Last Updated : 22 Jun, 2015 03:05 PM

 

Published : 22 Jun 2015 03:05 PM
Last Updated : 22 Jun 2015 03:05 PM

இந்திய அணிக்காக கேப்டன் பதவியை உதறத் தயார்: தோனி

இந்தியாவை ஒருநாள் தொடரில் முதன்முதலாக வெற்றி பெற்று வங்கதேசம் வரலாறு படைத்ததையடுத்து, கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் கூறும்போது, “அணி சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு எனது தலைமைத்துவம்தான் காரணம் என்றால் அதனைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இது பற்றி தோனி கூறியதாவது:

"நான் எனது கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடனேயே ஆடி வருகிறேன். கேப்டன்சி பற்றிய கேள்வி வந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். ஊடகங்கள் என்னை நேசிக்கின்றன என்பதையும் நான் அறிவேன். இதைப் போன்ற கேள்விகள் எப்போதும் எழுந்து கொண்டேதான் இருக்கும்.

என்னை நீக்கிவிடுவதால் இந்திய கிரிக்கெட் நன்றாக விளையாடத் தொடங்கும் என்றால், அணியில் உள்ள பிரச்சினைகளுக்கும், நடக்கும் தவறுகளுக்கும் நானே காரணம் என்ற நியாயம் இருந்தால் நிச்சயமாக தலைமைப்பொறுப்பை உதறத் தயாராக இருக்கிறேன், ஒரு வீரராக அணியில் தொடர்ந்து பங்களிப்பு செய்துவிட்டு போகிறேன். இந்திய வெல்ல வேண்டும் என்பதே விருப்பம், அதற்கு யார் கேப்டன் என்பது ஒரு விஷயமல்ல.

கேப்டன்சி என்பது எனது பணி அல்லது பொறுப்பு, நான் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். என்னிடமிருந்து இதனைப் பறிக்க வேண்டுமெனில் நான் மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

அனைத்தையும் விட முக்கியமானது, ஒரு வீரராக அணிக்கு பங்களிப்பு செய்வது மற்றும் ஓய்வறை சூழ்நிலையை நன்றாகப் பராமரிப்பது. இதன் மூலம் இளம் வீரர்கள் அணிக்குள் வரும் போது அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான சூழலை வைத்திருப்பது. இதுதான் எனது அடுத்தகட்ட சாதனையாக இருக்கும்.

கிரிக்கெட் ஆட்டம் நிரம்ப மாறிவிட்டது. நாங்கள் கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். கிரிக்கெட் என்பது இதுதான். நாம் விளையாடும் ஒவ்வொரு தொடரையும் வெற்றி பெற முடியாது.

நான் சுதந்திரமாக ஆட வேண்டும் என்பதே முக்கியம், கடந்த 4-5 ஆண்டுகளாக 6-ம் நிலையில் களமிறங்கி ஆடி வருகிறேன், எப்போதுமே ஏதாவது ஒருவகையில் எனக்கு அழுத்தம் ஏற்படுகிறது, இதனால் சுதந்திரமாக என்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை. நான் நன்றாக நிலைபெற்று பிறகு சுதந்திரமாக அடித்து ஆட விரும்புகிறேன், ஆனால் நான் செட் ஆகும் போது விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம். அங்கிருந்து ஒரு பார்ட்னெர்ஷிப்பை உருவாக்க வேண்டியுள்ளது.

சரி அடித்து ஆடலாம் என்று ஆரம்பித்தால் மேலும் 2 விக்கெட்டுகள் விழுகின்றன. அடித்து ஆடுவது சாத்தியமற்றதாகப் போய்விடுகிறது.

எனவேதான் சற்று முன்னால் களமிறங்கினால் சுதந்திரமாக ஆட முடியும் என்று கருதினேன். 2006-ம் ஆண்டு முதல் அணியின் தேவைக்கு ஏற்ப நான் என்னை தகவமைத்துக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் நீண்ட காலத் தேவையாக நம்பர் 6, 7, ஏன் 5ம் நிலையில் கூட சிறப்பாக ஆடும் பேட்ஸ்மென் யார் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. அதனால்தான் பேட்டிங்கில் நன்றாக ஆடும் ரெய்னாவை பின்னால் களமிறக்கினேன்.

