Last Updated : 30 Jun, 2015 10:32 AM

 

Published : 30 Jun 2015 10:32 AM
Last Updated : 30 Jun 2015 10:32 AM

சிலி வீரர் ஜாராவுக்கு 3 போட்டிகளில் தடை

தென் அமெரிக்காவின் பிரபல கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிலியும், உருகுவேயும் மோதின. சிலி 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்த ஆட்டத்தில் கைகலப்பும் ஏற்பட்டது.

சிலி பின்கள வீரர் கொன்ஸாலோ ஜாராவின் முகத்தில் கையால் இடித்ததற்காக உருகுவே ஸ்டிரைக்கர் எடின்சன் கவானிக்கு 2-வது யெல்லோ கார்டு காண்பிக்கப்பட்டு போட்டி யிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது ஜாரா தனது பின்பக்கத்தில் கையை வைத்து தள்ளினார் என கவானி குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப் பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. அப்போது டிவியின் வீடியோ பதிவுகளை ஆராய்ந்தபோது, கவானியை ஜாரா தள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலி கால்பந்து சம்மேளனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாராவின் தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள சிலி கால்பந்து சம்மேளனம், “இந்தத் தடை வருத்தமளித்தாலும், அதை ஏற்றுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது. 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால் பெருவுக்கு எதிரான அரையிறுதியிலும், ஒருவேளை அதில் சிலி வெற்றி பெற்றால் இறுதிச்சுற்றிலும் ஜாரா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்தத் தடை குறித்து கடுமையாக விமர்சித் துள்ளார் உருகுவே பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி. இது மிகவும் அபாயகரமான முன்னுதாரண மாகும். நடுவரின் அறிக்கையை யும் தாண்டி வெளியில் இருந்து வரும் குற்றச்சாட்டுகள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், அது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஏராளமானோர் புகார் அளிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்றார்.

ஜாராவின் தடை சிலி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தலைசிறந்த பின்கள வீரரான ஜாராவின் இடத்தில் இதுவரை சோதிக்கப்படாத மற்றொரு பின்கள வீரரை களமிறக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சிலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x