Published : 18 Jun 2015 09:46 AM
Last Updated : 18 Jun 2015 09:46 AM
20 வயதுக்குட்பட்டோருக்கான (யு-20) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான பிரேசிலும், செர்பியாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது.
நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியைத் தோற்கடித்தது. ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பிரேசில் அணி 5-வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 7-வது நிமிடத்தில் மார்கஸ் கில்ஹெர்மே பிரேசிலின் 2-வது கோலை அடித்தார்.
இதன்பிறகு 17-வது நிமிடத்தில் போர்சிலியாவும், 35-வது நிமிடத்தில் ஜார்ஜும் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 4-0 என முன்னிலை பெற்றது பிரேசில்.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் மார்கஸ் தனது 2-வது கோலை அடிக்க, பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் செனகலை தோற்கடித்தது. மற்றொரு அரை யிறுதியில் செர்பியா 2-1 என்ற கோல் கணக்கில் மாலியை வீழ்த்தியது.
சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெறும்பட்சத்தில் 20 வயதுக் குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் அதிக முறை (6 முறை) வென்ற அணி என்ற பெருமையை அர்ஜெண்டினாவுடன் பகிர்ந்து கொள்ளும்.
செர்பியா அணி கடைசியாக 1987-ல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி யது. அதன்பிறகு இப்போது இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சனிக்கிழமை நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மாலியும், செனகலும் மோதுகின்றன.
பிரேசில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய அதன் பயிற்சி யாளர் ரோஜெரியோ மிக்கேல், “இறுதிச்சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற அதீத ஆர்வம்தான் அரையிறுதியில் பிரேசில் வீரர்களை இவ்வளவு சிறப்பாக விளையாட வைத்துள்ளது. எங்கள் அணியின் முன்களம், பின்களம் என அனைத்து வீரர்களின் ஆட்டமும் வியப்பளிக்கும் வகையில் இருந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT