Published : 11 Jun 2015 07:35 PM
Last Updated : 11 Jun 2015 07:35 PM
டெஸ்ட், ஒருநாள், டி20 என்று சமீபத்தில் அசத்தி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மென் ஜோஸ் பட்லரை மற்ற அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென்களான டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட், தோனி ஆகியோருடன் ஒப்பிட்டுள்ளது இங்கிலாந்து ஊடகம்.
நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் முடிந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் 3 மணி நேரங்களில் 73 ரன்கள் எடுத்தார் ஜோஸ் பட்லர். டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 71 ரன்கள் விளாசித் தள்ளினார். பிறகு அன்று நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 129 ரன்களை விளாசி அந்தத் தருணத்தில் சரிவிலிருந்த இங்கிலாந்தை மீட்டு நியூஸிலாந்தை வீழ்த்த உதவினார்.
எனவே மற்ற விதங்களில் டல்லடிக்கும் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லரின் அதிரடி வரவும் பங்களிப்பும் புதிய ஹீரோவாகப் பார்க்க வைக்கிறது.
கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சிறப்பாக பங்களிப்பு செய்ததில் தோனி, டிவில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் தற்போது ஒப்பிடப்பட்டு இங்கிலாந்து ஊடகம் அவரைக் கொண்டாடுகிறது.
இது குறித்து தி டெலிகிராப் பத்திரிகையில் வந்த பத்தியில் கூறியிருப்பதாவது: ‘24 வயதேயான ஜோஸ் பட்லர், கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகத் தரம் வாய்ந்த உயர்மட்ட வீரர்கள் குழுவான தோனி, கில்கிறிஸ்ட், டிவில்லியர்ஸ் ஆகியோர் அடங்கிய குழுவில் பட்லர் இணைந்து விட்டார். இவர்களுக்கு அடுத்தபடியாக குமார் சங்கக்காரா இருக்கிறார்.
பட்லர் ஒரு விலைமதிக்க முடியாத அணிகலன், இவரைப்போன்ற ஒரு விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் இதுவரை இங்கிலாந்து கண்டதில்லை” என்று புகழாரம் சூட்டியுள்ளது.
ஆனால், பட்லர் என்ன கூறுகிறார், “அந்த மூவர் அளவுக்கு நான் இன்னும் உயரவில்லை. ஒன்று கூற முடியும், ஏ.பி.டிவில்லியர்ஸ் எனக்கு நீண்டகாலமாக ஆதர்சமாக திகழ்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பேட்டிங்கின் போக்கையே மாற்றிவிட்டார். அவரைப்போல் ஆட ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றனர். அவரைப்போன்ற ஒரு பங்காற்றலை இங்கிலாந்துக்கு நிகழ்த்தவே நான் விரும்புகிறேன்” என்ற பட்லர் 3 வயது முதல் டென்னிஸ் ஆடிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸில் சகோதரத்துவம் இல்லை என்பதால் கிரிக்கெட்டைத் தேர்வு செய்ததாகக் கூறும் பட்லர், தனது மணிக்கட்டு பலத்திற்கு டென்னிஸ் ஆட்டம் உதவியதாக குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT