Last Updated : 27 Jun, 2015 07:15 PM

 

Published : 27 Jun 2015 07:15 PM
Last Updated : 27 Jun 2015 07:15 PM

பெனால்டி முறையில் கொலம்பியாவை 5-4 என்று வீழ்த்தி அரையிறுதியில் அர்ஜெண்டினா

கோப்பா அமெரிக்கா கால்பந்துப் போட்டித் தொடர் காலிறுதிப் போட்டியில் கொலம்பியா அணியை பெனால்டி முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.

கார்லோஸ் டெவேஸ் வெற்றிக்கான பெனால்டி கிக்கை அடித்தார். ஆட்டம் அதன் முழு நேரத்தில் எத்தரப்புக்கும் கோல் இன்றி முடிவடைந்தது. ஆனால் கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினா தடுத்த கோல்களுக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முழு நேர ஆட்டத்தில் மெஸ்ஸி, அகுயெரோ, மஸ்செரானோ ஆகியோருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. கொலம்பிய வீர்ர் 3 பேருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

கொலம்பியா கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா மிகப்பெரிய பார்மில் இருந்தார். அர்ஜெண்டினாவும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவற விட்டனர். அர்ஜெண்டினா கோப்பையை வென்றால் அது சாதனையை சமன் செய்யும் 15-வது வெற்றியாக அமையும். பிரேசில், பராகுவே அணி மோதும் காலிறுதியில் வெல்லும் அணியை அர்ஜெண்டினா அரையிறுதியில் சந்திக்கவுள்ளது.

ஆட்டம் தொடங்கி 5-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வேக வீரர் ஆஞ்செல் டி மரியா இடது புறம் அருமையான திறமையைக் காட்டினார். அவர் ஒரு மூவில் ஜேவியர் பாஸ்டருக்கு ஒரு பந்தை அடிக்க, அவர் சரியாக அதனை அடிக்க முடியாமல் சொத்தையாக அடிக்க கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினா அதனைத் தட்டி விட்டார், ஆனால் கார்னர் கிடைத்தது. அதிலும் ஒன்றும் பெரிதாக நிகழவில்லை.

தொடர்ந்து அர்ஜெண்டினா ஆதிக்கம் செலுத்த இடது புறம் டி மரியா தொடர்ந்து அபாரமாக ஆடிவந்தார். மீண்டும் அவர் பந்தை அகுயெரோவுக்கு கிராஸ் செய்ய தலையால் முட்டிய பந்து கோலுக்கு மேலாக சென்றது. தொடர்ச்சியாக அர்ஜெண்டினா கடுமையாக கொலம்பியாவுக்கு நெருக்கடி கொடுக்க கொலம்பிய பயிற்சியாளர் ஸ்ட்ரைக்கர் டியோஃபிலோவுக்கு பதிலாக நடுக்கள வீரர் எட்வின் கார்டோனாவை களமிறக்கினார்.

ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினோவின் தூய திறமையினால் மட்டுமே அந்த அணி தப்பியது. அகுயெரோ, பாஸ்டரின் கிராஸை அபாரமாக கோலுக்குள் அடிக்க கீப்பர் ஆஸ்பினோ அதனை காலால் தடுத்தார், பந்து மீண்டும் லயோனல் மெஸ்ஸியிடம் வர அவர் பாயிண்ட் பிளாங்க் நிலையில் தலையால் பந்தை முட்ட அதனையும் தள்ளிவிட்டார், அதாவது முதல் முறை காலால் தடுத்த பிறகு சுதாரித்து லயோனல் மெஸ்சிக்கும் கோல் வாய்ப்பை மறுத்தார் ஆஸ்பினோ.

இடைவேளைக்கு முன்னதாக கொலம்பிய தடுப்பாட்ட வீரர் கிரிஸ்டியன் ஸபட்டா பெரிய தவறு செய்தார். ஆனாலும் இம்முறையும் கோல் கீப்பர் ஆஸ்பினோ கைகொடுத்தார். அதாவது, இடது புறத்திலிருந்து அயராது தாக்குதல் தொடுத்த டி மரியாவின் கிராஸை இவர் தடுக்க முயல பந்து செல்ஃப் கோலாகியிருக்கும். ஆனால் ஆஸ்பினோவுக்கு அலாதியான ரிப்ளெக்ஸ், அதனை தடுத்தார். இடைவேளையின் போது இரு அணிகளும் 0-0 என்று இருந்தன.

இடைவேளைக்குப் பிறகு கொலம்பியாவுக்கு கார்னர் கிடைக்க ஜேம்ஸ் ரோட்ரிக்ஸின் ஷாட்டை ஜேக்சன் மார்ட்டினேஸ் சரியாக தலையால் முட்டவில்லை, இதனால் அர்ஜெண்டின கோல் கீப்பர் ரொமேரோ எளிதில் தடுத்தார்.

அதன் பிறகு அகியுரோ மற்றும் பாஸ்டர் உள்ளே செல்ல டெவேஸ் மற்றும் எவர் பனேகா களம் கண்டனர். ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் இருக்கும் போது பனேகா கோலுக்கு 25 அடிகள் முன்னாலிலிருந்து ஒரு பயங்கர உதை உதைத்தார். பந்து கோல் போஸ்டைத் தாக்கியது.

பிறகு ஆட்டம் முடியும் தருணத்தில் அர்ஜெண்டினா அதிக நெருக்கடி கொடுத்தது. கடைசியில் கூட டெவேஸ் ஷாட் ஒன்று அதிர்ஷ்டவசமாகவே தடுக்கப்பட்டது.

ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது, இதில் கொலம்பிய வீரர்கள் யுவான் ஜுனைகா, மார்கஸ் ரோஜோ, ஜெய்சன் மொரில்லோ ஆகியோர் பெனால்ட்டியில் சொதப்பி கோல் வாய்ப்பைக் கோட்டைவிட கடைசியில் அர்ஜெண்டினாவின் டெவேஸ், சுவர் ஆஸ்பினோவைக் கடந்து வெற்றிக்கான கோலை அடித்தார். அர்ஜெண்டின அரையிறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x