Published : 30 Jun 2015 02:54 PM
Last Updated : 30 Jun 2015 02:54 PM
டெஸ்ட் போட்டிகளில் வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ள முரளி விஜய், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முரளி விஜய், ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதள பேட்டியில் கூறும் போது, “அந்தந்த கிரிக்கெட் வடிவத்துக்குத் தக்கவாறு என்னை வெளிப்படுத்திக் கொள்ள போகிறேன், டெஸ்ட் போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று ஏன் கூறினேன் என்றால், அங்கு எதிரணியினருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.
சீரான முறையில் ரன்களை எடுக்க வேண்டும் என்பதே டெஸ்டில் குறிக்கோள். அதற்காக எனது இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை என்று அர்த்தமல்ல. சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆடுகிறேன்.
அதே போல் வாய்ப்புக் கிடைத்தால் முதல் பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டும் என்றாலும் ஆடுவேன், அந்த சூழ்நிலையில் இருந்தால் அதையும் செய்வேன்.
நான் எனது இயல்பூக்கங்களை கட்டுப்படுத்துகிறேன் என்பதல்ல, சூழ்நிலை என்ன நிர்பந்திக்கிறதோ அதற்கேற்ப விளையாடுகிறேன்.
மன ஒழுங்கு முக்கியம். ஆட்டம் பெரிய அளவுக்கு மாறுதலடையாது, பல்வேறு கிரிக்கெட் வடிவங்களுக்கு ஏற்ப நான் எனது பேட்டிங்கை ஒவ்வொரு விதமாக சூழ்நிலைக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்வேன்.
டெஸ்ட் போட்டிகளில் புதிய பந்தை ஒரு விதமாக நின்று ஆடி அதன் பிறகு என் பாணிக்கு திரும்புவதல்ல எனது ஆட்டம், புதிய பந்தையும் ஆடவே விரும்புகிறேன். ஆகவே புதிய பந்தா உடனே அதிக பந்துகளை ஆடாமல் விட்டு அந்தக் கட்டத்தை ஒருவாறாக கடப்பதல்ல எனது பேட்டிங். சரியான உத்தியில் ஆடி, கச்சிதமாக விளையாடி எதிரணி பவுலர்களுக்கு சற்றே என் ஆட்டம் பற்றிய செய்தியை வெளிப்படுத்துவேன்.
நான் எப்பவுமே மன அளவில் தாக்குதல் ஆட்டம் ஆடவே தயாராக இருப்பேன்.
நாம் நமது பாணி ஆட்டத்தை ஆடுவதென்பதே அச்சமற்ற பேட்டிங்தான். எனவேதான் அச்சமற்ற ஆட்டம் கைகொடுக்கும் என்று கூறுகிறேன்” என்றார் முரளி விஜய்.
முரளி விஜய்யின் புதிய பொழுதுபோக்கு ‘சர்ஃபிங்’ என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT