Published : 17 Jun 2015 02:59 PM
Last Updated : 17 Jun 2015 02:59 PM

கோப்பா அமெரிக்கா: உருகுவேயை போராடி வீழ்த்தி அர்ஜெண்டினா முதல் வெற்றி

சிலியில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா தென் அமெரிக்க கால்பந்து தொடரின் பி-பிரிவு போட்டியில் உருகுவே அணியை மிகவும் போராடி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வென்றது.

பராகுவே அணி அன்று கற்பித்த பாடத்திலிருந்து மீண்ட அர்ஜெண்டினா, செர்ஜியோ அகுயெரோவின் இடைவேளைக்குப் பிறகான கோலினால் வெற்றி பெற்றது. உருகுவே அணி அர்ஜெண்டினாவை பெரும்பாடு படுத்தியது என்றே கூற வேண்டும்.

உருகுவே தனது அபாரமான தடுப்பாட்டத்தினால் அர்ஜெண்டினாவின் முயற்சிகளை தடுத்து வெறுப்பேற்றியது.

ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் நடுக்களத்தில் லயோனல் மெஸ்ஸியின் அபாரமான ட்ரிப்ளிங்கினால் பந்து ஜேவியர் பாஸ்டோரிடம் வந்தது. ஆனால் பாஸ்டோருக்கு நெருக்கடி அதிகமானது ஆனால் அதனை அவர் அபாரமான ஆட்டத்தினால் எதிர்கொண்டார். கடைசியில் உருகுவே தடுப்பாட்ட வீரர் பாய்ந்து வந்து பந்தை தடுக்கும் நேரத்தில் பாஸ்டோர் பந்தை ஸபலேட்டாவிடம் அடித்தார்.

அங்கிருந்து சற்றும் எதிர்பாராதவிதமாக ஸபலேட்டா அற்புதமான கிராஸ் ஒன்றை அடிக்க, அகுயெரோ அபாரமான டைவ் அடித்து தலையால் முட்டி ஒரே கோலை செலுத்தினார். இது உண்மையில் எங்கிருந்தோ வந்த கோல் என்றே கூற வேண்டும், நடுக்களத்தில் மெஸ்ஸியின் அபார ஆட்டம் பிறகு ஜேவியர் பாஸ்டோர் பந்தை கடத்தி எடுத்து வந்து கடைசி கணத்தில் ஸபலேட்டாவிடம் அடித்தது, அதனை அவர் துல்லியமாக பாஸ் செய்தது என்று அர்ஜெண்டீனா திடீர் எழுச்சியில் முதல் கோலை அடித்தது.

அதன் பிறகும் ஓரிரு கோல்களை அடித்து சவுகரியமாக வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் அன்று பராகுவே (2-2 டிரா) அணிக்கு எதிராக ஏற்பட்ட பிரச்சினைகள் உருகுவே அணிக்கு எதிராக இன்றும் தொடர்ந்தது. 'கில்லர் இன்ஸ்டிங்க்ட்' என்பது அர்ஜெண்டினா அணியிடம் இல்லை.

உருகுவே இருமுறை கோல் அடிக்க அச்சுறுத்தியது. ஆனால் அர்ஜெண்டின வீரர்கள் ஜேவியர் மஸ்செரானோ மற்றும் நிகோலஸ் ஓட்டாமெண்டி ஆகியோர் முயற்சியைத் தடுத்தனர்.

ஒரு முறை டீகோ ரோலான் என்ற உருகுவே வீரர் ஒரு சுலபமான கோல் வாய்ப்பைத் தவற விட்டார்.

தனித்தனியான தருணங்களை நம்பி அர்ஜெண்டினா அணி இருந்ததே தவிர, அதன் ஆட்டத்தின் போக்கிலேயே ஏற்படும் ஒரு ஒத்திசைவான ஓட்டம் இல்லை. உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் உருகுவே அணிக்கு எதிராக போராடியது அர்ஜெண்டீனா.

உருகுவே அணியும் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தி எதிர்த்தாக்குதல் ஆட்டத்தில் சோடை போனது. கிடைத்த ஒரு நல்ல கோல் வாய்ப்பையும் 75-வது நிமிடத்தில் டீகோ ரோலான் தவற விட்டார்.

ஆனாலும் அர்ஜெண்டினாவின் அகுயெரோ அடித்த அந்த கோல் உண்மையில் ஒரு சிறப்பான ஒட்டுமொத்த அணிச்சேர்க்கையின் ஆட்டத்தின் பலன் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஜேவியர் பாஸ்டோரின் போராட்டம், அதன் பிறகு அவர் ஸபலேட்டாவிடம் பந்தை அடித்தது, அவரது அற்புதமான கிராஸ் மற்றும் கடைசியில் அகுயெரோவின் கோலுக்கான பாய்ச்சல் என்று இந்த ஒரு கணத்திற்காகவே அர்ஜெண்டீனா காத்திருந்தது என்றே கூற வேண்டும்.

மற்றபடி அர்ஜெண்டினா அணியின் ஆட்டத்தில் ஒரு ஆக்ரோஷ ஓட்டமோ, போக்கோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் மேலும் சோகம் என்னவெனில் அகுயெரோ காயமடைந்தார் என்பதே. தோள்பட்டை காயம் காரணமாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x