நான் முன்னால் இறங்கினால் நான் இறங்கும் நிலையில் அனுபவமிக்க வீரர் தேவை. களத்தில் சென்று எடுத்த எடுப்பில் பெரிய ஷாட்களை ஆடுவது முடியாது. எனக்குப் பின்னால் பெரிய பேட்ஸ்மென்களும் இல்லை.

ஒரு தொடக்க வீரர் பெரிய ஷாட்களை ஆடும் முன்னர் இரு முறை யோசிக்கிறார் என்றால் 6 அலல்து 7ம் நிலை வீரர்கள் 3 முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. அல்லது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆட வேண்டும்.

ஜடேஜா பற்றி...

ஒவ்வொரு பவுலரையும் அவரது ஆற்றலுக்கேற்ப பயன்படுத்த வேண்டும். நான் ஜடேஜாவை முதல் 10 ஓவர்களில் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் சீரான முறையில் நன்றாக வீசிவந்தார். 2-வது பவர் பிளே அல்லது, இறுதி ஓவர்களில் கூட அவர் வீசுகிறார். பவர் பிளேயில் அவர் 3 டீசண்ட் ஓவர்களை வீசினார். ஜடேஜா போன்ற ஒருவரது தேர்வை அவர் நியாயப்படுத்துவது கடினம் ஏனெனில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு பல சமயங்களில் கிடைப்பதில்லை.

கடந்த ஓராண்டில் எனக்கே நிலைத்து பேட் செய்யும் வாய்ப்பு அரிதாகவே கிடைத்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் விழுந்தால் மட்டுமே முழு நேர பேட்டிங் வாய்ப்பு கிடைக்கிறது.

சர்வதேச போட்டிகளில் ஒருவர் இறங்கும் போதெல்லாம் அரைசதம் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முடியாத காரியம்.மேலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் நன்றாக ஆடுவதால் கீழ்வரிசை பேட்டிங்குகளுக்கு வாய்ப்பு அரிதாகவே கிடைத்தது. இந்த 2 போட்டிகளில் கீழ்வரிசை பேட்டிங் திடீரென நெருக்கடி தருணங்களில் இறங்கும் போது கடினமானதுதான். பவுலிங்கை பொறுத்த வரை ஜடேஜா ஃபார்ம் இடையிடையே நன்றாகவும், நன்றாக அமையாமலும் உள்ளது. ஆனால் பிற்பாடு உலகக் கோப்பையில் அவர் சிறப்பாகவே வீசினார். அதன் பிறகு இங்கும் அவர் நன்றாகவே வீசினார்.

முந்தைய பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் பற்றி...

டன்கன் பிளெட்சர் என்பவர் ஊடகங்களால் பாராட்டப்படாத ஒரு பயிற்சியாளர். ஆனால் அவர் நிறைய கடின உழைப்பை இட்டுள்ளார். அவர் இந்த அணியுடன் நீண்ட காலம் இருந்தார். நிறைய கடினமான தொடர்கள் அவருக்கு அமைந்தன. ஆனால் நாம் பயிற்சியாளர்களை குறைகூறுவதை நிறுத்த வேண்டும். வீரர்கள்தான் களத்தில் ஆடுகின்றனர்.

நீங்கள் பயிற்சியாளர் ஒருவர் வேண்டும் என்பதை சூசகமாக சுட்டிக்காட்டுகிறீர்கள் என்றால், இங்கு நிறைய உதவிக்குழுக்கள் உள்ளன, ஆகவே பயிற்சியாள பதவி சிறிது காலத்துக்கு காலியாக இருந்தாலும் பரவாயில்லை. காலியாக இருக்கிறது என்பதற்காக யாராவது ஒருவரை அந்த இடத்துக்கு நியமித்தல் கூடாது.

இப்போது இருக்கும் அணி சிறந்ததுதான், துணைக்கண்டத்தில் ஆடும் போது, கூடுதல் ஸ்பின்னர் தேவையா போன்ற அணிச்சேர்க்கையில் கவனம் கூடுதலாக இருப்பது அவசியம். வேகப்பந்து வீச்சாளர்கள் சில சமயங்களில் நிறைய ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர்.

சரியான அணிச்சேர்க்கை அமைப்பது முக்கியம். அணியை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்ல ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சிறந்த அணிச்சேர்க்கை அமைப்பதில் கவனம் தேவை.”

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x