Last Updated : 04 Jun, 2015 02:36 PM

 

Published : 04 Jun 2015 02:36 PM
Last Updated : 04 Jun 2015 02:36 PM

பிரெஞ்ச் ஓபனில் 39 தொடர் வெற்றிகளைப் பெற்ற நடாலைச் சாய்த்தார் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் நட்சத்திரமும் களிமண் தரை டென்னிஸ் மன்னனுமான ரபேல் நடாலை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ரோலாண்ட் காரோஸில் ரஃபேல் நடால் 72 ஆட்டங்களில் பெற்ற 2-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புல்தரை டென்னிஸை விட களிமண் தரையில் அபாரமாக ஆடும் ரஃபேல் நடால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் 39 வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்ற நிலையில் ஜோகோவிச்சை நேற்று எதிர்கொண்டார், ஆனால் எந்த வித சவாலும் அளிக்காமல் 7-5, 6-3, 6-1 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தார்.

72 ரோலாண்ட் காரோஸ் போட்டிகளில் 2-வது தோல்வி, முதல் முறை 2009-இல் 4-வது சுற்றில் ராபின் சோடர்லிங்கிடம் தோல்வியடைந்தார்.

இது பற்றி நடால் கூறும் போது, “2009-இல் தோற்றேன் ஆனால் அதுவே இறுதியல்ல, 2015-ல் தோல்வியடைந்தேன் இதுவும் என் இறுதியல்ல” என்றார்.

44 முறை ஜோகோவிச்சுடன் நடால் மோதியுள்ளார் இதில் நடால்தான் 23-21 என்று முன்னிலை வகிக்கிறார்.

முதல் செட்டில் ஜோகோவிச் 4-0 என்று முன்னிலை பெற்றார், இதில் ஒரே சர்வில் 19 ஸ்ட்ரோக்குகள் ஆடப்பட்டன, இது பெரிய கரகோஷத்தை எழுப்பியது.

ஆனால் அதன் பிறகு நடால் எழுச்சியுற்றார், ஓட்டத்திலேயே அடித்த பேக்ஹேண்ட் பாஸிங் ஷாட் நடாலுக்கு 4-4 என்ற சமநிலையக் கொடுத்தது.

அதன் பிறகு ஜோகோவிச் 5-4 என்று முன்னிலை பெற்ற பிறகு 3 செட் பாயிண்ட்களை நடால் பாதுகாத்தார். பிறகு 6-5 என்ற நிலையிலும் 2 செட் பாயிண்ட்களில் இழுத்துப் பிடித்தார். ஆனாலும் முதல் செட்டை ஜோகோவிச் 7-5 என்று கைப்பற்றினார்.

அடுத்த 2 செட்களில் ஜோகோவிச்சை நடாலால் எதிர்கொள்ள முடியவில்லை என்றே கூற வேண்டும், ஜோகோவிச் தனது சிறப்பான ஃபோர்ஹேண்ட், பேக்ஹேண்ட், வாலி என்று அனைத்தையும் பயன்படுத்த நடால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றே கூற வேண்டும், ஜோகோவிச்சின் ஆட்டத்தைக் கண்டு அவரது பயிற்சியாளர் போரிஸ் பெக்கர், மிகவும் கொண்டாட்ட மூடில் இருந்தது அவரது உற்சாகத்தின் மூலம் தெரிய வந்தது.

பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவும் அரையிறுதிக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x