Published : 13 Jun 2015 02:29 PM
Last Updated : 13 Jun 2015 02:29 PM

ஸ்மித்துக்கு இரட்டை சதம் மறுத்த ஜேரோம் டெய்லர்: மே.இ.தீவுகள் சரிவு

ஜமைக்காவில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 399 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தொடர்ந்து மேற்கிந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து சரிவு கண்டது.

2ம் நாளான நேற்று 235/4 என்ற நிலையில், இன்று 135 ரன்களுடன் ஸ்டீவ் ஸ்மித்தும், 20 ரன்களுடன் வாட்சனும் தொடங்கினர்.

ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஒரு அபாரமான இன்னிங்சை ஆடி 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் 199 ரன்களில் இருந்த போது வேகமான இன்ஸ்விங் யார்க்கரை வீசினார் ஜெரோம் டெய்லர், க்ரீசில் சிக்கிய ஸ்மித்தின் பூட்டில் பட்டது பந்து. ஸ்மித் பேலன்சும் தவறியது. டெய்லர் பலத்த முறையீடு எழுப்ப நடுவர் கையை உயர்த்தினார். மேல்முறையீடு செய்தார் ஸ்மித் ஆனால் அவுட் ஏற்கப்பட்டது. 199 ரன்னில் ஸ்மித் ஆட்டமிழந்தார்.

9 ஆண்டுகளுக்கு முன்னால் வங்கதேசத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி இரட்டை சதம் எடுத்த பிறகு அயல் மண்ணில் இரட்டை சதம் எடுக்கும் ஆஸி.வீரராக ஸ்மித் திகழ்ந்திருப்பார், ஆனால் டெய்லரின் பாதம் பெயர்க்கும் யார்க்கர் ஸ்மித்தின் கனவைத் தகர்த்து அவருக்கு விடை கொடுத்து அனுப்பியது.

ஜெரோம் டெய்லர் 25 ஓவர்கள் 10 மைடன்கள் 47 ரன்கள் 6 விக்கெட்டுகள், அவரது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சு இது. மற்ற பவுலர்கள் சோபிக்கமுடியவில்லை.

கேப்டன் தினேஷ் ராம்தின் இவரை அதிகம் பயன்படுத்தாதது விவாதத்துக்குரியதே. ஸ்மித்தின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. பந்து மட்டையில் பட்டதாகவே தனது 200-வது ரன்னுக்கு ஓடினார் ஸ்மித், ஆனால் நடுவர் தீர்ப்பு எல்.பி. என்று வந்தது. ஸ்னிக்கோ மீட்டர் இல்லாததால் பந்து மட்டையில் பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை, இதனால் கள நடுவர் இயன் கோல்டின் தீர்ப்பு ஏற்கப்பட்டது.

ஷேன் வாட்சன் 25 ரன்களில் டெய்லரின் நேர் பந்தை ஆடாமல் விட்டுவிட முடிவு செய்து பவுல்டு ஆனார். பிராட் ஹேடின் 22 ரன்களில் டெய்லரின் மற்றொரு அபாரமான பந்துக்கு லெக்ஸ்டம்பை இழந்தார்.

ஸ்மித் தனது அதிரடியைத் தொடங்க ஜோஷ் ஹேசில்வுட் (24) ஸ்டேண்ட் கொடுத்தார். ஆஸ்திரேலியா 399 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மே.இ.தீவுகள் தனது இன்னிங்ஸை தொடங்கியது. அறிமுக வீரர் ரஜீந்திர சந்திரிகா 3-வது ஓவரில் ரன் எடுக்காமல் ஸ்டார்க்கின் வைடு பந்தை துரத்தி ஹேடினிடம் கேட்ச் கொடுத்தார். இது நோ-பால் என்று தெரிந்தது, ஆனால் 3-வது நடுவரான அலீம்தார் இல்லை என்றார்.

ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோரை வைத்துத் தொடங்கிய மைக்கேல் கிளார்க், ஜான்சனுக்கும் முன்னால் லயனை கொண்டு வந்தார். கிரெய்க் பிராத்வெய்ட் லயனின் பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார், ஆனால் திரும்பவில்லை, பவுல்டு ஆனார். மற்றொரு நேர் பந்தில் டேரன் பிராவோ எல்பி ஆனார்.

தேநீர் இடைவேளையின் போது மேற்கிந்திய அணி 35/3 என்று ஆனது. கடந்த போட்டியில் நல்ல அரைசதம் கண்ட ஷேன் டோவ்ரிச், ஹேசில்வுட்டின் வெளியே சென்ற பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். ஷாய் ஹோப், லயன் பந்தை ஹேடினிடம் கேட்ச் கொடுத்தார்.

தினேஷ் ராம்தினை எல்.பி.யில் வீழ்த்தினார் ஹேசில்வுட். ஜெர்மைன் பிளாக்வுட் மட்டும் ஒரு முனையில் அடித்து ஆட முயன்றார். திருப்தியற்ற ஒரு இன்னிங்ஸில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் 51 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டிடம் அவுட் ஆனார். கடைசியாக பெருமாள் ஜான்சனிடம் வீழ்ந்தார்.

மே.இ,.தீவுகள் 143/8. இன்று 3-ம் நாள் ஆட்டம். பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜேசன் ஹோல்டர் 13 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அவருக்கு ஆதரவளிக்க டெய்லர், ரோச் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லயன் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஸ்டார்க், ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x