Published : 16 May 2014 10:00 AM
Last Updated : 16 May 2014 10:00 AM
இந்தியாவில் ஹாக்கி என்பது ஏழைகள் மற்றும் பாவப்பட்ட மனிதர்களின் விளையாட்டாக மாறிவிட்டது என்று முன்னாள் வீரரும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவருமான பல்வீர் சிங் சீனியர் வேதனையுடன் கூறியுள்ளார்.
1948, 1952, 1956-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் பல்வீர் சிங் இடம் பெற்றிருந்தார். 1975-ல் உலகக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராகவும் அவர் இருந்தார். இப்போது இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து தோல்விகளையே அதிகம் சந்தித்து வருகிறது. ஒலிம்பிக் பதக்கம் என்பது எட்டாக் கனியாகவே மாறிவிட்டது.
சர்வதேச ஹாக்கி உலகில் மூடிசூடா மன்னனாக விளங்கிய இந்திய அணி, தான் வாழும் காலத்திலேயே மோசமான நிலையை சந்தித்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று 90-வயதாகும் பல்வீர் சிங் கூறியுள்ளார்.கிரிக்கெட்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஹாக்கி மாற்றான் தாய் மனப்பான்மையுடன்தான் நடத்தப்படுகிறது. பாவப்பட்ட மனிதர்கள்தான் ஹாக்கி விளையாடுவார்கள் என்ற நிலை இந்தியாவில் ஏற்பட்டுவிட்டது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஹாக்கியில் அசைக்க முடியாத ஜாம்பவானாக ஒரு காலத்தில் இந்திய அணி விளங்கியது. பின்பு அந்த நிலை சிறிது சிறிதாக மாறி இப்போது நிலைமை மோசமாகிவிட்டது. இந்திய ஹாக்கி அணியை மீண்டும் பொற்காலத்துக்கு அழைத்துச் செல்ல தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும். ஹாக்கியின் இந்த மோசமான நிலைக்காக எந்த ஒரு தனிநபரையும் குற்றம்சாட்ட நான் விரும்பவில்லை.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறுகிறேன். இந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பது தவறு என்று கூறவில்லை. அவர்கள் திறமையானவர்கள்தான். ஆனால் அவர்களுக்கும் நமது வீரர்களுக்கும் இடையே தகவல்தொடர்பு பிரச்சினை இருப்பது பின்னடைவாக அமைகிறது என்றார் பல்வீர் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT