 PM
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியதையடுத்து வங்கதேச அணியின் கேப்டன் மொர்டசா தன்னம்பிக்கையின் உச்சத்துக்குச் சென்றுள்ளார்.
பிடி நியூஸ்24.காம் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியை விட அடுத்ததாக தாங்கள் சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா நிச்சயமாக கடினமான அணியே என்று கூறியுள்ளார்.
இத்தனைக்கும், ஐசிசி ஒருநாள் போட்டி அணிகள் தரவரிசையில் இந்திய அணி 2-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-ம் இடத்திலும் உள்ளது. மேலும் வங்கதேசத்தின் கடும் வெயிலில் தென் ஆப்பிரிக்கா தொடரை விளையாடவுள்ளது, இங்குள்ள பிட்ச் நிலவரங்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பும் இல்லை.
இந்நிலையில் மஷ்ரபே மொர்டசா கூறும்போது, “இந்திய அணி பேட்டிங்கில் வலுவானது ஆனால் பந்துவீச்சில் வலுவானது அல்ல, அதனால்தான் தொடருக்கு முன்பே நான் கூறினேன், எங்கள் பவுலர்கள் இந்திய பேட்ஸ்மென்களை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு என்று, அதுதான் நடந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி அப்படியல்ல, எங்கள் அணி ஒவ்வொரு புலத்திலும் திறமையை காண்பித்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வாய்ப்பு. அவர்களிடம் பலவீனங்கள் இல்லை.
இந்தியா அணி 270 ரன்களை வெற்றி இலக்காக எங்களுக்கு நிர்ணையித்தால் வெற்றி பற்றி நாங்கள் சிந்திக்க முடியும், ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 270 ரன்களைத் துரத்துவது கடினமே” என்றார்.
உலகின் தலைசிறந்த பவுலர் டேல் ஸ்டெய்ன் வங்கதேசத் தொடருக்கு வரவில்லை என்றாலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு கடினம் என்றும், இம்ரான் தாஹிரும் ஒரு அச்சுறுத்தலே என்கிறார் மஷ்ரபே.
"குவிண்டன் டி காக், ஹஷிம் ஆம்லா, ஃபாப் டு பிளேசிஸ், ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர், ரைலி ரூசோவ், என்று அனைவரும் மேட்ச் வின்னர்கள், மேலும் டிவில்லியர்ஸ் மட்டுமே போதும் ஒரு அணியை அடித்து நொறுக்கி வீழ்த்த” என்கிறார் மொர்டசா.
தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் வங்கதேசத்தில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT