Published : 17 Jun 2015 03:24 PM
Last Updated : 17 Jun 2015 03:24 PM
வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் தொடங்குவதையடுத்து அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் சுரேஷ் ரெய்னா கூறும்போது, “எதிரணியினரை ஒருபோதும் எளிதாக எடைபோட மாட்டோம். ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் பிறகு தற்போது முழு டெஸ்ட் அணி வந்ததையடுத்து முழு ஒருநாள் போட்டி அணியும் களத்தில் இறங்க தயாராகவுள்ளது. சமீபமாக வங்கதேசம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, இதுவே இந்தத் தொடரை எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத வைக்கிறது.
உலகக் கோப்பை எங்களுக்கு ஏற்பட்ட அழுத்தம் வேறு வகையானது. ஆனாலும் நாட்டுக்காக ஆடும் போது ஒவ்வொரு போட்டியுமே அழுத்தம் கொடுக்கக் கூடியதே. சிறப்பாக விளையாடி நாட்டுக்கு வெற்றி பெற்றுத்தருவதே முக்கியம்.
உலகக் கோப்பையில் வங்கதேச பவுலர் தக்சின் அகமது சிறப்பாக பந்துவீசினார். மேலும் மஷ்ரபே மோர்டசா, தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் போன்ற வீரர்களும் உள்ளனர். நிறைய இளம் வீரர்கள் உலகக் கோப்பையில் வங்கதேச அணியில் நன்றாக விளையாடியுள்ளார்கள்.
நமது அணியைப் பொறுத்தவரையில், நிறைய ஒருநாள் போட்டிகளை வென்றுள்ளோம், ஓய்வறையில் நல்ல சூழலும், தன்னம்பிக்கையான போக்கும் நிலவுகிறது. எங்கள் வலுவுக்கேற்ப விளையாடுவதோடு, ஒவ்வொரு ஆட்டத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முயற்சி செய்கிறோம். மேலும் அனைத்து போட்டிகளையும் வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம்.
இந்த ஒருநாள் தொடரில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டது நல்ல விஷயம். மழையால் ஆட்டங்கள் நிறைய பாதிக்கப்படும்போது கூடுதல் நாள் ஒதுக்குவதே சிறந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT