Published : 07 May 2014 09:38 PM Last Updated : 07 May 2014 09:38 PM
பஞ்சாபிடம் சென்னை சரண்: 45 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
232 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய சென்னை அணி முதல் ஓவரிலேயே அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மித்தை இழந்தது. தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் மெக்கல்லம் இணை ஓரளவு சூழலுக்கு ஏற்றவாறு தங்களது ஆட்டத்தை முன்னெட்டுத்துச் சென்றது. ஆனால் ரெய்னா 27 பந்துகளில் 35 ரன்களுக்கு வீழ்ந்தார். பின்னர் களமிறங்கிய ஜடேஜாவும் தேவைக்கேற்ற ரன்களை அடிக்க முயற்சி செய்தார். அவரும் 17 ரன்களுக்கு விழ, மெக்கல்லம் 33 ரன்களுக்கு துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்த தோனி மற்றும் ப்ளெஸ்ஸிஸின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. ஒரு ஓவருக்கு 20 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலையிலும், இந்த இணை பவுண்டரியோ, சிக்ஸரோ அடிக்கத் தவறியது. 16-வது ஓவரில் ப்ளெஸிஸ் 17 ரன்கள் அடித்தாலும், அந்தக் கட்டத்தில் தேவைப்பட்ட ரன்களை சென்னை அணியால் எடுக்க முடியவில்லை. ப்ளெஸ்ஸிஸ் 22 பந்துகளில் அரை சதம் தொட்டார். மேலும் இரண்டு ரன்கள் மட்டும் சேர்த்து ஜான்சனின் பந்தில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் தோனியோ, 23 ரன்கள் மட்டுமே சேர்த்து அதே ஓவரிலேயே பெவிலியன் திரும்பினார். கடைசி ஓவரில் 64 ரன்கள் என்ற சாத்தியமில்லாத இலக்கோடு ஆடிய சென்னை, அந்த ஓவரில் 19 ரன்களை எடுத்தது. இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை மட்டுமே சென்னையால் எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர் சேவக், முதல் பந்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 30 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் மன்தீப் சிங் 3 ரன்களுக்கு வெளியேறினார். பின், களத்தில் இணைந்த மில்லர், மேக்ஸ்வெல் ஜோடி, தனது வழக்கமான அசத்தலை ஆரம்பித்தது.
சென்னையின் பந்துவீச்சை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் மாறி மாறி இருவரும் சிதறடித்தனர். மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 22 பந்துகளிலேயே அரை சதத்தைக் கடந்தார். சிறப்பாக ஆடிவந்த மில்லர், 16-வது ஓவரில் 47 ரன்களுக்கு (32 பந்துகள், 5 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஸ்மித்தின் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 17-வது ஓவரை வீசிய பாண்டே 8 ரன்களை மட்டுமே தந்தார். 38 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்த போது (6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) மேக்ஸ்வெல் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.
சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்த மேக்ஸ்வெல், இதன் மூலம், மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின் கேப்டன் பெய்லி தன் பங்கிற்கு ரன் சேர்ப்பில் ஈடுபட 19-வது ஓவரிலேயே பஞ்சாப் 200 ரன்களைக் கடந்தது. கடைசி ஓவரில் ஜான்சன் ஒரு பவுண்டரியும், பெய்லி 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் அடிக்க, பஞ்சாப் அணியின் ஸ்கோர், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 என உயர்ந்தது. பெய்லி 13 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT