Published : 28 May 2014 09:42 PM
Last Updated : 28 May 2014 09:42 PM

ரெய்னா, ஹஸ்ஸி உதவியுடன் மும்பையை வெளியேற்றியது சென்னை

மும்பைக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியை சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறியது. அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் போட்டியில் பஞ்சாப் அணியை சந்திக்கவுள்ளது.



கடைசி வரை களத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா, டேவிட் ஹஸ்ஸி இணை வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தது. 55 பந்துகளை சந்தித்த இந்த ஜோடி, 89 ரன்களைக் குவித்தது. இதில் ஹஸ்ஸி 40 ரன்களும், ரெய்னா 46 ரன்களும் எடுத்திருந்தனர்.

174 ரன்களை விரட்டிய சென்னை அணிக்கு ஸ்மித் மற்றும் ப்ளெஸ்ஸி இணை சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். பவர்ப்ளே முடியும்போது சென்னை 60 ரன்களைக் குவித்திருந்தனர். ஹர்பஜன் வீசிய 7-வது ஓவரில் அடுத்தடுத்து ஸ்மித்தும், ப்ளெஸ்ஸியும் வெளியேற, சென்னை பின்னடைவைச் சந்தித்தது. களத்தில் ரெய்னாவுடன் இருந்த மெக்கல்லம் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள் அடக்கம்.

தொடர்ந்து களமிறங்கிய டேவிட் ஹஸ்ஸி பதட்டமின்றி மும்பை பந்துவீச்சை எதிர்கொண்டார். ரெய்னாவும் தன் பங்கிற்கு ஓவருக்கு ஒரு பவுண்டரி, அல்லது சிக்ஸர் என பந்தாடினார். ரெய்னா 22 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஐபிஎல் தொடரில் 400 ரன்களைக் கடந்தார். இதுவரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ள ரெய்னா, தொடர்ந்து 7-வது முறையாக 400 ரன்களைக் கடக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஸ்ஸி, ரெய்னா இணை, மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி ஆடி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 15-வது மற்றும் 16-வது ஓவர்களில், முறையே 14 மற்றும் 20 ரன்கள் வர, வெற்றிக்கு மிக அருகில் சென்னை அணி சென்றது. ரெய்னா 29 பந்துகளில் அரை சதம் தொட்டார் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்).

முடிவில் 18.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை தொட்டு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை சென்னை வீழ்த்தியது. ஹஸ்ஸி 29 பந்துகளில் 40 ரன்களும், ரெய்னா 33 பந்துகளில் 54 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பையை வெளியேற்றிய சென்னை, ப்ளேஆஃப் சுற்றில், இன்றைய முதல் ப்ளேஆஃப் போட்டியில் தோல்வி கண்ட பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அந்தப் போட்டியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டியில் கொல்கத்தாவைச் சந்திக்கும்.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த மைதானத்தில் இலக்கை விரட்டுவதே சாதகமாக இருக்கும் என்று கேப்டன் தோனி தெரிவித்தார். களமிறங்கிய மும்பையின் துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் மைக்கல் ஹஸ்ஸி, நிதனமான ஆட்டத்தை ஆரம்பித்தனர். 5 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருக்க, பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 19 ரன்கள் எடுக்கப்பட்டது.

மும்பையின் அதிரடி தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் என நீடித்தது. 10-வது ஓவரில் ஜடேஜா, ஹஸ்ஸியை 39 ரன்களுக்கு வெளியேற்றினார். சென்ற போட்டியில் மும்பையின் வெற்றிக்கு காரணமாய் இருந்த கோரே ஆண்டர்சன், தான் சந்தித்த இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விளாசினார். மேலும் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் எடுத்தாலும், அஸ்வின் வீசிய பந்தில், பவுண்டரிக்கு அருகில் கேட்ச் கொடுத்து 20 ரன்களுக்கு ஆண்டர்சன் வீழ்ந்தார் (10 பந்துகள், 1 பவுண்டரி, 2 சிக்ஸர்). தொடர்ந்து சென்னை பந்துவீச்சாளர்களை திணறடித்த சிம்மன்ஸ் 36 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

67 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவின் பந்தை சிக்ஸருக்கு வீச முயற்சித்த சிம்மன்ஸ் லாங் ஆன் பகுதியில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் (44 பந்துகள், 5 பவுண்டரி, 4 சிக்ஸர்) . அடுத்த ஓவரிலேயே ரோஹித் சர்மாவும் 20 ரன்களுக்கு மோஹித் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

18-வது ஓவர் முடியும் வரை பொறுமையாக ஆடிய பொல்லார்ட், நேரா வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரியைத் தாண்டி சிக்ஸருக்கு அனுப்பினார். 3-வது பந்து பவுண்டரிக்கு விரட்டிய பொல்லார்ட், அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு விளாச முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த தாரே முதல் பந்திலேயே வீழ்ந்தார்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் ராயுடுவை மோஹித் சர்மா வீழ்த்த ஒரு கட்டத்தில் 180 ரன்களை தாண்டும் மும்பையின் கனவு தகர்ந்தது. தொடர்ந்து பிரவீன்குமாரும் வெளியேற, எட்டு விக்கெட்டுகளை இழந்தது மும்பை. கடைசி பந்தில் ஹர்பஜன் அடித்த சிக்ஸரால் அணியின் ஸ்கோர் 173 ரன்களை எட்டியது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அடுத்த ப்ளேஆஃப் போட்டியில், இன்றைய முதல் ஆட்டத்தில் தோற்ற பஞ்சாபை சந்திக்க வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x